என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு

    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வாரச்சந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய் க்கிழமை மாலை வரை நடைபெறும்.
     
    இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    இங்கு சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஜவுளி சந்தை கூடியது. இரவு நேர ஊரடங்கு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதேபோல் உள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர்.

    இதனால் சில்லரை வியாபாரம் கடந்த வாரத்தை விட குறைவாகவே நடைபெற்றது. இன்று வெறும் 5 சதவீதம் மட்டுமே சில்லரை வியாபாரம் நடை பெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இன்னும் சில நாட்களுக்கு இதே நிலைமைதான் தொடரும் என தெரிவித்தனர். பொதுவாக ஜவுளி சந்தை நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இரவு நேரங்களில்தான் பயணம் மேற்கொள்வார்கள். 

    ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வர முடியவில்லை. இதனால் கடந்த 3 வாரமாக ஜவுளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×