என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது எடுத்த படம்.
தி.மு.க ஆட்சியில் மக்கள் வேதனையில் உள்ளனர்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைதலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரால் தொடங்கப் பட்டது. அவரது வழியில் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி புரிந்தார்.
அவருக்குப்பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்ந்தது. நாம் கொடுத்தே பழக்கப்பட்ட வர்கள். ஏனெனில் மனித நேய மிக்கமனிதர்களால் கட்சி வழி நடத்தப்பட்டது.
சத்துணவு திட்டம் தந்த எம்.ஜி.ஆர். கோடிக் கணக்கான பெண்களின் கண்ணீரை துடைத்தவர். அவர் வழியில் வந்த ஜெயலலிதா ரூ.500 ஆக இருந்த ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தியும், தாலிக்கு தங்கம், ரூ.25 ஆயிரம் திருமண உதவித் தொகையை வழங்கினார். பேறுகால நிதியுதவி ரூ.12 ஆயிரம் வழங்கி பின் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
கல்வி ஒன்றுதான் வாழ்வை உயர்த்த முடியும் என்று ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை, இலவசமாக வழங்கி 14 வகையான இலவச பொருட்களையும் வழங்கியவர்.
இதனால் இன்று தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் 52 சதவீதமாக உயர்ந்தது. உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, பல தொழிற்சாலைகளையும், பல ஆயிரம் வேலை வாய்ப்பையும், ஜெயலலிதா உருவாக்கினார். தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளையும் திறமையாக கையாண்டு தமிழகத்தை பாதுகாத்தவர் ஜெயலலிதா.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தஞ்சை தரணி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலைகள் வருவது தடுக்கப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. பொய்யான 525 வாக்குறுதிகளை அளித்தது.
அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்ற வில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் என்றார்கள். ஆனால் 10 மாதங்களாகியும் நீட் விலக்கப்படவில்லை. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். யாரை பார்க்க வேண்டுமோ, அவர்களை பார்த்து நீட் பிரச்சனையை விளக்கி, சட்ட ரீதியாக நீட்டை விலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலின்போது, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் நகைக்கடன் தள்ளுபடி என்றார்கள். மக்களை பார்த்து வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர்.
இதை நம்பி பலரும் நகையை அடகு வைத்து பணத்தை செலவு செய்துவிட்டனர். ஆனால், இப்போது, ஆய்வு செய்கிறேன் என்றும், 12 அல்லது 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்கிறார்கள். எஞ்சியவர்கள் ஏமாந்து, கடனாளியானது மட்டுமே மிச்சம்.
பொங்கலுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.1,000, பின் ரூ.2,000 என கொடுத்து, தரமான முந்திரி, திராட்சை, பச்சரிசி வழங்கினோம். மக்கள் மகிழ்ந்தனர். தற்போது பணம் இல்லை என தர மறுத்து விட்டனர்.
அவர்கள் வழங்கிய அரிசியை மாட்டுக்கு போட்டால் மாடு முறைக்கிறது. வெல்லம் உருகி ஓடுகிறது. அவற்றை இங்கு வாங்கினால் உண்மை தெரிந்துவிடும் என வடநாட்டில் இருந்து வாங்கினார்கள்.
பல பொய் வாக்குறுதிகளை கொடுத்து. இந்த அரசு ஆட்சிக்கு வந்ததை மக்கள் உணர தொடங்கிவிட்டனர். மக்கள் வேதனையில் உள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் இதனை காண முடிகிறது.
புதிய எழுச்சி மக்களிடம் தோன்றி உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எம்.எல்.ஏ., எம்.பி., தேர்தல் தலைவர்களுக்கானது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொண்டர்களுக்கானது.
எனவே நமக்குள் இருக்கும் சிறிய கருத்து வேறுபாடுகளை நீக்கி, மக்களிடம் தி.மு.க. அரசின் தோல்வியை எடுத்து சொல்லி நாம் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சியை அ.தி.மு.க., கைப்பற்றுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






