என் மலர்
காஞ்சிபுரம்
- தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
- எழிலரசன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தசரதன், சுகுமார், பி.எம். குமார், சன் பிராண்ட் ஆறுமுகம், சந்துரு, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
நன்றி என்று பார்த்தால் என் முதல் நன்றி எம்.ஜி.ஆருக்கு தான். ஆனால் கட்சி என்று பார்த்தால் தி.மு.க. தான் என்னுடைய கட்சி. எம்.ஜி.ஆர். தான் என்னை வாழ வைத்த தெய்வம். வணக்கத்திற்கு உரியவர்.
என்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளுக்கு எல்லாம் ஓடுகிறவன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் எம்.பி., காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,
எழிலரசன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் தசரதன், சுகுமார், பி.எம். குமார், சன் பிராண்ட் ஆறுமுகம், சந்துரு, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிசீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23-ந்தேதி புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா 100 அரங்குகளுடன் அடுத்த மாதம்(ஜனவரி)-2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்து இருக்கும்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புத்தகத் திருவிழாவுக்கான பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார். மேலும் இது குறித்து குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. குறும்படத்தை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு காண்பிக்கவும், சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டி.வி. சேனல்கள் மூலம் ஒளிபரப்பவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இப்போதைக்கு 100 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த புத்தகத் திருவிழாவிற்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நட்சத்திர பேச்சாளர்கள், கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள் விரும்பும் நவீன அம்சங்கள் ஆகியவை இதில் இடம்பெற உள்ளன என்றார்.
இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் கூறும்போது, புத்தக திருவிழாவில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட உள்ளதாக கூறினார்.
- கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
- திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.
காஞ்சீபுரம் :
காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த 1,071 ஆண்டு தொன்மை வாய்ந்த நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலை காணவில்லை என்று பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவில் ஒரு போலீஸ் நிலையம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளி வந்தால் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துமோ அதேபோன்று ஒரு பெருமாள் கோவில் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து காணாமல் போய் விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1,071 ஆண்டு தொன்மையான நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவில் 40 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தவாடி கிராமத்தில் அன்றாடம் மக்கள் வழிபாட்டில் இருந்தது.
அந்த கோவில் முற்றிலும் களவாடப்பட்டு அதன் விளைவாக நம் மண்ணில் இருந்து மறைந்த போன இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பக்தர்களுக்கு இன்று வரை தெரியாமலிருப்பது வருந்தத்தக்க நிகழ்வு.
அந்த கோவில் சோழ தமிழ் பேரரசர் பராந்தக தேவர் காலத்தில் கட்டப்பட்டது என்பது இந்த கோவில் கல்வெட்டு சான்று ஆவணப்படி அறுதியிட்டு கூறமுடியும், காஞ்சீபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரம் அருகே உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் இந்த கோவில் இருந்துள்ளது.
இது சம்பந்தப்பட்ட கல்வெட்டு 1906-ம் ஆண்டு ஜரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழ பேரரசர் பராந்தக தேவரின் ஆட்சி கால கல்வெட்டுகள் இந்த கோவிலில் இருந்தன. இன்று இந்த வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான இந்த கல்வெட்டு நம்மிடம் இல்லாமல் நம் மண்ணில் இருந்து மறைந்து விட்டது. கோவிந்தவாடி கிராமம் 1,071 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிந்தபாடி என்றும் திருமால்புரம் திருமால்பேரு என்றும் இந்த கோவில் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் இருந்த மணவாள பெருமாள் தெய்வ திருமேனியும்; களவாடபட்டு கோவிந்தவாடி கிராமத்தில் அடிச்சுவடு கூட தெரியாமல் மறைந்துள்ளது. கோவிந்தபாடி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் இன்றும் உள்ளது.
சுமார் 30 முதல் 40 ஆண்டுகளில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோவில் திருப்பணி செய்யப்பட்ட அதே காலத்தில் நின்று அருளின பெருமாள் உய்ய கொண்ட ஆழ்வார் கோவிலிலும் திருப்பணி என்ற பெயரில் கோவிலில் உள்ள அனைத்து கல் மற்றும் செப்பு தெய்வ திருமேனிகளும் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய கல்தூண்களும் கல் பலகைகளும் நலிவடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டது என்றும் அதற்கு பிறகு திரும்பி வரவில்லை என்றும் கிராமத்தில் இருந்த 80 மற்றும் 90 வயதுள்ள முதியவர்களிடம் பேசியதில் இருந்து தெரிய வருகிறது.
