என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செம்பரம்பாக்கம், புழல்-பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
    X

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது

    செம்பரம்பாக்கம், புழல்-பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    • பலத்த மழை பெய்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • பொதுமக்கள் கவனமுடன் இருக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து பலத்த மழை பெய்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவானதை அடுத்து கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    புயல் காரணமாக இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டி (மொத்த உயரம் 24 அடி) நிரம்பி உள்ளது. கனமழை நீடித்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி உபரிநீரை மீண்டும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதையடுத்து தண்ணீர் வெளியேறும் அடையாறு ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் கவனமுடன் இருக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தி உள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். ஏரியில் தற்போது 2,695 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இன்று காலை நிலவரப் படி ஏரிக்கு நீர்வரத்து 709 கனஅடியாக உள்ளது. பலத்த மழை பெய்தால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதேபோல் பலத்த மழை காரணமாக புழல்-பூண்டி ஏரிகளில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் 16.89 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,386 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 140 கனஅடி தன்ணீர் வருகிறது. பூண்டி ஏரியில் இருந்தும் 100 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. ஏற்கனவே பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது பலத்த மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. எனவே ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீரை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 595 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,231 மி.கனஅடிக்கு நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 539 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 36 கன அடி மட்டும் தண்ணீர் வருகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது. புழல்-பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படுவதை தொடர்ந்து கரையோர மக்கள் பாது காப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ் அறிவுறுத்தி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஏரிக்கரை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து உள்ளனர். ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் இருந்தும் ஒரே நாளில் உபரிநீர் திறக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×