என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,492 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மாடு, ஆடு போன்ற கால் நடைகள் விற்பனையாவது வழக்கம்
    • இன்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்றுகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மாடு, ஆடு போன்ற கால் நடைகள் விற்பனையாவது வழக்கம்

    இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும்.

    திருப்பூர் நாமக்கல் கரூர் காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்

    இந்நிலையில் இன்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்றுகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தனுஷ் சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவத்தன்று தனுஷ் பேனில் தனது லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    நீலகிரி மாவட்டம் இடுகட்டி தோட்டானி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் தனுஷ் (வயது 18). இவர் பெருந்துறை துடுப்பதி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தனுஷ் சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை தனது விடுதி அறை நண்பர்களுடன் சேர்ந்து கேண்டினில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். மற்ற மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல தனுஷ் மட்டும் தான் விடுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.

    இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் தனுஷ் வகுப்புக்கு வராததால் வகுப்பு ஆசிரியர் மூலம் போன் செய்து பார்த்துள்ளனர். பலமுறை போன் செய்தும் எடுக்காததால் விடுதி வார்டன் மகேந்திரகுமார் மற்றும் காவலாளியாக வீரமணி ஆகியோர் தனுசு அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளனர். அங்கு தனுஷ் ரூம் உள்புறமாக தாழ் போடப்பட்டு இருந்தது.

    உடனடியாக அவர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, தனுஷ் பேனில் தனது லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தனுஷை கீழே இறக்கி பார்த்துள்ளனர். அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

    உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு பெருந்துறை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
    • இதனையடுத்து அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர் கல்லாங் கரடு ஸ்ரீராம் நகர், 8-வது வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (25). கூலி தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக செல்வகுமாரை உறவினர்கள் ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, பாப்பம்மாள், குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, கண்ணையன் ஆகிய 8 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.

    இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து ஈரோடு முதலாம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கண்ணையன் என்பவர் இறந்து விட்டார்.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில் ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, பாப்பம்மாள், குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இதில் கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு 2 ஆண்டு, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 3 ஆண்டு என மொத்தம் 5 ஆண்டுகள் கூடுதலாக ஜோதிமணி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதனை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தார்.

    இதனையடுத்து அவர்கள் 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடுங் குளிர் நிலவியது.
    • குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா, ஸ்கார்ப் அணிந்து இருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை மற்றும் குண்டேரிப்பள்ள ம்அணை, பெரும்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம் அணை, மற்றும் பல்வேறு குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இதன் காரணமாக திம்பம், தாளவாடி, பர்கூர் மலை பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. பச்சை போர்வை விரித்தாற் போல் மலை பகுதிகள் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    நேற்றுமழை நின்றுவிட்டதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடுங் குளிர் நிலவியது. குறிப்பாக தாளவாடி, திம்பம், பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் கடுங்குளிரும், கடுமையான பனியும் நிலவியது.

    இதனால் காலை நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மலை கிராமங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர். குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா, ஸ்கார்ப் அணிந்து இருந்தனர்.

    மலை பகுதிகளில் இருந்து சமவெளி பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இருந்து 8 பெரிய கோவில்களை புதுப்பிக்க தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • இப்பட்டியலில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து எந்தெந்த கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளலாம் என வல்லுனர் குழு பரிந்துரைத்த பின் அந்த கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சம்பந்தப்பட்ட கோவில்களை ஆய்வு செய்து அந்தக் குழு கொடுக்கும் பரிந்துரை அடிப்படையில் கோவில்கள் புதுப்பிக்கப்படும்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 8 பெரிய கோவில்களை புதுப்பிக்க தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பாக மாநில அளவிலான 46-வது வல்லுநர் குழு கூட்டம் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இந்த வல்லுநர் குழுவின் ஆய்வுகள் பரிந்துரைகள் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    இதற்காக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில், பவானி வட்டம் எட்டுக்குட்டை அரங்கநாதர் கோவில், வெள்ளோடு ராசா கோவில், பெருந்துறை விஜயபுரி அம்மன் கோவில், காங்கயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுத சுவாமி கோவில், பவானிசாகர் அருகே கெஜட்டி ஆதி கருவண்ணராயர்பொம்ம தேவர் வீரசுந்தரி கோவில், கோபி வட்டம் பொலவக்காளிபாளையம் பொன்னேந்தி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட 8 கோவில்களை திருப்பணிக்கு தேர்வு செய்து வல்லுனர் குழுவுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இப்பட்டியலில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து எந்தெந்த கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளலாம் என வல்லுனர் குழு பரிந்துரைத்த பின் அந்த கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து கடத்துர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    அப்போது உக்கரம் குப்பன்துறை பகுதியை சேர்ந்த நடுபழனி (75), அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி(40), வண்டிப் பாளையம் விநாயகா நகரை சேர்ந்த மருதாசலம் (46) ஆகியோர் தள்ளுவண்டியில் மது விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடத்துர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி புகாரின் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் தாலுகாவில் உள்ள தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.
    • ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றியும், வேகத்தை குறைத்தும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்காவில் 15-க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளி நிர்வாகம் வாகனங்களை இயக்கி வருகிறது.