திருப்பணி என்ற பெயரில் களவாடபட்டு அதன் விளைவாக மறைந்து போன இந்த குற்றத்தகவலை அன்று முதல் தற்போது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் மறைத்தது சட்டபடி தண்டனைக்குரிய குற்றம்.
எனவே இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மற்றும் டி.ஜி.பி. அளவிலான அதிகாரிகள் இந்த வழக்கின் புலன் விசாரணை பொறுப்பை கையில் எடுத்து கொண்டு சம்பந்தபட்ட கோர்ட்டுக்கு தந்தால்தான் இந்த மிக பெரிய சிலை திருட்டு குற்றத்தில் உண்மையை கண்டறிய முடியும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோழ பேரரசர்களால் கட்டப்பட்டு வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கோவில் வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான கல்வெட்டுக்களுடன் கூடிய நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல் போனதை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணில் இருந்து மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தற்போது வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பருத்திக்குன்றம் காலணி பகுதியிலுள்ள தரைபாலத்தில் வெள்ளத்தின் காரணமாக வீராணம் பைப்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
- சாலையும் சேதம் அடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம்:
கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயலினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றான தாமல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வேகவதி ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாமல் கலங்கல் பகுதியில் உருவாகக்கூடிய இந்த வேகவதி ஆறு சுமார் 26கிலோ மீட்டர் வரை பாய்ந்து கீழம்பி, கீழ்கதிர்பூர், திருப்பருத்திகுன்றம், தாயார்குளம், நாகலுத்துமேடு, தாட்டிதோப்பு, ஐயன் பேட்டை வழியாக சென்று திம்மையன்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலந்து வருகிறது.
தற்போது வேகவதி ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கீழ்கதிர்பூர் சாலையின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு துண்டானது. இதையடுத்து அப்பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் குண்டு குளம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், நாட்டேரி, பிரம்மதேசம், புதூர் போன்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்பவர்கள் பல கிலோ சுற்றிசெல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் திருப்பருத்திக்குன்றம் காலணி பகுதியிலுள்ள தரைபாலத்தில் வெள்ளத்தின் காரணமாக வீராணம் பைப்கள் பெயர்ந்து காணப்படுகிறது. சாலையும் சேதம் அடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
ஏற்கனவே வேகவதி ஆற்றின் வெள்ளம் காரணமாக தாயார் குளம் பகுதியில் உள்ள இரண்டு தரைபாலங்கள் சேதம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அவரது உடைமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த கூடையை திறந்து பாா்த்தனா்.
அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தென் கிழக்கு ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காணப்படும் 8 பறக்கும் அணில் என்ற சுகர் கில்டர் குட்டிகள், தென் அமெரிக்கா, பிரேசில் நாடு வனப்பகுதியில் இருக்கும் மர்மோசெட் என்ற வகை 3 சிறிய குரங்கு குட்டிகள், தென் அமெரிக்கா வனப்பகுதியில் வசிக்கும் தேகு லிசார்ட் என்ற 3 ராட்சத பல்லி குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை விலங்கு குட்டிகள் என்பதாலும், அவற்றை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் என்பதாலும் தாய்லாந்தில் இருந்து எடுத்து வந்திருப்பதாக கூறினார்.
ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய்க்கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 14 உயிரினங்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்கா, அமேசான் வனப்பகுதியில் வசிக்க கூடியது என தெரிவித்தனர்.
இதையடுத்து வன உயிரின குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வெங்கடேசன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தான் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்தி ரோட்டில் மளிகை கடை வைத்திருப்பவர் வெங்கடேசன். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தான் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- மாண்டஸ் புயல் கரையை கடந்தும் தற்போது பெய்து வரும் மழையில் வெள்ளம் போல் மழைநீர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கி நிற்கிறது.
- பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற குன்றத்தூர் ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள குமரன் நகர் பகுதியில் 2017-2018 -ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவில் குழந்தைகள், மற்றும் சிறுவர்கள், விளையாடி வந்தனர். இதேபோல் உடற்பயிற்சி கூடத்தில் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர்.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்தும் தற்போது பெய்து வரும் மழையில் வெள்ளம் போல் மழைநீர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் பல லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் துருப்பிடித்து விணாகும் நிலையில் உள்ளது.
