என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ரூ.2 லட்சம் வைப்பு தொகை செலுத்தும்படி கூறிய தனியார் பள்ளி நிர்வாகி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். நிர்வாகிக்கு ஆதரவாக ஒரு தரப்பு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #PrivateSchool #Deposit
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதிகளில் ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவு பள்ளி உள்ளது. இந்த 2 பள்ளிகளிலும் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

    அதில், வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவ-மாணவிகளும் ரூ.2 லட்சம் வைப்பு தொகை கட்டவேண்டும். பணம் கட்டவிருப்பம் இல்லாதவர்கள் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் தெரிவித்தால் அடுத்த கல்வி ஆண்டில் மாற்றுசான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 2 பள்ளிகளிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பள்ளி நிர்வாகியும், தாளாளருமான சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதில் உடன்பாடு ஏற்படாததால் வைப்பு தொகை செலுத்த வேண்டாம் என பெற்றோரிடம் தெரிவித்த கல்வித்துறை அதிகாரிகள், இது தொடர்பாக பெற்றோர்களின் புகாரையும் பெற்று விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவ-மாணவிகள் இடையே பேசிய பள்ளி நிர்வாகி, பெற்றோர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தகவல் பரவியது. இது குறித்து ஒரு தரப்பு பெற்றோர், பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாகியிடம் கேட்க ஆலப்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் ஒரு தரப்பு பெற்றோர் குவிந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.

    இந்தநிலையில் இந்த பிரச்சினைகள் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசில் மாணவர்களின் பெற்றோர் சார்பில் புகார் செய்யப்பட்டது.

    அந்த புகார்கள் தொடர்பாக பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பீர்க்கன்காரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 147, 294 பி, 341, 342, 353, 504, 384, 385, 507, 506(1) ஆகிய பிரிவுகள் மற்றும் அதிக கல்விகட்டணம் கேட்டது தொடர்பாக தமிழக பள்ளிகள் கல்வி கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் 2009-ல் பிரிவு 9(1)ன் படியும் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாகி சந்தானம் (வயது 73), பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் செல்வக்குமார் (45), கார்த்திகேயன் (53), ராகவன் (69), ரங்கநாதன் (23) ஆகிய 5 பேரை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் மற்றொரு தரப்பு பெற்றோர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளை விடுதலை செய்யவேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கத்தில் உள்ள 2 பள்ளி வளாகங்களிலும் பள்ளி நிர்வாகி சந்தானத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், “பள்ளியில் உள்ள பிரச்சினையை எங்களுக்குள் பேசி தீர்த்து கொள்கிறோம். பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிக்கு ஆதரவாக உள்ளோம். சிலரின் தூண்டுதலால் பள்ளிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என மிகச்சிறிய அளவிலான பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி நிர்வாகி சந்தானத்துக்கு ஆதரவாக உள்ளோம்” என்றனர்.

    இதற்கிடையில் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். அதன்பிறகு சந்தானம் உள்பட 5 பேரையும் போலீஸ் நிலையத்தில் இருந்து வேனில் ஏற்றி தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த தாம்பரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கார்ல் மார்க்ஸ் கைது செய்யப்பட்ட 5 பேரையும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 8-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து சந்தானம், செல்வக்குமார், கார்த்திகேயன், ராகவன் ஆகிய 4 பேரும் புழல் சிறையிலும், ரங்கநாதன் சைதாப்பேட்டை கிளை சிறையிலும் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே பள்ளி நிர்வாகி சந்தானம் கைது செய்யப்பட்டதால் பள்ளி காலவரை இன்றி மூடப்படும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பள்ளி தொடர்ந்து செயல்படும் என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    பள்ளி நிர்வாகி சந்தானம் கைது தொடர்பாக பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி நிர்வாகி சந்தானம், 4 நாட்களுக்கு முன்பு கல்வித்துறையின் விதிகளுக்கு மாறாக, தானாகவே ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் வைப்பு தொகை கட்ட உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, அதிகமாக கேட்பது தவறு.

    இது குறித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு கேட்டபோது, பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சந்தானம், விருப்பம் உள்ளவர்கள் பள்ளியில் படிக்கலாம். இல்லாதவர்கள் மாற்றுசான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம் என கூறி உள்ளார்.

