என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை, அதே போல திருப்பருத்திகுன்றம், ஏனாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றினால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்திருக்கிறது.
- காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் விழுந்திருந்த மரத்தினை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மழையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்றும் நீடித்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை பஸ் நிலையம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை விடிய விடிய பெய்தது. இன்று காலையிலும் கனமழை தொடர்ந்து நீடித்தது.
தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
நேற்று இரவு துண்டிக்கப்பட்ட மின்வெட்டு காலை வரை வரவில்லை. காஞ்சிபுரம் நகரில் கலெக்டர் அலுவலகம், மூங்கில் மண்டபம் கலெக்டர் வீடு உள்ள பகுதி ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்துள்ள நிலையில் அதனை போர்க்கால அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியன இணைந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் காற்றில் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம், பஸ் நிலையம், ரெயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலை, அதே போல திருப்பருத்திகுன்றம், ஏனாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றினால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்திருக்கிறது.
காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் விழுந்திருந்த மரத்தினை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மழையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மரம் விழுந்ததன் காரணமாக அச்சாலையில் சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது அவை சீராகி வாகனம் சென்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 18.9 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு செ.மீட்டரில் வருமாறு:-
காஞ்சிபுரம்-18.9, வாலாஜாபாத்-9.18, உத்திரமேரூர்-13.8, ஸ்ரீபெரும்புதூர்-13.3, குன்றத்தூர்-14.7, செம்பரம்பாக்கம்-10.7.
- கடந்த வாரம் 315 ஏரிகள் நிரம்பி இருந்த சூழ்நிலையில் தற்போது 353 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் காரணமாக ஒரே நாளில் மட்டும் 33 ஏரிகள் நிரம்பி உள்ளன.
காஞ்சிபுரம்:
ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 919 ஏரிகள் இருக்கிறது. கடந்த வாரம் 315 ஏரிகள் நிரம்பி இருந்த சூழ்நிலையில் தற்போது 353 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் காரணமாக ஒரே நாளில் மட்டும் 33 ஏரிகள் நிரம்பி உள்ளன. 262 ஏரிகளில் 75 சதவீதமும், 242 ஏரிகளில் 50 சதவீதமும், 51 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் உள்ளது.
- பலத்த மழை பெய்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- பொதுமக்கள் கவனமுடன் இருக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
காஞ்சிபுரம்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து பலத்த மழை பெய்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவானதை அடுத்து கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
புயல் காரணமாக இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டி (மொத்த உயரம் 24 அடி) நிரம்பி உள்ளது. கனமழை நீடித்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி உபரிநீரை மீண்டும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதையடுத்து தண்ணீர் வெளியேறும் அடையாறு ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் கவனமுடன் இருக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். ஏரியில் தற்போது 2,695 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
இன்று காலை நிலவரப் படி ஏரிக்கு நீர்வரத்து 709 கனஅடியாக உள்ளது. பலத்த மழை பெய்தால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதேபோல் பலத்த மழை காரணமாக புழல்-பூண்டி ஏரிகளில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் 16.89 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,386 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 140 கனஅடி தன்ணீர் வருகிறது. பூண்டி ஏரியில் இருந்தும் 100 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. ஏற்கனவே பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. எனவே ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீரை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 595 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,231 மி.கனஅடிக்கு நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 539 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 36 கன அடி மட்டும் தண்ணீர் வருகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது. புழல்-பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படுவதை தொடர்ந்து கரையோர மக்கள் பாது காப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ் அறிவுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏரிக்கரை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து உள்ளனர். ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் இருந்தும் ஒரே நாளில் உபரிநீர் திறக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
- காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் 11 அலுவலர்கள் கொண்ட 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முதல் விடிய விடிய கொட்டிதீர்த்தது.
