என் மலர்
காஞ்சிபுரம்
- கடை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
- வண்ண சுவர்கள், திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்ட முகப்பு சுவர் பார்வையாளர்களை பெரிதும் கவருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு, கணேஷ் நகரில் ரேசன் கடை உள்ளது. இந்த கடை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்த ரேஷன் கடையில் எந்த நேரமும் ஸ்மார்ட் கார்டு வேலை செய்யும் வகையில் வைஃபை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடை முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வழி பாதை, மழைநீர் சேகரிப்பு, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்கள் உள்ளது.
மேலும் வண்ண சுவர்கள், திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்ட முகப்பு சுவர் பார்வையாளர்களை பெரிதும் கவருகிறது.
உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் ஒதுக்கிய அனைத்து நிதியும் முழுமையாக வீணடிக்காமல் செலவு செய்து கூடுதலாகவும் தனது சொந்த பணத்தை செலவிட்டு கவுன்சிலர் கார்த்திக் இந்த ரேசன் கடை கட்ட ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காஞ்சிபுரம் கணேஷ் நகர் ரேஷன் கடை முன்மாதிரி கடையாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அதில் 2 குட்டிகள் இறந்து கிடந்தன.
- உயிருடன் உள்ள மற்ற 2 குரங்கு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது நசிருதீன் என்ற பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது உடைமைகளை 'ஸ்கேன்' செய்ததில் ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அதில் இருந்த பையை திறந்து பாா்த்தனா். அதில் பச்சை நிற கூடை ஒன்றில் 4 அரிய வகை குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, "அவை அபூர்வ வகை குரங்கு குட்டிகள். இதை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன்" என்று கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை.
மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால் அவரிடம் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அதில் 2 குட்டிகள் இறந்து கிடந்தன. 2 குட்டிகள் மட்டும் உயிருடன் இருந்தன. அதில் உயிருடன் இருந்த 2 குரங்கு குட்டிகளும், உலகிலேயே நீண்ட வாலுடன் கூடிய சிறிய குரங்கு இனமான 'பிக்மி மார்மோசெட்' என்ற வகையை சேர்ந்தவைகள் என தெரியவந்தது. இவை தென் அமெரிக்காவின் மேற்கு அமேசான் படுகையில் உள்ள மழைக்காடுகளை பூர்வீகமாக கொண்ட குரங்கினம். பிரேசில், கம்போடியா மற்றும் பெரு நாட்டிலும் காணப்படுகிறது.
இறந்து கிடந்த குரங்கு குட்டிகள், மயங்கிய இலை குரங்கு வகையாகும். இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா காடுகளில் காணப்படுகின்றன. பாலூட்டி வகையாகும். உயிருடன் உள்ள மற்ற 2 குரங்கு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கோவிலுக்கு பூட்டு போட்டு இருப்பது தெரிந்தது.
- இதைத்தொடர்ந்து கோவிலுக்கு போடப்பட்டு இருந்த பூட்டு உடைத்து திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், தும்பவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற தும்பவனம் மாரியம்மன் கோவில் உள்ளது.
அப்பகுதியில் உள்ள பலரது குடும்பங்களுக்கு இது குலதெய்வமாக உள்ளது. இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கோவிலை தும்பவனம் பகுதியில் வசிப்பவர்கள் நிர்வகித்து வந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு அறங்காவலர் குழுவையும் நியமித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே கோவிலுக்கு பூஜைக்காக பூசாரி சென்ற போது வெளிப்புற கேட்டில் மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பரபரப்பு பேனர் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கோவிலுக்கு பூட்டு போட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கோவிலுக்கு போடப்பட்டு இருந்த பூட்டு உடைத்து திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு பூட்டு போட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அறங்காவலர்கள் நியமனத்தில் உள்ள சிலர் குறித்தும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதை பெற தகுதியுள்ளவர்.
- உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் அடங்கும். இந்த பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை காப்பதில், வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதை பெற தகுதியுள்ளவர்.
2023-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.
மேலும், உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
- காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை-பெங்களூரு தேசிய நெடுச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறைனர் அகற்றி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற முடிவு செய்தனர். இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இந்திரா காந்தி சிலையை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
சிலையின் அடிபாகத்தை இடித்து கொண்டு இருந்தனர். இது குறித்து தகவல் காட்டு தீ போல அந்த பகுதியில் பரவியது.
தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சியினர் அங்கு குவிந்து சிலையை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். அங்கு பதற்றம் நிலவியது.
ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குள் ஏன் சிலையின் பீடத்தை உடைத்தீர்கள் என கண்டித்தார். பின்னர் சிலையை அகற்றும் பணியை நிறுத்துமாறு கூறினார்.
இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிலையை அகற்றும் பணியை நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவியது.
இந்த இந்திரா காந்தி சிலையை முன்னாள் பிரதமர் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 60) மற்றும் தேவராஜ் (55). இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக புஷ்கர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மணல் இறங்கியது. மேலும் அருகில் காய்ந்த பூமாலை, ஊதுபத்திகள் கிடந்தது.
- அந்த இடத்தில் புஷ்கரின் உடலை உறவினர்கள் இங்கு புதைத்து சென்று இருப்பது தெரிந்தது.
காஞ்சிபுரம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் புஷ்கர் (வயது62). இவர் குடும்பத்துடன் காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் அடுத்த நெய்குப்பம் பகுதியில் தங்கி கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த மாதம் பணியில் இருந்த போது தொழிலாளி புஷ்கர் மாரடைப்பால் இறந்து போனார். இதையடுத்து உடலை பீகாருக்கு கொண்டு செல்லாமல் இங்கேயே புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.
