search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படப்பை அருகே வெடிகுண்டு வீசி பஞ்சாயத்து தலைவர் கொலை
    X

    மாடம்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி.

    படப்பை அருகே வெடிகுண்டு வீசி பஞ்சாயத்து தலைவர் கொலை

    • மாடம்பாக்கம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
    • கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள படப்பை அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் வெங்கடேசன்.

    மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் மாடம்பாக்கம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவருடன் 3-வது வார்டு உறுப்பினர் சத்யாவும் சென்றார்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் 9 பேர் வந்தனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் 3 பேர் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே இறங்கி ஒரே நேரத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு 'டமார்' என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    வெடிகுண்டு வீச்சு தாக்குதலால் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் சத்யா ஆகியோர் நிலை குலைந்தனர். இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்புவதற்காக இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

    அப்போது வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்ட 9 பேரும் வெங்கடேசனை விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். வெங்கடேசனை வெட்டிக்கொன்ற கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பி ஓடி தலைமறைவானது.

    ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மாடம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்துள்ளார். புரட்சி பாரதம் கட்சியில் இருந்த அவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகி இருந்தார்.

    இதனால் அரசியல் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியதையடுத்து மாடம்பாக்கம் பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.

    அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மாடம்பாக்கம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கொலையாளிகள் 9 பேரையும் இரவோடு இரவாக பிடித்து விட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டது. விடிய விடிய சோதனை நடத்தியும் கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. போலீசாரின் கண்ணை மறைத்து கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இருப்பினும் கொலை கும்பலை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கொலையுண்ட ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு வெங்கடேசனின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. வெங்கடேசனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். வெங்கடேசனுக்கு எதிராக அப்பகுதியில் செயல்பட்டு வந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×