என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இன்று காலை நிலவரபடி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியில் நீடித்து வருகிறது.
    • அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.90 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரபடி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1263 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நேற்றைய விட இன்று குறைக்கப்பட்டுள்ளது. இன்று பவானி ஆற்றுக்கு 250 கன அடி என மொத்தம் 1250 கன அடி விதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சரக்கு வாகனத்தின் டிரைவர் தங்கராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஒரு டன் போதைப்பொருட்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமான குடோன் பாட்டேல் தெருவில் உள்ளது. இந்த குடோனில் ஓசூரில் இருந்து போதை பொருட்கள் (குட்கா) கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்று அதிகாலை சிவகிரி பட்டேல் தெருவில் உள்ள வேல்முருகனுக்கு சொந்தமான குடோனுக்கு பெருந்துறை உதவி கண்காணிப்பாளர் கவுதம் கோயல் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது குடோனில் வெங்காய லோடு, அரிசி மூட்டை இடையில் சுமார் ஒரு டன் (ஆயிரம் கிலோ) எடையுள்ள குட்கா மற்றும் போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர்.

    மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலும் போதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சரக்கு வாகனத்தின் டிரைவர் தங்கராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஒரு டன் போதைப்பொருட்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஓசூரில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் போன்றவற்றுக்காக 77,703 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.சிவ சண்முகராஜா தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த ஆய்வு, வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் சிவ சண்முகராஜா பேசியதாவது:

    வரும் ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சேர்ப்பு, திருத்த முகாம் நடத்த தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடிகள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் போன்ற வற்றுக்காக 77,703 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    அவை ஆய்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    தகுதியான வாக்காளர் பதிவு விடுபடக்கூடாது. தகுதியற்ற வாக்காளர் பதிவு இடம் பெறக்கூடாது என்ற அடிப்படையில் திருத்த பணியை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் பொன்மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கோபி வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர்ஷினி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
    • மாட்டுச்சந்தையில் கால்நடைகள் ரூ.73 லட்சத்திற்கு விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.

    இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று போன்ற கால்நடைகள் ரூ.73 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • இதனால் வேதனை அடைந்த பாசமலர் காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் அந்த பெண் குறித்து அடையாளம் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆர்.என்.புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி பாசமலர் (48) என தெரிய வந்தது.

    திருநாவுக்கரசுக்கும் பாசமலருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருநாவுக்கரசு கட்டிட வேலை செய்து வருகிறார். பாசமலரும் கூலி வேலை செய்து வந்தார். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் வேதனை அடைந்த பாசமலர் நேற்று ஆர். என்.புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

    சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். அவரது உடல் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகரில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த போது போலீசார்மிட்டது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் குடோனில் ஆய்வு செய்ய நேரில் சென்றனர்.
    • இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உள்ளது கந்தசாமி 2-வது வீதி. இங்குள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனில் ஆய்வு செய்ய நேரில் சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டிருந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் தான் அந்த குடோனை திறக்க வேண்டும் எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் அறிவிப்பை மீறி குடோனை திறந்தால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீசும் குடோன் முகப்பில் ஒட்டப்பட்டது.

    • ஏ.டி.எல். 1 என்ற ராகி ரகத்தின் விதைப்பண்ணை தாளவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இவ்விதைப் பண்ணையை விதைச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர், தாளவாடி மலைப் பகுதிகளில் ராகி மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் மானாவரி மற்றும் இறவை பயிராக பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

    மலைப்பகுதி விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை வழங்குவதற்காக நெய்தாளபுரம் கிராமத்தில் காலசாமி என்ற விவசாயி ராகி பயிரில் ஏ.டி.எல். 1 என்ற வல்லுநர் விதையை கொண்டு ஆதார நிலை ஒன்று விதைப்பண்ணையை அமைத்துள்ளார்.