    நேற்று காலை மாணவர்களுடன் வந்த பெற்றோரை, சந்தானம் பள்ளியின் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு பள்ளியின் சுற்றுசுவருக்கு வெளியே வைத்து தகாத வார்த்தையால் பேசி, மிரட்டி விரட்டினர். அதையடுத்து, பெற்றோர்கள் பீர்க்கன்காரணை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. அதில், அவர் அதிகபட்ச கட்டணம் கேட்டதை ஒப்புக்கொண்டார். இனிமேல் அதிகப்படியான பள்ளி கட்டணத் தொகையை கட்டதேவையில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தொடர்ந்து பள்ளியை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நாளை முதல் வழக்கம் போல் பள்ளி இயங்கும். பள்ளியின் முதல்வர், பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராது. வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PrivateSchool #Deposit
    கேளம்பாக்கத்தில் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மினி. இவர்களது 4-வது மகன் செவன் ரித்விக். அங்குள்ள மழலையர் பள்ளியில் படித்து வந்தான். மகனை பள்ளியில் விடுவதற்காக் பத்மினி மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    வீடு அருகே உள்ள சிக்னலில் திரும்புவதற்காக நின்றபோது பின்னால் வந்த மண் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறுவன் ரித்விக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரங்கிமலை ரெயில் நிலைய 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் உயரம், அகலம் குறைக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வெறினார். #StThomasMountStation
    ஆலந்தூர்:

    பரங்கிமலை ரெயில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் இன்று வந்தார்.

    சம்பவம் நடந்த 4-வது பிளாட்பாரத்தை ஆய்வு செய்தார். விபத்துக்கு காரணமாக கூறப்படும் பக்கவாட்டு சுவரை பார்த்தார். பின்னர் தண்டவாளத்தை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரெயில்வே நடைமேம்பாலத்தின் கீழே சென்று 40 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரெயில்வே அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவரது கேள்விகளுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை.

    பின்னர் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள டிவிசனல் கோட்ட அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி பரங்கிமலை ரெயில் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம். பயணிகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். பயணிகள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது.


    படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் தங்கள் முதுகில் பைகளை தொங்க விட்டுக் கொண்டு வந்தது தான் விபத்திற்கான காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

    பீக்அவர்சில் ரெயில்கள் அதிகளவு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் அதிகப்பட்சமாக 12 பெட்டிகளை கொண்டு ரெயிலை இயக்குவதற்குதான் அனுமதி உள்ளது.

    கதவுகள் மூடப்பட்ட ரெயில் பெட்டிகளை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மும்பையில் தற்போது ஒரு சில ரெயில்கள் மூடப்பட்ட கதவுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையத்திற்கு மின்சார ரெயில் வந்த வேகம் சரியானதுதான். ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்று ரெயில் நிலையங்களிலும் பெட்டிகள் உள்ளேயும் ஒலிபெருக்கி, ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் மக்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் மிகக் குறைவு. ஆனால் அதனுடைய உயரம் மற்றும் அகலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது 4-வது பிளாட் பாரத்தில் சாதாரண மற்றும் விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிந்த பிறகு அறிவிக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

    மின்தடை காரணமாகத் தான் பிளாட்பாரத்தை மாற்றி நேற்று மின்சார ரெயில் இயக்கப்பட்டது. அதற்கு பயணிகள் காலதாமதத்தால் அவதிப்படக்கூடாது என்பதற்காக இயக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் தான் முழுமையான விவரங்கள் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    சோழிங்கநல்லூர் அடுத்த காரம்பாக்கத்தில் பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண் (38). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சித்ரா (32).

    இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் அருண் தினமும் இரவு குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 மாதங்களுக்கு முன்பு சித்ரா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த அருண் மீண்டும் குடித்து விட்டு சித்ராவை துன்புறுத்தி உள்ளார். சொந்த ஆட்டோ வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வேண்டும். அதை தாய் வீட்டில் வாங்கி வா என்று கூறி மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சித்ரா போனில் அவருடைய தாயிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். கணவரின் நடவடிக்கைகளால் மனம் உடைந்த சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும், கண்ணகிநகர் போலீசார் அங்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரித்த போலீசார் மனைவியை சித்ரவதை செய்ததாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் அருணை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    செங்கல்பட்டில் ரவுடி கொலையில் உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Rowdymurder

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுன் நாவலர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்தவர் சீனு என்கிற குள்ள சீனு. ரவுடி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று காலை சீனு வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார்.அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினார்கள்.

    இதில் ரவுடி சீனு பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த கொலை தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    செங்கல்பட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. நகர செயலாளர் குமார், அவரது நண்பர் ஆறுமுகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் ரவுடி சீனுவுக்கு தொடர்பு இருந்தது.

    கொலையுண்ட ஆறுமுகம் சீனுவின் அக்காளை திருமணம் செய்திருந்தார். அதன் பிறகு அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த ஆத்திரத்தில்தான் சீனு, ஆறுமுகத்தை கொன்றார்.

