என் மலர்tooltip icon

    ஈரோடு

    தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    தேர்தல் பணியில் ஈடுபடும்  போலீசாருக்கு தபால் ஓட்டுச்சீட்டு  அனுப்பும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1,221 வாக்குச்சாவடிகளில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. 

    தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஆகியோர் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர் களுக்கு தபால் ஓட்டுச்சீட்டு படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் 710 போலீசார் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 

    இதன்பேரில் அவர்களுக்கு தேர்தல் பிரிவு சார்பில் தபால் ஓட்டு சீட்டு படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    இதேப்போல் ஆசிரியர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கும் அத்துறைகளின் சார்பில் தபால் வாக்கு சீட்டு படிவம் வழங்கப்படும்.

    இது குறித்து தேர்தல் பிரிவு டி.எஸ்.பி அண்ணா துரை கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் சட்டம் ஒழுங்கு போலீசார் 608 பேருக்கும், ஆயுதப்படை போலீசார் 102 பேருக்கும் தபால் ஓட்டுச்சீட்டு அளிக்கப்பட உள்ளது. 

    இவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு இவர்களது மாவட்டம், தொகுதி, வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தேர்தல் ஆணையத்தின் மூலம் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் வழங்கப்பட உள்ளது. 

    சட்டமன்றம் மக்களவைத் தேர்தல் போல இந்த தேர்தல் கிடையாது என்பதால் அவர் அவர்கள் அஞ்சல் அலுவலகம் மூலம் தங்களது வாக்கினை தபால் மூலம் செலுத்த வேண்டும். 

    இதனை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து தபால் வாக்கு உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டுகளுக்கு அனுப்பி வைத்து அந்த வாக்கினை சேர்த்து கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திம்பம் மலைப்பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள், கார்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகிறது.

    இந்நிலையில் வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திம்பம் மலைப்பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தாளவாடி பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பண்ணாரி சோதனை சாவடியையும் முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    ஆனாலும் திட்டமிட்டபடி நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கனரக வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஆனால் அரசு பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது.

    மேலும் அவர்கள் புலிகள் காப்பக பகுதியில் 30 கி.மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்று வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.

    திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட தகவல் தெரியாத ஏராளமான கனரக வாகனங்கள் வழக்கம்போல் கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்தது. அந்த வாகனங்களை தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வழியாக செல்ல முயன்ற கனரக வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் காரப்பள்ளம் சோதனை சாவடியில் 600-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு 300-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    கனரக வாகன ஓட்டிகள் விடிய, விடிய வனப்பகுதியிலேயே கடும் குளிரில் தவித்தனர். இன்று காலை 6 மணி முதல் திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் திரண்டதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் கனரக வாகன ஓட்டிகளை மெதுவாக வாகனங்களை இயக்க அறிவுரை வழங்கினர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் (அரசு, தனியார் பஸ்கள்) மற்றும் அவசர ஊர்திகள் போன்றவைகளுக்கு நுழைவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    4 சக்கர பயணிகள் வாகனங்களுக்கு ரூ.20, வேனுக்கு ரூ.30, 4 சக்கர கனரக வாகனங்களுக்கு ரூ.20, சிறு லாரி வாகனங்களுக்கு ரூ.20, 6 சக்கர வாகனங்களுக்கு ரூ.50, 8 சக்கர வாகனங்களுக்கு ரூ.60, 10 சக்கர வாகனங்களுக்கு ரூ.80, 12 சக்கர வாகனங்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஒரே இடத்தில் லாரிகளை நிறுத்தி வைத்திருந்தோம். இரவில் உணவு கூட சாப்பிட முடியவில்லை. மேலும் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

    வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்து வதால் இரவு நேரத்தில் வனவிலங்குகளால் அச்சம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
     
    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குசாவடி மையங்களில் பதிவாகும் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் 14 மையங்களில் எண்ணப்பட உள்ளது.

    இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 59 வார்டுகளில் பதிவாகும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பதிவாகும் வாக்கு பதிவு எந்திரங்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், கோபி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியிலும், 

    சத்தியமங்கலம் நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் காமதேனு கல்லூரி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து எண்ணப்பட உள்ளது.  இது தவிர 42 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் 9 இடங்களில் வைத்து எண்ணப்பட உள்ளது.  

    இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட உள்ள மையங்களில் மின்னணு வாக்குபெட்டிகள் வைப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
    பண்ணாரிக்கு பஸ் வராததால் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 5 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக நடந்து வந்து வடவள்ளி பகுதியில் இருந்து டவுன் பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
    சத்தியமங்கலம்:

    பண்ணாரி பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சத்தியமங்கலம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் டவுன் பஸ் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை முதல் பண்ணாரி சோதனை சாவடியில் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் டவுன் பஸ் வடவள்ளி என்ற பகுதியிலேயே நிறுத்தப்பட்டது.

    பண்ணாரிக்கு பஸ் வராததால் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 5 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக நடந்து வந்து வடவள்ளி பகுதியில் இருந்து டவுன் பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்து மாணவ- மாணவிகள் கூறும்போது, இன்று திருப்பு தேர்வு நடைபெறுகிறது. எனவே பஸ் இல்லாததால் தேர்வுக்கு தாமதமாகி விடும் என்று பதற்றத்துடன் நடந்து வந்தோம். எங்களுக்கு பள்ளிக்கு சென்றுவர வழக்கம்போல் பஸ் இயக்கினால் நன்றாக இருக்கும் என்றனர். 

    ஈரோடு கொல்லம்பாளையம் அருகே சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் அதே பகுதியை சேர்ந்த 5 பேருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கன்னிமார் கருப்பராயன் கோவில் உள்ளது. சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டு சுற்றிலும் கிரில் கம்பிகளால் அமைக்கப்பட்ட இக்கோவில் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் 5 பேரில் ஒருவருக்கு தனியாக பாத்தியப்பட்ட நிலம் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது. கோவில் அருகில் உள்ளதால் தன்னுடைய நிலத்தின் மதிப்பு உயரவில்லை என்று கூறி நேற்று மாலை கோவிலில் உள்ள சாமி சிலைகளை அங்குள்ள புறம்போக்கு இடத்தில் வைத்து விட்டு கோவில் கிரில் கம்பிகளை அவர் அகற்றி உள்ளார்.

    மேலும் அங்கிருந்த சில மரங்களையும் வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு வழிபட வந்தபோது பொதுமக்கள் சாமி சிலைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இந்து முன்னணியினர் கோவில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் அமைந்துள்ள இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் சூரம்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

    என் உழைப்பை நம்பி கட்சி என் மீது நம்பிக்கை வைத்து மாநகராட்சியின் 48-வது வார்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவஞானம் என்பவர் போட்டியிடுகிறார்.

    இவர் சூரம்பட்டி அணைக்கட்டுப் பகுதியில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடந்த சில நாட்களாக சிவஞானம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அதே நேரம் வாக்கு சேகரிக்கும் நேரம் போக மற்ற நேரம் கடைக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு சவரம் செய்தபடியே அவர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நூதனமான பிரசாரம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து சிவஞானம் கூறும்போது, நான் கடந்த 20 வருடமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறேன். எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்து வருகிறேன். அதேநேரம் என் வாழ்வாதாரத்துக்காக சொந்தமாக சலூன் கடை நடத்தி தொழில் செய்து வருகிறேன். என் உழைப்பை நம்பி கட்சி என் மீது நம்பிக்கை வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியின் 48-வது வார்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுவேன். இந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்றார். 
    ஆப்பக்கூடல் அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாணவியின் தந்தை மற்றும் அத்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் வெங்கடேஷ் (23) பெயிண்டர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி மூங்கில்பட்டி என்ற பகுதியில் வெங்கடேசின் பாட்டி வீடு உள்ளது. இங்கு அடிக்கடி வெங்கடேஷ் சென்று வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன் என்பவரது மகள் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    வெங்கடேஷ் அந்த மாணவியை 6 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிய வந்ததும் மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    கடந்த 8-ந்தேதி இரவு இதுதொடர்பாக வெங்கடேஷ் தரப்புக்கும் மாணவியின் பெற்றோர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் வெங்கடேஷ் தலையில் பலமாக தாக்கப்பட்டார். இதையடுத்து அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து ஆப்பக்கூடல் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை சரவணன் (37), அவரது அத்தை சித்ரா (45) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு உள்பட 4 மாவட்டங்களில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது.
    புஞ்சை புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விசைத்தறிகள் மற்றும் கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