    இந்த வாகனங்கள் பள்ளி வாகனங்களுக்கான அரசால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கின்றனவா என கலெக்டரின் உத்தரவுப்படி பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் தாலுகாவில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

    மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களிடம் தனி மனித தவறுகளே வாகன விபத்துக்கு காரணமாக அமைகிறது.

    எனவே ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றியும், வேகத்தை குறைத்தும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது வட்டார கல்வி அலுவலர் மாதேஷா,கல்வி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    மேலும், இந்த ஆய்வில் எலவமலை, கதிரம்பட்டி, கூரபாளையம், மேட்டுநாசுவம் பாளையம், பேரோடு மற்றும் பிச்சாண்டம் பாளையம் ஆகிய 6 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதிதிட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கோப்புகள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லதா, உட்பட துறைசார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஈங்கூர் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மரம் ஒன்று உள்ளது.
    • மரத்தின் அடிப்பகுதி தாங்க முடியாமல் எந்த நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் அதிக போக்குவரத்து உள்ள ரோடு ஈங்கூர் ரோடு ஆகும்.

    இந்த ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் மிகப் பெரிய அளவில் துவாரம் ஏற்பட்டதால் மரத்தின் அடிப்பகுதி வலுவிழந்தது.

    இதனால் மரத்தின் ஒரு கிளை ஒடிந்து ரோட்டில் விழுந்தது. நல்ல வேளையாக அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    தற்போது அந்த மரத்தின் கிளைகள் அதிக அளவில் பரவி உள்ளதால் மரத்தின் அடிப்பகுதி தாங்க முடியாமல் எந்த நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இது குறித்து அந்த மரத்தை அகற்ற பொது மக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

    • பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென கடந்த 21-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
    • பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதா ராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென கடந்த 21-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த மாணவர் டாக்டரிடம் கூறும்போது:-

    தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறியுள்ளான். மாணவன் சொன்னதைக் கேட்டு பதறிப்போன அவருடைய தாய் இது குறித்து ஈரோடு கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இதை அடுத்து கலெக்டர் இது பற்றி விசாரணை நடத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளியில் படிக்கும் 6 மாணவர்களை தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது.

    மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை கீதாராணி பணிக்கு வராமல் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இதற்கிடையே அதிகாரிகள் விசாரணை நடத்த வந்ததை அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதி பொதுமக்களும் பள்ளியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தொடக்கக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் கழிப்பறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பெருந்துறை போலீசார் தலைமை ஆசிரியை கீதா ராணி மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியை கீதாராணியை தேடி வருகின்றனர்.

    • அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள், தூய்மை, காவல், நோயாளிகளை அழைத்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனமோ நாள் ஒன்றுக்கு ரூ.280 வீதம் மாதத்துக்கு ரூ.8 ஆயிரத்து 400 மட்டுமே வழங்கி வருகிறது.

    எனவே அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில், அறிவித்தபடி ஊதியத்தை முழுமையாக வழங்க கோரி ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவில் விடிய விடிய பனியை பொருத்தாமல் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

    இன்று 3-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணியை புறக்கணித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து 3-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் கூறும்போது,

    எங்களை பணியில் அமர்த்திய நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே எங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டது. ஆனால் நிறுவனம் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருகிறது.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அப்படியும் எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அடுத்த கட்டமாக சட்ட போராட்டம் நடத்த முடிவு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றனர்.

    ×