என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம்.
    • விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட கோரி கிராம மக்கள் போராட்டம்.

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்தது. பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

    இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா எனவும், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கூறி முழக்கமிட்டனர்.

    • விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் உலக மகளிர் தின விழா அன்று மார்ச் 2023-ல் வழங்கப்பட உள்ளது.

    மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    10.12.2022-க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் இரு பிரதிகளை நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
    • ஊத்துக்காடு கிராமத்திற்கு விரைந்து சென்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்று கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சமாதானம் அடையாததால் காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், ஆகியோர் ஊத்துக்காடு கிராமத்திற்கு விரைந்து சென்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மருத்துவன்பாடி கிராம சாலையில் நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை உத்திரமேரூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூரை அடுத்த மருத்துவன்பாடி கிராமம் அருகே இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை மர்ம நபர்கள் வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மருத்துவன்பாடி கிராம சாலையில் நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை உத்திரமேரூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த ருத்ரா என்ற ருத்ரகுமார் (வயது 28), அண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற அண்ணாத்தூர் மணி (26) மற்றும் எடமச்சி பகுதியை சேர்ந்த தமிழ்மணி (23) திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) என்பதும் தெரிய வந்தது.

    இதில் ருத்ரா, மணிகண்டன் இருவரும் 2 கொலை வழக்குகள் உள்பட 12 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த உத்திரமேரூர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது.
    • விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

    புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 115-வது நாளாக நீடித்து வருகிறது.

    பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் சேவையை பரந்தூர் வரை நீடிப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய விமான நிலையம் வருகை காரணமாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

    இதனை கணக்கிட்டு இப்போதே ரியல் எஸ்டேட் அதிபர்கள், பெரும் முதலாளிகள் கிராம மக்களிடம் நிலத்தை மொத்தமாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 லட்சமாக இருந்த 600 சதுர அடி நிலம் தற்போது ரூ.10 லட்சம் வரை விலை போகிறது. இந்த விலையை தாண்டியும் போகும் என்பதால் பலர் தங்களது நிலத்தை விற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    பரந்தூர் விமான நிலையம் வருகையால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல இடங்களில் இப்போதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குடியிருப்பு பிளாட்டுகள் விற்பனை விளம்பரத்தை அதிகரித்து உள்ளனர். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை விற்பது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தடையில்லா சான்றிதழ் பெறாமல் எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மாடம்பாக்கம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
    • கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள படப்பை அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் வெங்கடேசன்.

    மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் மாடம்பாக்கம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவருடன் 3-வது வார்டு உறுப்பினர் சத்யாவும் சென்றார்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் 9 பேர் வந்தனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் 3 பேர் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே இறங்கி ஒரே நேரத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு 'டமார்' என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    வெடிகுண்டு வீச்சு தாக்குதலால் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் சத்யா ஆகியோர் நிலை குலைந்தனர். இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்புவதற்காக இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

    அப்போது வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்ட 9 பேரும் வெங்கடேசனை விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். வெங்கடேசனை வெட்டிக்கொன்ற கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பி ஓடி தலைமறைவானது.

    ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மாடம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்துள்ளார். புரட்சி பாரதம் கட்சியில் இருந்த அவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகி இருந்தார்.

    இதனால் அரசியல் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியதையடுத்து மாடம்பாக்கம் பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.

    அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மாடம்பாக்கம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கொலையாளிகள் 9 பேரையும் இரவோடு இரவாக பிடித்து விட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டது. விடிய விடிய சோதனை நடத்தியும் கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. போலீசாரின் கண்ணை மறைத்து கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இருப்பினும் கொலை கும்பலை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கொலையுண்ட ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு வெங்கடேசனின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. வெங்கடேசனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். வெங்கடேசனுக்கு எதிராக அப்பகுதியில் செயல்பட்டு வந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • வீரபத்திரசாமி கோவில் வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது.
    • வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும், மேலே செல்லும் மின்கம்பியில் மரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே அன்னை இந்திராகாந்தி சாலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வீரபத்திரசாமி கோவில்.

    இந்த கோவில் வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது.

    இந்த மரம் தற்போது பட்டுபோய் உள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும், மேலே செல்லும் மின்கம்பியில் மரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் நடந்து செல்லும் இடமாக உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதலீடு செய்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனம் தற்போது வழக்குகளில் சிக்கி முடங்கி உள்ளது.
    • தெலுங்கானாவுக்கு ஜெயகணேஷை கடத்த முயன்ற சந்திரபாபு, கிரிபாபு, மகேஷ், சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜாபாத் போலீசில் ஒப்படைத்தனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (வயது 36). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தெலுங்கானா மாநிலம் அனந்தபூர் பகுதியில் உள்ள கார் தாயாரிக்கும் நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஜெய்கணேஷ் தான் சேமித்து வைத்திருந்த பல கோடி ரூபாய் பணத்தை அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வட்டி பெற்று வந்தார்.