    இவ்விதைப் பண்ணையை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் ஆய்வு செய்து ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    இது குறித்து விதைச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்ததாவது:

    தாளவாடி மலைப்பகுதியில் ராகி பயிரில் கோ 15, ஜி.பி.யு. 67 ஆகிய ரகங்கள் பெருமளவில் பயிரிடப் பட்டு வந்த நிலையில் 2023-ம் ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ளதால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஏ.டி.எல். 1 என்ற ராகி ரகத்தின் விதைப்பண்ணை தாளவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரகமானது 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். மானாவாரி மற்றும் இறவை பயிராக பயிரிடலாம். குலை நோய்க்கு மிதமான நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.

    சாயாத தன்மை கொண்டது. கதிரிலிருந்து தானியங்களை எளிதில் பிரித்தெடுக்கலாம். எந்திர அறுவடைக்கு ஏற்றது. அதிக மாவாகும் திறன் கொண்டது.

    ஒரு எக்டருக்கு சராசரியாக 3 ஆயிரம் கிலோ வரை மகசூல் தரவல்லது. இவ்விதை பண்ணை யிலிருந்து அறுவடை செய்யப்படும் விதைகள் சுத்தி செய்யப்பட்டு பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்றவுடன் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று கரை உடைப்பினை சரி செய்யும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் சீரமைப்பு பணி குறித்து கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி பிரதான வாய்க்கால் கரையில் கடந்த 10-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக வாய்க்காலில் வந்து கொண்டிருந்த 1,300 கனஅடி தண்ணீர் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைபயிர்களை மூழ்கடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

    இதனை அடுத்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு திறக்கப் படும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று கரை உடைப்பினை சரி செய்யும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் சீரமைப்பு பணி குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 தினங்களாக நடைபெற்று வந்த கால்வாய் சீரமைக்கும் பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் சீரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும்.

    அதனைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.

    மேலும் தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு குறித்து அரசிடம் எடுத்து கூறி விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது.
    • ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ஈரோடு:

    கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் ரயான் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ரயான் நூல் மூலம் இயக்கப்படும் விசைத்தறிகள் மிக அதிகம்.

    தற்போது அரசின் இலவச வேட்டி-சேலை பணிகள் விசைத்தறிகளில் நடப்பதால் ரயான் நூல் மூலமாக துணி உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இருப்பினும் ரயான் நூலை நம்பியே பெரும்பாலான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரயான் நூல் விலை கடந்த சில மாதமாக நிலையில்லாமல் இருப்பதால் ஸ்பின்னிங் மில்கள் நஷ்டத்தை சந்திப்பதுடன் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

    சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் நூற்பாலைகளுக்கு கிலோவுக்கு 35 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. ஓரிரு நாளுக்கு முன் விலை உயர்ந்து மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து இந்தியன் மேன்மேடு நூல் உற்பத்தியாளர் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:-

    ரயான் நூல் உற்பத்திக்கான ஸ்பின்னிங் மில்களில் மின்கட்டணம் வங்கி கடனுக்கான வட்டி, உதிரி பாகங்கள், விலை உயர்வு, தொழிலாளர் சம்பளம், வாகன வாடகை உள்பட பலவும் உயர்ந்து தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. லாபம் கிடைக்கவில்லை என்பதை விட உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. பல ஆலைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

    மேலும் பல ஆலைகள் 50 சதவீத உற்பத்தியை குறைத்து உள்ளன. கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் ரயான் நூல்களை குறைந்து, கடந்த சில நாட்களாக சில ரூபாய் உயர்ந்தது. அதை உயர்வு என எடுத்து கொள்ள இயலாது. அதற்குள் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால் நூல் உற்பத்தியை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

    இதேப்போல் ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    பருத்தி, பருத்தி நூல், ரயான் நூல் துணிகளின் விலை ஏற்ற, இறக்கம் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசிடம் அனைவரும் இணைந்து முறையிட வேண்டும் . அரசால் மட்டுமே இவ்விலையேற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன.
    • இரவு நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் யாரும் எதற்காகவும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் புலி, சிறுத்தைகள், யானை, மான், கரடி, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பண்ணாரி வனப்பகுதியில் சாலையோரம் புள்ளிமான்கள் கூட்டம் அடிக்கடி உலா வருவது வழக்கம். அதனால் இரை தேடி சிறுத்தைகள் அவ்வப்போது இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை சர்வ சாதாரணமாக கடந்து செல்வதை பார்க்க முடியும்.

    தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பண்ணாரி சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை மின்னல் வேகத்தில் ஓடியபடி சாலையை கடந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா கட்சியில் பதிவாகி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி பின்புறம் உள்ள மரக்கிளையில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக உட்கார்ந்து இருந்தது.

    இந்த காட்சியை கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த சிறுத்தை பின்னர் சாவகாசமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பண்ணாரி சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினர் போலீசார் அச்சமடைந்துள்ளனர். சாலையில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இரவு நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், யாரும் எதற்காகவும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • சென்னியப்பன் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (39). இவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சு டிரைவராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சென்னியப்பன் பள்ளிபாளையம் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியதாகவும், இதனால் அவருக்கு கடன் ஏற்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதையொட்டி அவர் கடந்த சில நாட்களாக கடனை கட்ட முடியாமல் மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைய டுத்து சென்னியப்பன் அந்த வீட்டை விற்பனை செய்து கடனை அடைக்கலாம் என்று தனது மனைவியிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து (விஷம்) மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சென்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.
    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் ரூ.522.9 லட்சம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 941 ஏக்கரும், நடப்பு ஆண்டில் 308 ஏக்கரும் தரிசு நிலங்கள் கண்டறியப் பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.

    ஈரோடு வட்டாரம் மேட்டுநாசுவன்பாளையம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலத்தொகுப்பில், புதர்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

    தமிழக அரசால் வரும் 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும், ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட வேளாண் துறையின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் 2021-22-ம் ஆண்டு 60 கிராம ஊராட்சிகளும், 2022-23-ம் ஆண்டு 44 கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதார துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மற்றும் எரிசக்தி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி களாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    2021-22-ம் ஆண்டு 31 தரிசு நிலத்தொகுப்புகளில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 11 கிராம பஞ்சாயத்துகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு 9 இடங்களில் இலவச மின்சார இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கபட்டுள்ளது.

    2022-23-ம் ஆண்டு 20 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு 13 இடங்களில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் இவ்வாறான தொகுப்பு களில் முட்செடிகள் மற்றும் புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாகுபடி செய்வதற்கு உகந்த நிலமாக தரிசு நிலங்கள் மாற்றம் செய்யப்படுகிறது.

    பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தரிசு நில தொகுப்புகளில் நுண்ணீர் பாசனம் அமைக்கப் படுகிறது. தோட்டக்கலைப் பயிர்களில் நிலையான வருமானம் தரக்கூடிய பழப்பயிர்கள், காய்கறி தோட்டம் மற்றும் மரவகைப் பயிர்கள் தொகுப்பு விவசா யிகளின் பங்கேற்புடன் சாகுபடி செய்ய ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் பொறியியல் துறை மூலம் 10 எச்.பி மின்மோட்டார் பொருத்தப்பட்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் இறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவையல்லாது கலைஞரின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இலவச தென்னங்கன்றுகள், வரப்பு பயிராக உளுந்து சாகுபடிக்கு மானியம், கைத்தெளிப்பான், விசைத் தெளிப்பான், தார்பாலின் ஆகியவையும், தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டு தோட்டம் அமைக்க தளைகள் விநியோகம் நெகிழி கூடைகள், பழச்செடிகள் ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 100 சத மானியத்தில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் மண் வரப்புகள், கல் வரப்புகள் அமைத்தல் போன்ற நீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2021-22-ம் ஆண்டு ரூ.425.5 லட்சம், 2022-23-ம் ஆண்டு ரூ.97.40 லட்சம் மொத்தம் ரூ.522.9 லட்சம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.

    இந்த தொகுப்புகளில் மொத்தம் 1,187 விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, சென்னிமலை வேளாண்மை துணை இயக்குநர் சாமுவேல், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×