என் மலர்
நீங்கள் தேடியது "New ATL 1"
- ஏ.டி.எல். 1 என்ற ராகி ரகத்தின் விதைப்பண்ணை தாளவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
- இவ்விதைப் பண்ணையை விதைச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடம்பூர், தாளவாடி மலைப் பகுதிகளில் ராகி மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் மானாவரி மற்றும் இறவை பயிராக பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
மலைப்பகுதி விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை வழங்குவதற்காக நெய்தாளபுரம் கிராமத்தில் காலசாமி என்ற விவசாயி ராகி பயிரில் ஏ.டி.எல். 1 என்ற வல்லுநர் விதையை கொண்டு ஆதார நிலை ஒன்று விதைப்பண்ணையை அமைத்துள்ளார்.
இவ்விதைப் பண்ணையை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் ஆய்வு செய்து ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இது குறித்து விதைச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்ததாவது:
தாளவாடி மலைப்பகுதியில் ராகி பயிரில் கோ 15, ஜி.பி.யு. 67 ஆகிய ரகங்கள் பெருமளவில் பயிரிடப் பட்டு வந்த நிலையில் 2023-ம் ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ளதால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஏ.டி.எல். 1 என்ற ராகி ரகத்தின் விதைப்பண்ணை தாளவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரகமானது 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். மானாவாரி மற்றும் இறவை பயிராக பயிரிடலாம். குலை நோய்க்கு மிதமான நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.
சாயாத தன்மை கொண்டது. கதிரிலிருந்து தானியங்களை எளிதில் பிரித்தெடுக்கலாம். எந்திர அறுவடைக்கு ஏற்றது. அதிக மாவாகும் திறன் கொண்டது.
ஒரு எக்டருக்கு சராசரியாக 3 ஆயிரம் கிலோ வரை மகசூல் தரவல்லது. இவ்விதை பண்ணை யிலிருந்து அறுவடை செய்யப்படும் விதைகள் சுத்தி செய்யப்பட்டு பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்றவுடன் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