    மேலும் நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு தன்னோடு பணிபுரிந்த நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 60 பேரிடம் இருந்து ரூ.30 கோடியை பெற்று நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

    இவர்கள் முதலீடு செய்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனம் தற்போது வழக்குகளில் சிக்கி முடங்கி உள்ளது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் முகவராக இருந்த ஜெய்கணேஷ் மூலம் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அடிக்கடி தொல்லை கொடுக்கவே ஜெய்கணேஷ் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு அய்யம்பேட்டைக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் பணத்தை வழங்கியவர்கள் பலமுறை கேட்ட பிறகும் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கானா மாநிலம் அனந்தபூர் அக்கம்பள்ளியை சேர்ந்த சந்திரபாபு ( 28) , கிரி பாபு(32) மற்றும் அவரது நண்பர்கள் மகேஷ்(28), சந்திரசேகர் (29) ஆகியோர் அய்யம்பேட்டை பகுதிக்கு வந்து ஜெயகணேஷை மடக்கிப்பிடித்து காரில் ஏற்றி தெலுங்கானாவுக்கு கடத்தி செல்ல முயன்றனர்.

    இதை பார்த்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் போலீசாரை உஷார் படுத்தியதை தொடர்ந்து போலீசார் காரை காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். காரில் கடத்தப்பட்ட ஜெயகணேஷை பேரீசார் மீட்டனர்.

    தெலுங்கானாவுக்கு ஜெயகணேஷை கடத்த முயன்ற சந்திரபாபு, கிரிபாபு, மகேஷ், சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜாபாத் போலீசில் ஒப்படைத்தனர்.

    • வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
    • வெங்கச்சேரி, மணல்மேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதனால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கச்சேரி மற்றும் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாகரலை இணைக்கும் செய்யாற்றின் குறுக்கே உள்ளே தரைப்பாலம் உடைந்தது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. தொடர்ந்து தரைப்பாலம் சேதம் அடைந்து வருவதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி வெங்கச்சேரி தரைப்பாலத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இதன் காரணமாக வெங்கச்சேரி, மணல்மேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் அனைத்தும் உத்திரமேரூர் சென்று பெருநகர் வழியாக காஞ்சிபுரம் வரும் நிலை உள்ளது. சுமார் 20 கி.மீட்டர் சுற்றி வருகிறார்கள்.

    • டேங்கர் லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெய்னுல்லா புதின் (வயது28). போலீஸ்காரரான இவர் தாம்பரம் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

    ஜெய்னுல்லா, மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ரேசன் கடை சிக்னலில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வந்த டீசல் "டேங்கர் லாரி" ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி ஜெய்னுல்லாவின் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிக்கொண்டு சிக்னல் கம்பம் மீது மோதி நின்றது.

    இதில் ஜெய்னுல்லாவுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே ஜெய்னுல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் டீசல் லாரி மோதியதில் சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக சிக்னலில் நின்ற மற்ற வாகன ஓட்டிகள் உயிர்தப்பினர். விபத்தை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவரான அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது62) என்பவரை கைது செய்தனர்.

    டேங்கர் லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கன மழை கொட்டி வருகிறது.
    • ஏரிமுழுவதும் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.

    திருவள்ளூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கன மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கையாக கடந்த வாரம் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. நேற்று 2131 கன அடியாக வந்த தண்ணீர் இன்று காலை 1003 கன அடியாக குறைந்தது. ஏரியில் இருந்த 945 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2835 மி.கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 20.91 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    ஏரிமுழுவதும் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றர்.

    புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 513 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில்2794 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 710 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • 30 அடி ஆழம் கொண்ட ஏரியில் இருந்து இரண்டு ஷட்டர் வழியாக மற்றும் கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது.
    • முதல் ஷட்டரில் 485 கன அடியும், இரண்டாவது ஷட்டரில் 200 கன அடியும் என 685 கன அடி நீர் வெளியேறுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதற்கிடையே தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் அருகே உள்ள மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரி முழுவதும் நிரம்பி வழிகிறது.

    30 அடி ஆழம் கொண்ட ஏரியில் இருந்து இரண்டு ஷட்டர் வழியாக மற்றும் கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது.

    முதல் ஷட்டரில் 485 கன அடியும், இரண்டாவது ஷட்டரில் 200 கன அடியும் என 685 கன அடி நீர் வெளியேறுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்ட பாலாறு அணைக்கட்டில் இருந்து நீர் வெளியேறி மாமண்டூர் ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் 4118 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×