search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rayon"

    • சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது.
    • ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ஈரோடு:

    கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் ரயான் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ரயான் நூல் மூலம் இயக்கப்படும் விசைத்தறிகள் மிக அதிகம்.

    தற்போது அரசின் இலவச வேட்டி-சேலை பணிகள் விசைத்தறிகளில் நடப்பதால் ரயான் நூல் மூலமாக துணி உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இருப்பினும் ரயான் நூலை நம்பியே பெரும்பாலான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரயான் நூல் விலை கடந்த சில மாதமாக நிலையில்லாமல் இருப்பதால் ஸ்பின்னிங் மில்கள் நஷ்டத்தை சந்திப்பதுடன் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

    சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் நூற்பாலைகளுக்கு கிலோவுக்கு 35 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. ஓரிரு நாளுக்கு முன் விலை உயர்ந்து மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து இந்தியன் மேன்மேடு நூல் உற்பத்தியாளர் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:-

    ரயான் நூல் உற்பத்திக்கான ஸ்பின்னிங் மில்களில் மின்கட்டணம் வங்கி கடனுக்கான வட்டி, உதிரி பாகங்கள், விலை உயர்வு, தொழிலாளர் சம்பளம், வாகன வாடகை உள்பட பலவும் உயர்ந்து தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. லாபம் கிடைக்கவில்லை என்பதை விட உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. பல ஆலைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

    மேலும் பல ஆலைகள் 50 சதவீத உற்பத்தியை குறைத்து உள்ளன. கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் ரயான் நூல்களை குறைந்து, கடந்த சில நாட்களாக சில ரூபாய் உயர்ந்தது. அதை உயர்வு என எடுத்து கொள்ள இயலாது. அதற்குள் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால் நூல் உற்பத்தியை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

    இதேப்போல் ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    பருத்தி, பருத்தி நூல், ரயான் நூல் துணிகளின் விலை ஏற்ற, இறக்கம் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசிடம் அனைவரும் இணைந்து முறையிட வேண்டும் . அரசால் மட்டுமே இவ்விலையேற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×