என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • மாண்டஸ் புயல் கரையை கடந்தும் தற்போது பெய்து வரும் மழையில் வெள்ளம் போல் மழைநீர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கி நிற்கிறது.
    • பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற குன்றத்தூர் ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள குமரன் நகர் பகுதியில் 2017-2018 -ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

    இந்த பூங்காவில் குழந்தைகள், மற்றும் சிறுவர்கள், விளையாடி வந்தனர். இதேபோல் உடற்பயிற்சி கூடத்தில் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர்.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்தும் தற்போது பெய்து வரும் மழையில் வெள்ளம் போல் மழைநீர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் பல லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் துருப்பிடித்து விணாகும் நிலையில் உள்ளது.

    எனவே பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற குன்றத்தூர் ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த 2015 க்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்தபாலு செட்டிசத்திரம் பகுதியில் பாலாறில் இருந்து கிளை ஆறாக வேகவதி உருவாகி காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் 9 கிலோ மீட்டர் பாய்ந்து வாலாஜாபாத் அருகே உள்ள திருமுக்கூடல் பகுதியில் மீண்டும் பாலாற்றுடன் இணைகிறது. வேகவதி ஆற்றின் மொத்தம் நீளம் 18 கிலோமீட்டர் ஆகும்.

    தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரின் வேகவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நாகலத்துமேடு, முருகன்குடியிருப்பு, தாயராம்மன்குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.

    இதையடுத்து தாழ்வான இடங்களில் வசித்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. வேகவதி ஆற்றில் 2500 கன அடி நீர் செல்வதால் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காஞ்சிபுரம் தாட்டி தோப்பு முருகன் காலனி, எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி நகர், நாகலத்து மேடு, தாயாரம்மன், குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 1000 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. 4-வது நாளாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றின் குறுக்கே இருந்த 4 தரைப்பாலங்கள் முற்றிலும் உடைந்து உள்ளன. மேலும் 5 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த 2015 க்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வேகவதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு மேல் கதிருப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்களை குடியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அந்தமானில் இருந்து சென்னை வரும் ஏழு விமானங்கள், மொத்தம் 14 விமானங்கள் வரும் 16-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் ஏழு விமானங்கள், அந்தமானில் இருந்து சென்னை வரும் ஏழு விமானங்கள், மொத்தம் 14 விமானங்கள் வரும் 16-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகள் பராமரிப்பு பணி நடப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 -ந்தேதி வரை, 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரையும், மீண்டும் 29-ந்தேதியில் இருந்து டிசம்பர் 2 -ந்தேதி வரை, மூன்று முறை 12 நாட்கள் அந்தமான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது 4-வது முறையாக நேற்று முதல் வரும் 16-ந்தேதி வரை 4 நாட்கள் மீண்டும் செய்யப்பட்டுள்ளது.

    அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமான சேவைகள் வரும் 17-ந்தேதியில் இருந்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தமான் விமான சேவைகள் கடந்த ஒன்றரை மாதத்தில், 16 நாட்கள் ரத்தாகி உள்ளன. இது பற்றி பயணிகளுக்கு முன்னதாகவே முறையான அறிவிப்பு செய்யப்படாமல், திடீரென இதுபோன்று விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • வேகவதி ஆற்றில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் ஆரப்பரித்து செல்கிறது.
    • வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வது மட்டுமின்றி குடியிருப்புகளில் மழை வெள்ளம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உபரி நீரானது வெளியேறி வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வேகவதி ஆற்றில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் ஆரப்பரித்து செல்கிறது.

    வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வது மட்டுமின்றி குடியிருப்புகளில் மழை வெள்ளம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறத்திலுள்ள தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரங்களில் மழை வெள்ளம் சூழந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை நீரும் சேர்ந்து வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக தாயார்குளம் ஆற்றங்கரையோரங்களிலுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து அந்த பகுதியில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் தீயணைப்பு மற்றும் போலீஸ்துறை மூலம் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள 2 சிறிய தரைப்பாலங்களில் ஒரு பகுதியை வெள்ளம் செல்ல ஏதுவாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் உடைத்தது.

