search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ஓடு பாதையில் சென்ற போது கத்தார் விமானத்தில் என்ஜின் கோளாறு
    X

    சென்னை விமான நிலையத்தில் ஓடு பாதையில் சென்ற போது கத்தார் விமானத்தில் என்ஜின் கோளாறு

    • ஓடுபாதையில் சென்ற போது சரியான நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்து நிறுத்தியதில் 144 பயணிகள் உயிர் தப்பினர்.
    • விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3.20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த விமானம் தினமும் அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதேபோல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு கத்தார் விமானம் வந்தது.

    இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்ல 144 பயணிகள் அனைத்து பரிசோதனைகளும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

    அதிகாலை 3.50 மணிக்கு விமானம் புறப்பட்டு, ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விட்டு விமானத்தை ஓடு பாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். விமான என்ஜினை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி வரை விமானத்தை சரி செய்ய முடியவில்லை. விமான பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது.

    விமானத்தின் என்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு பின்னர் விமானம் கத்தார் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஓடுபாதையில் சென்ற போது சரியான நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்து நிறுத்தியதில் 144 பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் இன்று காலை சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×