இந்த நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 11 அலுவலர்கள் கொண்ட 21 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்ற மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். தொடர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஆலந்தூர்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு கடப்பா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இரவு 9:15 மணிக்கு மும்பை செல்லும் ஸ்பைஜெட் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்த செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோல் இலங்கையில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து காலை 9:35 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5:50 மணிக்கு கடப்பாவிலிருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காற்று, மழையின் வேகத்தை பொறுத்தும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது தாமதமாக பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்று, கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புயல் மற்றும் மழை வெள்ள மீட்பு பணிக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் பலத்த காற்று, கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுக்களில் வருவாய் காவல், உள்ளாட்சி மண்டல்க குழுக்கள் மின்சாரம் உள்ளிட்ட 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றிருப்பர். இந்த குழுவினர் மழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.
21 மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்:- காஞ்சிபுரம் மாநகராட்சி ஜி.கண்ணன் (ஆணையர் காஞ்சிபுரம்)- 7397372823. காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம் ஏழுமலை (துணை ஆட்சியர்) -9677053981, பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்த வாடி பிரகாஷ்வேல் (மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்)-7338801259.
வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் பிரமிளா (நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம்)-7402606004, தென்னேரி சுமதி (தனித்துணை ஆட்சியர்) -9840479712, மாகரல்- கணேசன் (நேர்முக உதவியாளர் (வேளாண்மை)-9894215521. உத்திரமேரூர் பேரூராட்சி - ராமசந்திரன் (உதவி.செயற்பொ றியாளர்)-7402606000, திருப்புலிவனம், களியாம்பூண்டி கனிமொழி (வருவாய் கோட்டாட்சியர்) -9445000413. சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் இளங்கோவன் (இணைஇயக்குநர் வேளாண்மை)- 9842007125, திருபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் செல்வமதி (தனித்துணைஆட்சியர் (நி.எ) மண்ணூர்) -9842023432.
மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் புஷ்பா- (நேர்முக, உதவியாளர்)- 9443395125. வல்லம் மற்றும் தண்டலம் மதுராந்தகி-(சிறப்பு மாவட்ட வருவாய அலுவலர்)-7305955670.
படப்பை, மணிமாறன் (உதவி இயக்குநர்)- 7402606005, படப்பை சிவதாஸ் (உதவி ஆணையர்) -9360879271, செரப்பணஞ்சேரி மணிமங்கலம்-எம்.சத்தியா (ஆய்வுக்குழு அலுவலர்) -9566420921. கொளப்பாக்கம் (மவுலிவாக்கம், கொளுத்து வாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) பாபு மாவட்ட, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்- 9445000168.
திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து யசோதரன் (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்)- 9952227179, மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், பொழு முனிவாக்கம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, தண்டலம், கோவூர்சிக் கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்) கோபி (உதவி இயக்குநர் )-7402606006.
மாங்காடு நகராட்சி பகுதிகள் கே.கணேஷ் (கூடுதல் நேர்முக உதவியாளர்)-9840281502, குன்றத்தூர் நகராட்சி ஜெசரவணகண்ணன், (வருவாய் கோட்ட அலுவலர் திருபெரும்புதூர்)- 9444964899.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சாலைகளை அசுத்தம் செய்யும் வகையில் மாடுகள் சாணம் போட்டால் அதன் உரிமையாளர்களே அதனை அகற்ற வேண்டும்.
- பிடிப்படும் மாடுகளை கட்டி வைப்பதற்காக தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குன்றத்தூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கோவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் குன்றத்தூர் - போரூர் சாலையில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் மாடுகள் சுற்றி திரிகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்திருப்பதால் வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது இதனை தடுக்கும் விதமாக கோவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்பவர்களை அழைத்து கூட்டம் ஒன்று ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகள் பிடித்து செல்லப்பட்டு மாட்டின் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து பிடிபடும் மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சாலைகளை அசுத்தம் செய்யும் வகையில் மாடுகள் சாணம் போட்டால் அதன் உரிமையாளர்களே அதனை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பிடிப்படும் மாடுகளை கட்டி வைப்பதற்காக தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரே மோட்டார் சைக்கிளில் வடபழனியில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றனர்.
