search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுமான பணியின் போது விபத்து - தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சி.எம்.டி.ஏ. நோட்டீஸ்
    X

    கட்டுமான பணியின் போது விபத்து - தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சி.எம்.டி.ஏ. நோட்டீஸ்

    முறையாக அனுமதி இல்லாமல் கட்டுமான பணியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த ஜெம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். #hospitalbuildingcollapses
    சோழிங்கநல்லூர்:

    சென்னை, பெருங்குடியை அடுத்த கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் கோவையை சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் 8 மாடிகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் பின்புறம் 50 அடி உயரத்தில் பெரிய ஜெனரேட்டர் அறை அமைக்க கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக ராட்சத இரும்பு தூண்களால் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் பீகார், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் கட்டுமான பணியின்போது திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் சிக்கிய பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி பப்லுகுமார் (வயது18) பரிதாபமாக இறந்தார்.

    மேலும் 32 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயம் அடைந்த 10 பேர் கந்தன் சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும். 19 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டுமான நிறுவன என்ஜினீயர்களான விருதுநகரை சேர்ந்த முருகேசன், ஈரோட்டை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜன்சவுத்ரி (25) இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. மேலும் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து நடந்த பகுதியில் சி.எ.ம்.டி.ஏ அதிகாரிகள் குழு நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது ஜெம் மருத்துவமனை நிர்வாகம் 8 மாடி கட்டிடத்திற்கு மட்டும் சி.எம்.டி.ஏ.விடம் முறையாக அனுமதி பெற்றது தெரிந்தது. மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் அறை மற்றும் கார் பார்க்கிங் கட்டுமான பணிக்கு எந்த அனுமதியும் பெறாமல் கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து முறையாக அனுமதி இல்லாமல் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஜெம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே நேற்று மாலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. இதில் சிஎம்டிஏ இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி, சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சி.எம்.டி.ஏ.விடம் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட தளங்களை தவிர கூடுதல் தளங்கள் கட்டினால் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளருக்கு சிஎம்டிஏ சார்பில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்படும். அப்படி சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்காத கட்டிடத்தை ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். #hospitalbuildingcollapses
    Next Story
    ×