எனவே பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற குன்றத்தூர் ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.
- கடந்த 2015 க்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்தபாலு செட்டிசத்திரம் பகுதியில் பாலாறில் இருந்து கிளை ஆறாக வேகவதி உருவாகி காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் 9 கிலோ மீட்டர் பாய்ந்து வாலாஜாபாத் அருகே உள்ள திருமுக்கூடல் பகுதியில் மீண்டும் பாலாற்றுடன் இணைகிறது. வேகவதி ஆற்றின் மொத்தம் நீளம் 18 கிலோமீட்டர் ஆகும்.
தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரின் வேகவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நாகலத்துமேடு, முருகன்குடியிருப்பு, தாயராம்மன்குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதையடுத்து தாழ்வான இடங்களில் வசித்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. வேகவதி ஆற்றில் 2500 கன அடி நீர் செல்வதால் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காஞ்சிபுரம் தாட்டி தோப்பு முருகன் காலனி, எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி நகர், நாகலத்து மேடு, தாயாரம்மன், குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 1000 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. 4-வது நாளாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றின் குறுக்கே இருந்த 4 தரைப்பாலங்கள் முற்றிலும் உடைந்து உள்ளன. மேலும் 5 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 2015 க்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வேகவதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு மேல் கதிருப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்களை குடியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அந்தமானில் இருந்து சென்னை வரும் ஏழு விமானங்கள், மொத்தம் 14 விமானங்கள் வரும் 16-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் ஏழு விமானங்கள், அந்தமானில் இருந்து சென்னை வரும் ஏழு விமானங்கள், மொத்தம் 14 விமானங்கள் வரும் 16-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகள் பராமரிப்பு பணி நடப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 -ந்தேதி வரை, 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரையும், மீண்டும் 29-ந்தேதியில் இருந்து டிசம்பர் 2 -ந்தேதி வரை, மூன்று முறை 12 நாட்கள் அந்தமான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது 4-வது முறையாக நேற்று முதல் வரும் 16-ந்தேதி வரை 4 நாட்கள் மீண்டும் செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமான சேவைகள் வரும் 17-ந்தேதியில் இருந்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தமான் விமான சேவைகள் கடந்த ஒன்றரை மாதத்தில், 16 நாட்கள் ரத்தாகி உள்ளன. இது பற்றி பயணிகளுக்கு முன்னதாகவே முறையான அறிவிப்பு செய்யப்படாமல், திடீரென இதுபோன்று விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- வேகவதி ஆற்றில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் ஆரப்பரித்து செல்கிறது.
- வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வது மட்டுமின்றி குடியிருப்புகளில் மழை வெள்ளம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உபரி நீரானது வெளியேறி வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வேகவதி ஆற்றில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் ஆரப்பரித்து செல்கிறது.
வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வது மட்டுமின்றி குடியிருப்புகளில் மழை வெள்ளம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறத்திலுள்ள தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரங்களில் மழை வெள்ளம் சூழந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை நீரும் சேர்ந்து வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக தாயார்குளம் ஆற்றங்கரையோரங்களிலுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து அந்த பகுதியில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் தீயணைப்பு மற்றும் போலீஸ்துறை மூலம் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள 2 சிறிய தரைப்பாலங்களில் ஒரு பகுதியை வெள்ளம் செல்ல ஏதுவாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் உடைத்தது.
தொடர்ந்து வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்கவோ, அந்த பகுதியை கடந்து செல்லவோ வேண்டாம் என்றும் அவ்வாறு கடந்து செல்லக்கூடியவர்களை தடுக்கும் பொருட்டு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
- காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மழை நீரால் முழுவதுமாக நிரம்பி மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம்:
உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதியன்று தொடங்கியது. அனந்தசரஸ் குளத்திலுள்ள நீராழி மண்டபத்தில் இருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பொதுமக்களின் தரிசனத்திற்காக சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் என 48 நாட்கள் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார்.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மழை நீரால் முழுவதுமாக நிரம்பி மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது.
- ஒரகடம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள மாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் உமேஷ் சாஹு (வயது 36). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கஜோல் சாஹு (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 நாட்களாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது குறித்து கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காஜல் சாஹூ வீட்டின் அறையின் உள்ளே சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






