என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டத்தில் சிறு தானிய பயிரில் வரகு சாகுபடி பரப்பு 300 ஏக்கராக அதிகரித்து உள்ளது.
- பயறு வகை பயிர்களில் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- இயற்கை முறை சாகுபடி என்பதால் தரமான விளை பொருளுக்கான அதிகப்பட்ச விலை கிடைக்கும்.
ஈரோடு:
அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் இது குறித்து சின்னசாமி கூறியதாவது:-
இந்த ஆண்டில் அந்தியூர் உள்ளிட்ட மலைப்பகுதியில் கோடை மழை போதிய அளவு பெய்துள்ளது.
இதனால் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலர்கள் இப்பகுதி விவசாயிகளிடையே சிறு தானியம் குறித்தான உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எப்போதும் இல்லாத வகையில் தற்போது வரகு பயிர் 300 ஏக்கரிலும், பயறு வகைகளான உளுந்து, தட்டை பயறு, பாசிப்பயறு 1,800 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தேவர்மலை, மடம், கடையீரட்டி, வெள்ளி மலை, பெஜலிட்டி, ஈரட்டி, எலச்சிபாளையம் போன்ற கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நல்ல நிலையில் உள்ளன.
விதை கிராம திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் 1,000 கிலோ வம்பன்– 8 என்ற உயர் விளைச்சல் உளுந்து ரகம், 500 கிலோ பாசிப்பயறு வம்பன்– 6 ரகம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
பயறு வகை பயிர்களுக்கென்றே உண்டான சிறப்பம்சமான வேர் முடிச்சுகள் உருவாவது இங்கு சாகுபடி செய்யப்பட்ட பயறு வகை பயிரில் அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் பயிரின் வளர்ச்சி நல்ல நிலையில் இருப்பதும், அதிகமான பூக்கள் எடுப்பதும், அதிக மகசூல் கிடைப்பதும் எளிதாகி உள்ளது.
பயறு வகை பயிர்களில் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு முற்றிலும் இயற்கை முறை சாகுபடி என்பதால் தரமான விளை பொருளுக்கான அதிகப்பட்ச விலை கிடைக்கும்.
இப்பகுதி விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தாமரைக்கரையில் துணை வேளாண் விரிவாக்க மையம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மருத்துவ குழு சிறுமியிடம் இன்று விசாரணை நடத்தியது.
- விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது தவறு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது மகளுடன் வசித்து வந்த தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அப்போது அந்த பெண்ணிற்கும் பெயிண்டர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். பெயிண்டரும், அந்தப் பெண்ணும் ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.
அப்போது கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யும் புரோக்கர் மாலதி என்பவரிடம் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது புரோக்கர் மாலதி உங்கள் மகளின் கருமுட்டையையும் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இந்நிலையில் அந்த பெயிண்டர் சிறுமியை பலாத்காரம் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் பெயிண்டரும், சிறுமியின் தாயும் இணைந்து சிறுமியின் கருமுட்டையை 8 முறை விற்பனை செய்துள்ளனர்.
இதன் மூலம் கிடைத்த பணத்தில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஈரோடு பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் என்பவர் உதவி செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின்னர் உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீசில் நடந்த விஷயம் குறித்து புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாய், பெயிண்டர், புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரை போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக ஈரோடு கூடுதல் டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருமுட்டை விவகாரம், போலி ஆதார் அட்டை தயாரித்தது தொடர்பாக ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் நேற்று மாலை 2 மருத்துவமனையின் நிர்வாகிகள் 3.30 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்தனர். மருத்துவ நிர்வாகிகளிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. விசாரணையில் என்னென்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் இருந்து மருத்துவ அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்காக ஈரோடுக்கு வந்துள்ளனர்.
இந்த மருத்துவ குழு இன்று காலை அரசு காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமி இடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அந்த குழு சிறுமியிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் விரிவாக கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு மருத்துவ குழு விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குழு தங்கியிருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரணையை மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.
இதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணையின் அடி ப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தவறு செய்தது கண்டு பிடிக்கப்பட்டால் அதன் உரிமம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் இந்த விவகாரம் தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
- தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
- 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சி கரட்டுவலசு பகுதியில் கூடுதல் இயக்குநர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை) சரவணன் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கரட்டுவலசு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டுவலசு சாலை வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும்,
காந்தி நகர் காலனியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக கலெக்டர் சாலை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மைலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சிவானந்தம், பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிமுத்து, சாந்தி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 10-ம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த முதியவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவ மனையில் இருந்த காலி மருந்து பாட்டில்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் அதே பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி பொது மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மருத்துவ படிப்பு படிக்காமல் அந்த முதியவர் ஆங்கில மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அப்புராஜ், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்த மருத்துவ மனைக்கு திடீரென சென்று விசாரணை நடத்தி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் காலி மருந்து குப்பிகள், பயன்படுத்தப்பட்ட ஊசி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி ஆகியவை கிடைத்தது.
இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த முதியவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். ஆனால் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவ மனையில் இருந்த காலி மருந்து பாட்டில்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உரிய படிப்பு படித்துள்ளாரா? என்பது குறித்து விசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகா தாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
- ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் போலீசார் வடக்கு பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வடக்கு பேட்டை மார்க்கெட் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ஒவ்வொரு கடையாக சோதனை செய்தனர். அப்போது ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும்படியாக சிறிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது சத்தியமங்கலம் வடக்குப்பட்டி பகுதியை சேர்ந்த ஆசாராம் (32)என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவருக்கு உதவியாக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் அதே பகுதியில் உள்ள மற்றொரு கடைக்கு போலீசார் சென்றபோது கடையின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். போலீசை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார்.
அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி(48) என்பதும், பையை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ ஹான்ஸ், புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இவருக்கு உதவியாக இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேட்டன் என்பவரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