    இதனால் கைத்தறி பட்டு உற்பத்தி கூடங்கள் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    நூல் விலை உயர்ந்தாலும் பட்டு சேலைகள் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே நூல் விலையை குறைக்கக் கோரி இன்று முதல் 10 நாட்களுக்கு பட்டு நூல் வார்ப்பதையும், நெசவு செய்வதையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

    எனவே மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து பட்டு நூல் விலை மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    பெருந்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் உடைப்பை சரி செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு  ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் உடைப்பை சரி செய்தனர்.

    பெருந்துறை நால்ரோடு பகுதியில் பெருந்துறை தெற்கு பகுதிக்கு செல்லும்  குடிநீர் குழாயில் இரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் நால்ரோடு பகுதியில் ரோட்டில் செல்லும் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறியது. 

    இதனையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக பெருந்துறை பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் வந்து தண்ணீர் சப்ளையை நிறுத்தினர். பின்னர் நால்ரோடு பகுதியில் தடுப்புகள் அமைத்து குழிதோண்டி குழாய் உடைப்பு சரி செய்யும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். 

    இந்த குழாய் உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீரால் ரோடு முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தது.

    இந்நிலையில் இன்று காலையும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு குழாய் உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    பட்டப்பகலில் கண்ணில் மிளகாய் பொடியை தூவி காங். பிரமுகர் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    பட்டப்பகலில் கண்ணில் மிளகாய் பொடியை தூவி காங். பிரமுகர் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு வைரா பாளையம் நாட்ராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஈ.பி.ரவி (52). ஈரோடு மாநகர் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது மனைவி புனிதா (47). நேற்று மாலை இவர் ஆர்.கே.வி.சாலையில் உள்ள டெய்லர் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். 

    அப்போது கருங்கல்பாளையம் திருநகர் காலனி, ஆறுமுக வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் அருகே வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள்  பழுதாகி நின்றது. 

    புனிதா மோட்டார் சைக்கிளை இயக்க முயன்றபோது அங்கு வந்த மர்மநபர்கள் தங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை புனிதா கண்ணில் தூவி, அவரது கையில் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையல்களை பறித்துக்கொண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர். 

    அப்போது புனிதா திருடன், திருடன் என கத்தினார். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். 

    மேலும் சம்பவம் நடந்த பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப் படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டு களில் ஒரு வார்டில் தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

    இதையடுத்து மீதமுள்ள 59 வார்டுகளி, 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறை குறித்த விளக்க கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில்  நடந்தது. 

    இதில் ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணை யருமான சிவகுமார் தலை மையில் வேட்பாளர்களுக்கு விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

    மேலும், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வேட்பாளர் கையேடு ஒவ்வொரு வேட்பாள ர்களுக்கும் வழங்கப்பட்டது.

    இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறியதாவது:-

    வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வேட்பாளர் கையேட்டில் உள்ள நன்னடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. 

    மதப்பிரச்சனை, சாதி பிரச்சனை தூண்டும் வகையில் பிரசாரம் செய்ய கூடாது. தேர்தல் செலவு ரூ.85 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க கூடாது. 

    அதற்கான செலவு தொகையை முறையாக பட்டியலிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தேர்தல் முடிந்ததும் 30 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    செலவு தொகையை தாக்கல் செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்தலுக்கு ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ய மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் முறையாக அனுமதி வாங்க வேண்டும். 