    தொடர்ந்து வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்கவோ, அந்த பகுதியை கடந்து செல்லவோ வேண்டாம் என்றும் அவ்வாறு கடந்து செல்லக்கூடியவர்களை தடுக்கும் பொருட்டு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
    • காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மழை நீரால் முழுவதுமாக நிரம்பி மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    காஞ்சிபுரம்:

    உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதியன்று தொடங்கியது. அனந்தசரஸ் குளத்திலுள்ள நீராழி மண்டபத்தில் இருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பொதுமக்களின் தரிசனத்திற்காக சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் என 48 நாட்கள் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார்.

    தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மழை நீரால் முழுவதுமாக நிரம்பி மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    • ஒரகடம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள மாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் உமேஷ் சாஹு (வயது 36). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கஜோல் சாஹு (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 நாட்களாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது குறித்து கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காஜல் சாஹூ வீட்டின் அறையின் உள்ளே சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள்.
    • போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஓரிக்கையில், சதாவரம் பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் அரசு காதுகோளாதோர் பள்ளி அருகில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் குரலிசைப் போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம்.

    தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. நாட்டுப்புற நடன போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும். ஓவியப் போட்டிக்கு ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும்.

    ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம் மற்றும் தொலைபேசி எண். 044-2729148 அல்லது 8015136911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை நீடித்து வருகிறது.

    இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 201 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

    இந்த மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 631 ஏரிகள் நிரம்பி உள்ளன.

    மேலும் 194 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 57 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 27 ஏரிகள் 25 சதவீத்துக்கும் மேலும் நிறைந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 56 மி.மீட்டர் மழை பதிவானது.

    மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி-44

    பள்ளிப்பட்டு-24

    ஆர்.கே.பேட்டை-42

    சோழவரம்-33

    பொன்னேரி-32

    புழல்-25

    பூந்தமல்லி-39

    திருவாலங்காடு-33

    திருத்தணி-45

    பூண்டி-50

    தாமரைப்பாக்கம்-35

    திருவள்ளூர்-36

    ஊத்துக்கோட்டை-50.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 6.1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. நேற்று நள்ளிரவு முதல் இன்று வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது.

    காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், செம்பரம்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு, ஒளி முகமது பேட்டை, ரங்கசாமி குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    காலையில் பலத்த மழை கொட்டியதையடுத்து இன்று காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 6.1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வாலாஜாபாத்தில் 22 மி.மீட்டர், உத்திரமேரூரில் 5 மி.மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 19 மி.மீ., குன்றத்தூரில் 36.6 மி.மீ, செம்பரம்பாக்கத்தில் 30.6 மி.மீ மழை பெய்து உள்ளது.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக 38.4 மி.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    செங்கல்பட்டு-28.4 மி.மீ

    மதுராந்தகம்-10 மி.மீ

    செய்யூர்-32.5 மி.மீ

    தாம்பரம்-37.6 மி.மீ

    மாமல்லபுரம்-16 மி.மீ

    கேளம்பாக்கம்-2 மி.மீ

    திருக்கழுக்குன்றம்-38.4 மி.மீ

    திருப்போரூர்-5 மி.மீ.

    திருவள்ளூர்

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக கொட்டித்தீர்த்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    பலத்த மழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.

    • மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது.
    • நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து.

    மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த புயல் மற்றும் மழை வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 25 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. இதேபோல் 21 கால்நடைகள் இறந்து இருக்கிறது.

    மேலும் 2,668 கோழி மற்றும் வளர்ப்பு பறவைகள் இறந்துள்ளன. நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் ஓய்ந்த பின்னரும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் விட்டு, விட்டு மழை கொட்டியது.

    பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

    இதில் 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 326 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது.

    இதே போல் 139 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 41 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
    • மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

    அதன்படி பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

    திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.

    அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த விமானங்கள் ஐதராபாத்திற்கு திரும்பி சென்றன. சிங்கப்பூர், இந்தூர், மும்பை, துபாய், தோகா உட்பட 14 விமானங்கள் அவ்வாறு திரும்பி சென்றன.

    அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூரு, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் என மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் ஆகும்.

    நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை பெங்களூரு மற்றும் ஐதராபாத் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலையில் இருந்து, ஒன்றின்பின் ஒன்றாக சென்னை வர தொடங்கி உள்ளன. மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.

    ×