    இதனால் ஆறுமுகத்தின் மற்றொரு மனைவியின் தம்பியானலால் அதற்கு பழி தீர்ப்பதற்காக கூலிப் படையை ஏவி ரவுடி சீனுவை கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக லாலை போலீசார் கைது செய்தனர். கூலிப் படையினரை தேடி வருகிறார்கள்.

    கொலையுண்ட ரவுடி சீனு மீது குமார், ஆறுமுகத்தை கொலை செய்த வழக்கு தவிர குமாரின் தம்பி பார்த்திபனை கொலை செய்த வழக்கு, பட்டரவாக்கத்தை சேர்ந்த சிவா என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

    செங்கல்பட்டில் இன்று காலை ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுன், நாவலர் நெடுஞ்செழியன் தெரு, மலைப்பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் சீனு என்கிற குள்ளசீனு (வயது40). ரவுடி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இன்று காலை சீனு வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார். சிறிது தூரம் சென்ற போது 5 பேர் கும்பல் திடீரென அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த சீனு அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த சீனு சம்பவ இடத்திலேயே பலியானார். குடியிருப்புக்கு மத்தியில் நடந்த இந்த சம்பவம் கண்டு அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    கொலை திட்டத்தை முடித்த கும்பல் சர்வ சாதாரணமாக அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

    சீனு கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறியபடி அங்கு வந்தனர். செங்கல்பட்டு டவுன் போலீசார் சீனு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட சீனு மீது செங்கல்பட்டு அ.தி.மு.க. நகர செயலாளர் குமார் கொலை வழக்கு, பிரபல ரவுடி பட்டரைபாக்கம் சிவாவை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Murdercase

    கூவத்தூரில் விடுதலை சிறுத்தைகள் பேனர்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதையடுத்து கலவரம் ஏதும் வந்து விடாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. #VKC
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற ரெட்டை மலை சீனிவாசனின் 159-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வந்தார். அவரை வரவேற்று அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

    இதில் கூவத்தூர் நாவக்கால் பகுதியில் பேனர்களை அதே பகுதியை சேர்ந்த சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதில் சிலர் காயமடைந்தனர் இந்த நிலையில் இரு தரப்பினரும் மோதி கொள்ள அப்பகுதியில் சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் ஏதும் வந்து விடாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். #VCK
    சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 27-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. #SathyabamaUniversity #SathyabamaConvocation
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர், திரிலோச்சன் மொகாபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.



    2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர்களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குனர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன், இணை வேந்தர் சசி பிரபா, பதிவாளர் S.S. ராவ், ஆராய்ச்சி இயக்குனர் ஷீலா ராணி, நிர்வாக இயக்குனர் லோக சண்முகம், மாணவ மாணவிகளின் டீன் சுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, மாணவ மாணவிகள், பெற்றோரையும், அவர்கள் துறை சார்ந்த பேராசிரியர்களை என்றும் மறவாமல் வாழ்க்கையில் மேன்மையடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பிற்கு நீட் என்னும் தகுதி தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்பிற்காக நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண்டு, அதாவது 2019 ஆண்டு முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். #SathyabamaUniversity #SathyabamaConvocation
    முறையாக அனுமதி இல்லாமல் கட்டுமான பணியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த ஜெம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். #hospitalbuildingcollapses
    சோழிங்கநல்லூர்:

    சென்னை, பெருங்குடியை அடுத்த கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் கோவையை சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் 8 மாடிகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் பின்புறம் 50 அடி உயரத்தில் பெரிய ஜெனரேட்டர் அறை அமைக்க கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக ராட்சத இரும்பு தூண்களால் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் பீகார், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் கட்டுமான பணியின்போது திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் சிக்கிய பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி பப்லுகுமார் (வயது18) பரிதாபமாக இறந்தார்.

    மேலும் 32 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயம் அடைந்த 10 பேர் கந்தன் சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும். 19 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டுமான நிறுவன என்ஜினீயர்களான விருதுநகரை சேர்ந்த முருகேசன், ஈரோட்டை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜன்சவுத்ரி (25) இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. மேலும் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து நடந்த பகுதியில் சி.எ.ம்.டி.ஏ அதிகாரிகள் குழு நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது ஜெம் மருத்துவமனை நிர்வாகம் 8 மாடி கட்டிடத்திற்கு மட்டும் சி.எம்.டி.ஏ.விடம் முறையாக அனுமதி பெற்றது தெரிந்தது. மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் அறை மற்றும் கார் பார்க்கிங் கட்டுமான பணிக்கு எந்த அனுமதியும் பெறாமல் கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து முறையாக அனுமதி இல்லாமல் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஜெம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே நேற்று மாலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. இதில் சிஎம்டிஏ இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி, சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சி.எம்.டி.ஏ.விடம் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட தளங்களை தவிர கூடுதல் தளங்கள் கட்டினால் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளருக்கு சிஎம்டிஏ சார்பில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்படும். அப்படி சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்காத கட்டிடத்தை ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். #hospitalbuildingcollapses
    நீட் தேர்வு மொழிபெயர்ப்புக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #NeetExam #MinisterPandiarajan