    முக்கியமாக வேட்பா ளர்கள், வாக்காளர்களான பொதுமக்களுக்கு பணமோ, பரிசு பொருளோ கட்டாயம் வழங்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைதலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி  வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான  ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.  அ.தி.மு.க., எம்.ஜி.ஆரால் தொடங்கப் பட்டது. அவரது வழியில் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி புரிந்தார். 

    அவருக்குப்பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்ந்தது. நாம் கொடுத்தே பழக்கப்பட்ட வர்கள். ஏனெனில் மனித நேய மிக்கமனிதர்களால் கட்சி வழி நடத்தப்பட்டது.

    சத்துணவு திட்டம் தந்த எம்.ஜி.ஆர். கோடிக் கணக்கான பெண்களின் கண்ணீரை துடைத்தவர். அவர் வழியில் வந்த ஜெயலலிதா ரூ.500 ஆக இருந்த ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தியும், தாலிக்கு தங்கம், ரூ.25 ஆயிரம் திருமண உதவித் தொகையை வழங்கினார்.  பேறுகால நிதியுதவி ரூ.12 ஆயிரம் வழங்கி பின் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 

    கல்வி ஒன்றுதான் வாழ்வை உயர்த்த முடியும் என்று ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை, இலவசமாக வழங்கி 14 வகையான இலவச பொருட்களையும் வழங்கியவர்.

    இதனால் இன்று தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் 52 சதவீதமாக உயர்ந்தது. உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, பல தொழிற்சாலைகளையும், பல ஆயிரம் வேலை வாய்ப்பையும், ஜெயலலிதா உருவாக்கினார்.  தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளையும் திறமையாக கையாண்டு தமிழகத்தை பாதுகாத்தவர் ஜெயலலிதா.

    எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தஞ்சை தரணி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு   ஹைட்ரோகார்பன் தொழிற்சாலைகள் வருவது தடுக்கப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. பொய்யான 525 வாக்குறுதிகளை அளித்தது. 

    அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்ற வில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது.

    ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் என்றார்கள். ஆனால் 10 மாதங்களாகியும் நீட் விலக்கப்படவில்லை. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். யாரை பார்க்க வேண்டுமோ, அவர்களை பார்த்து நீட் பிரச்சனையை விளக்கி, சட்ட ரீதியாக நீட்டை விலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    தேர்தலின்போது, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் நகைக்கடன் தள்ளுபடி என்றார்கள். மக்களை பார்த்து வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். 

    இதை நம்பி பலரும் நகையை அடகு வைத்து பணத்தை செலவு செய்துவிட்டனர். ஆனால், இப்போது, ஆய்வு செய்கிறேன் என்றும், 12 அல்லது 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்கிறார்கள். எஞ்சியவர்கள் ஏமாந்து, கடனாளியானது மட்டுமே மிச்சம்.

    பொங்கலுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.1,000, பின் ரூ.2,000 என கொடுத்து, தரமான முந்திரி, திராட்சை, பச்சரிசி வழங்கினோம். மக்கள் மகிழ்ந்தனர். தற்போது பணம் இல்லை என தர மறுத்து விட்டனர். 

    அவர்கள் வழங்கிய அரிசியை மாட்டுக்கு போட்டால் மாடு முறைக்கிறது. வெல்லம் உருகி ஓடுகிறது. அவற்றை இங்கு வாங்கினால் உண்மை தெரிந்துவிடும் என வடநாட்டில் இருந்து வாங்கினார்கள்.

    பல பொய் வாக்குறுதிகளை கொடுத்து. இந்த அரசு ஆட்சிக்கு வந்ததை மக்கள் உணர தொடங்கிவிட்டனர். மக்கள் வேதனையில் உள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் இதனை காண முடிகிறது. 

    புதிய எழுச்சி மக்களிடம் தோன்றி உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எம்.எல்.ஏ., எம்.பி., தேர்தல் தலைவர்களுக்கானது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொண்டர்களுக்கானது.

    எனவே நமக்குள் இருக்கும் சிறிய கருத்து வேறுபாடுகளை நீக்கி, மக்களிடம் தி.மு.க. அரசின் தோல்வியை எடுத்து சொல்லி நாம் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சியை அ.தி.மு.க., கைப்பற்றுவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×