என் மலர்
ஈரோடு
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் தங்கமணி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (53). இவர்களுக்கு வெங்கடாசலம், ரகுநாதன் என்ற 2 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.
வெங்கடாசலம் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகுநாதன், பழனயம்மாளின் வீட்டின் அருகிலேயே குடியிருந்து ஈரோட்டில் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பழனியம்மாள் 2 நாள்களுக்கு முன்பு கோவையில் உள்ள மகன் வெங்கடாசலம் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை பழனியம்மாளின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ரகுநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். ரகுநாதன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டிற்குள் பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டின் அறையில் 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், விஜயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி திருநீல கண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து முதாட்டி லட்சுமி தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பொன்னம்மாள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