அவர்கள் புஷ்கரின் உடலை புதைக்க அருகில் உள்ள ஊத்துக்காடு மற்றும் கித்திரிப்பேட்டை பகுதியில் அனுமதி கேட்டனர். ஆனால் அந்த ஊராட்சி தலைவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் புஷ்கரின் உடலுடன் இருந்த உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் நீரேற்றும் குழாய் அருகே திறந்த வெளியில் புதைத்து சென்று விட்டனர். இது அப்பகுதி மக்களுக்கு உடனடியாக தெரியவில்லை.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக புஷ்கர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மணல் இறங்கியது. மேலும் அருகில் காய்ந்த பூமாலை, ஊதுபத்திகள் கிடந்தது. இதன் பின்னரே அந்த இடத்தில் புஷ்கரின் உடலை உறவினர்கள் இங்கு புதைத்து சென்று இருப்பது தெரிந்தது.
குடிநீர் குழாய் அருகே உடல் புதைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடலை தோண்டி எடுத்து மயானத்தில் புதைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெய்குப்பம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மரணம் அடைந்த பீகார் தொழிலாளியின் உடலை புதைக்க இடம் கொடுக்காமல் ஊத்துக்காடு மற்றும் கித்திரிப்பேட்டையில் தடுத்து இருப்பது வேதனைக்குரியது. இதனால் அவரது உறவினர்கள் உடலை நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் குழாய் அருகே புதைத்து சென்று விட்டனர்.
தற்போது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்குகிறது. குடிநீர் குழாயில் பாதிப்பு ஏற்படும் முன்பு உடலை தோண்டி எடுத்து சுடுகாட்டில் புதைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்ததால் இது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றனர்.
இதுகுறித்து உடலை புதைக்க இடம் அளிக்க மறுத்த ஊராட்சி தலைவர்கள் கூறும்போது, இறந்தவர்கள் உடலை புதைக்க வெவ்வேறு சாதியினருக்கு இடம் உள்ளது. இதனால் வடமாநில தொழிலாளியின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க வேண்டியது இருந்தது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் இல்லாமல் வேறு இடத்தில் உடலை அடக்கம் செய்ய கூறியிருந்தோம்" என்றனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். தொழிலாளி புஷ்கரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது.
- திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:
வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏரிகள் முழு அளவை எட்டி உள்ளன.
மழை விட்டு விட்டு பெய்து வந்தாலும் கடும் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. மழைக்காலத்தில் பனியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு வானிலை மாறி உள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது. சாலைகளே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து இருந்தது.
கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரி கரை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஊட்டியை போல் மாறியது.
இதனால் பொதுமக்கள் கடும் குளிரால் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. எங்கும் பார்த்தாலும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்பட்டது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் பனி மூடி குளிர் பிரதேசமாக காட்சியளித்தது.
இதன் காரணமாக திருவள்ளூரில் முக்கிய சாலையான சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்றன.
சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கூட தெரியாத அளவிற்கு பனி படர்ந்து இருந்தது.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் காலை 8 மணி வரை பனி நீங்காததால் எந்த நடைமேடையில் ரெயில் வருகிறது என தெரியாமல் மேம்பாலத்தின் மீது நின்றபடி பயணிகள் பார்த்துவிட்டு அதன் பின் நடைமேடைகளுக்கு சென்றனர்.
கடும் பனி மூட்டம் நீடித்தாலும் சில இடங்களில் இன்றும் லேசான சாரல் மழை பெய்தது.
- ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற டிரம்மர் மாயமாகி இருந்தார்.
- தலைமறைவான வீட்டின் காவலாளி மற்றும் அவருடன் தங்கி இருந்த உறவினர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி, 12-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். நடிகர்.இவர் எல்லாம் அவன் செயல் திரைப்படத்தில் நடித்து உளளார். இவர் மனைவி ராஜி மற்றும், மகள், மருமகனோடு வசித்து வருகிறார்.
கடந்த 10-ந் தேதி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ராஜியை கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். பின்னர் பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற டிரம்மர் மாயமாகி இருந்தார். கொள்ளை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு காவலாளி ரமேசுடன் அவரது உறவினர்கள் 2 பேர் நேபாளத்தில் இருந்து வந்து தங்கி உள்ளனர்.
கொள்ளை நடந்த நாள் அன்று காவலாளி ரமேஷ் விடுப்பு எடுத்து வெளியே சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவருடன் தங்கிஇருந்த உறவினர்களும் மாயமாகி இருப்பதால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, வட மாநிலத்தில் தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் தலைமறைவான வீட்டின் காவலாளி மற்றும் அவருடன் தங்கி இருந்த உறவினர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- உள்ளாவூர் ஊராட்சியில் சென்னை எஸ்.டி.என்.பி.வைணவ மகளிர் கல்லூரி சமூக பணி துறையில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.
- பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் சென்னை எஸ்.டி.என்.பி.வைணவ மகளிர் கல்லூரி சமூக பணி துறையில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.
இதில் இளைஞர்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பழக்கம் எதிர்ப்பு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். முகாமின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை உள்ளாவூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தொடங்கி வைத்தார். இதில் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர். எம் ஆஸ்பத்திரியில் இருந்து மக்கள் நல மருத்துவத்துறை டாக்டர் சந்தியா தலைமையில் சிறப்பு டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, தோல், எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் கிராமப்புற மக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 300-க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் லலிதா, சாந்தி, ஏகவல்லி, பானுமதி, சபாபதி, ஊராட்சி செயலாளர் முனுசாமி, சமூக பணித்துறை தலைமை பேராசிரியை பிரியதர்ஷினி, துணை பேராசிரியை வினு, மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அருண்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசியிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). என்ஜினீயர். நேற்று முன்தினம் அருண்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசியிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருண்குமார் என்ஜினீயரிங் படித்தும் வேலை இல்லாமல் இருந்ததாகவும் இதனால் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