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் சங்கர மட வளாகத்தில் ஜயேந்திரர் பண்மணிமாலை நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட்டு அருளுரை வழங்கினார்.

    முதல் பிரதியை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், வேளாக்குறிச்சி சத்தியஞான மகாதேவ தேசிய பரமாச் சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதினம், சிவஞான பாலய்ய சுவாமிகள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலின் தொகுப்பாசிரியர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:-

    இந்த விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த நூலின் கவிதை வரிகள் பாரதியாரின் கவிதை வரிகள், பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி போன்றும் வெண்மணி மாலை போன்றும் தொகுக்கப்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தாமிரவருணி புஷ்கரணி திருவிழா ஒரு சரித்திர நிகழ்வாக அமையும். ஆதினங்கள் மடாதிபதிகள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் அற்புத விழாவாக அது அமையும்.

    தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஆயிரம் தமிழ்ப்படைப்புகளை வெளியிட விழாக்குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விழா சிறப்பாக நடைபெற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைதொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு தமிழ் வினாத் தாள் மொழி பெயர்ப்பு விவகார குளறுபடிக்கு தமிழக அரசுதான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு எந்த ஒரு மொழி பெயர்ப்பாளரையும் பரிந்துரை செய்யவில்லை. சி.பி.எஸ்.இ. சார்ந்த வல்லுனர்களை வைத்துத்தான் வினாத் தாளை மொழி பெயர்த்துள்ளனர். இதற்கு முழுப் பொறுப்பு சி.பி.எஸ்.இ.யை சாரும். இதற்கும் தமிழக மொழிபெயர்ப்புத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காசிமட திருஞான சம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மெளனமடம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், பூனம்பட்டி ஆதினம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுர ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதினம் சங்கரலிங்க தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், டாக்டர் சுதா சேஷைய்யன்,கவிஞர் குருநாதன் ரமணி, வாலாஜாபாத்.பா.கணேசன், வி.சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #NeetExam #MinisterPandiarajan

    வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் சுருட்டிச் சென்ற சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் குமரவேல். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் மாமியார் சரஸ்வதி தங்கி உள்ளார்.

    இன்று காலை குமரவேல் தனது மனைவியுடன் வெளியே சென்றார். வீட்டில் மாமியார் சரஸ்வதி மட்டும் இருந்தார்.

    காலை 7 மணி அளவில் காரில் டிப்-டாப் உடை அணிந்த 5 வாலிபர்கள் குமரவேல் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சரஸ்வதியிடம் குமரவேல் குறித்து விசாரித்தனர். பின்னர் தாங்கள் காஞ்சீபுரம் வருமானவரித்துறை அதிகாரிகள். வீட்டில் சோதனையிட வேண்டும் என்று கூறி வீட்டுக்கதவை உள்பக்கமாக பூட்டினர்.

    மேலும் செல்போன்களையும் சுவிட்ச்ஆப் செய்யும் படி கூறி சோதனையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் 5 வாலிபர்களும் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டனர். அப்போது சரஸ்வதியிடம் காஞ்சீபுரம் அலுவலகத்துக்கு குமரவேலை வரும்படி கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதற்கிடையே வீட்டிற்கு வந்த குமரவேலிடம் சோதனை குறித்து சரஸ்வதி தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம் விசாரித்த போது சோதனையில் ஈடுபட்டது போலியானவர்கள் என்பதும், நகை-பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு அள்ளிச் சென்றிருப்பது தெரிந்தது.

    இது குறித்து குமரவேல் காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில், வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்துள்ள கைரேகைகளை பதிவு செய்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் வந்து சென்ற காரின் பதிவு எண் பதிவாகி உள்ளது. இதனை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Robberycase

    மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #waterproblem

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள தண்டரைபேட்டை கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிஅடைந்தனர்.

    இதுபற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை அரசு பஸ்சை சிறை பிடித்து காலி குடங்களுடன் தண்டரைப்பேட்டை- மதுராந்தகம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் மதுராந்தகம போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #waterproblem

    ×