- பலியான முனியப்பனின் உடல் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆலந்தூர்:
சேலையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்கள் முனியப்பன் (வயது21).அன்புமணி (21). நண்பர்களான இருவரும் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வடபழனியில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றனர். பின்னர் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் அவர்கள்வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அன்புமணி மோட்டார்சைக்கிளை ஓட்டினார். முனியப்பன் பின்னால் அமர்ந்து இருந்தார். ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்பு மணியும், முனியப்பனும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முனியப்பன் பரிதாபமாக இறந்தார். அன்பு மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான முனியப்பனின் உடல் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- வாலிபர் ரெயில் பெட்டி மீது ஏறி நின்றபடி அருகில் சென்ற மின்கம்பியை பிடித்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில உள்ள தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நாடு முழுவதும் ஏற்றி செல்ல சரக்கு ரெயில் முனையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் சரக்கு ஏற்றி செல்வதற்காக ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென சரக்கு ரெயில் மீது சரசரவென ஏறினார். இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் ரெயில் பயணிகள் கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் வாலிபர் ரெயில் பெட்டி மீது ஏறி நின்றபடி அருகில் சென்ற மின்கம்பியை பிடித்தார்.
இதில் அவர் வாலிபரின் உடல் முழுவதும் தீப்பற்றிஎரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பதறியபடி கூச்சலிட்டனர். இதற்குள் தீ மளமளவென பரவி அந்த வாலிபர் உடல் கருகி சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். உடல் கருகிய வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான வாலிபர் யார்? மன நலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எடையூர் கிராமத்தில் பழமையான பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது.
- திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள எடையூர் கிராமத்தில் பழமையான பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு வந்த மர்ம கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி, கம்மல், மூக்குத்தி மற்றும் பீரோவில் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 20 பவுன் நகை, வெள்ளி கொலுசு, உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து டிரைவர் சுப்பிரமணி மற்றும் கண்டக்டர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் புறப்பட்டனர்.
- பஸ் கண்ணாடி உடைந்து விழுந்ததை கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து டிரைவர் சுப்பிரமணி மற்றும் கண்டக்டர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் புறப்பட்டனர்.
கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது போக்குவரத்து நெரிசலால் பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் பஸ்சை வழிமறித்து ஆர்ன் அடித்தால் வழிவிட முடியாதா என்று கேட்டிருக்கின்றனர்.
இதையடுத்து டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பட்டாக்கத்தியை கொண்டு பஸ்சின் முன்புற கண்ணாடியை தாக்கியதில் பஸ் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். பஸ் கண்ணாடி உடைந்து விழுந்ததை கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், சந்தேகம்படும்படியான சில நபரின் பெயர்களை கேட்டு தெரிந்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர்.
- 7 பொக்லைன் எந்திரங்கள், 2 லாரி போன்றவற்றை போலீஸ் நிலையம் அருகே போலீசார் நிறுத்தி வைத்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கட்ரம்பாக்கம் பகுதியில் சவுத்ரி கால்வாயில் தொடர்ந்து மண் திருடப்படுவதாக மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி மற்றும் சோமங்கலம் போலீசாருக்கு காட்ரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கஜேந்திரன் தெரிவித்தார். அதன்பேரில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் காட்ரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் ஏரி கால்வாய் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் திருடியபோது 7 பொக்லைன் எந்திரங்கள், 2 டிப்பர் லாரி போன்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு 6 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த அரசகுமார் (வயது 29), பழனி (36), மகேந்திரன் (38), செல்வகுமார் (35), சக்திவேல் (42), கோவிந்தராஜ் (51) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏரியில் மண் திருடியது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து 6 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 7 பொக்லைன் எந்திரங்கள், 2 லாரி போன்றவற்றை போலீஸ் நிலையம் அருகே போலீசார் நிறுத்தி வைத்தனர்.






