என் மலர்
ஈரோடு
- நெல் வயலை பார்வையிட்டு தங்களின் சந்தேகங்களை வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
- உழவர் கண்டுநர் சுற்றுலாவை ஏற்பாடு செய்த வேளாண்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை உதவி இயக்குநர் முரளி ஆலோசணையின்படி,
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கோபி வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி மாநில அரசு விதைப்பண்ணைக்கு 2 நாட்கள் உழவர் கண்டுநர் சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் அங்கு சாகுபடி செய்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய நெல் வயலை பார்வையிட்டு தங்களின் சந்தேகங்களையும், சாகுபடி தொழில்நுட்பங்களையும் அங்குள்ள வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும் மேச்சேரியில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திற்கும் சென்று அங்குள்ள ஆட்டு இனங்கள், நோய் பராமரிப்பு முறைகள் மற்றும் பரன்மேல் ஆடு வளர்ப்பு முறை போன்ற தொழில்நுட்பங்களையும் அங்குள்ள கால்நடை மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது,
இந்த உழவர் கண்டுநர் சுற்றுலாவானது எங்களுக்கு புது அனுபவத்தையும், பல நவீன தொழில் நுட்பங்களையும் நேரில் சென்று பார்த்து கற்றுக்கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்த உழவர் கண்டுநர் சுற்றுலாவை ஏற்பாடு செய்த வேளாண்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
- வரட்டுபள்ளம் அணை அருகே யானை கூட்டம் சாலையோரம் வந்து நின்று கொண்டிருந்தது.
- இதனால் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் யானைகள், மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதியில் இருந்து தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிக ளுக்குள் வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுபள்ளம் அணை அருகே யானை கூட்டம் சாலையோரம் வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல வழி இன்றி அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே நின்று கொண்டிருந்தது.
இதனால் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.
எனவே இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்து றையினர் தெரிவித்தனர்.
- மண்எண்ணை விளக்கு ரத்னா ஆடை மீது பட்டதில் தீ பற்றி எரிய தொடங்கியது.
- இதனால் உடல் கருகி வேதனையால் அலறினார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உக்கரம், மில்மேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரத்னா (40).
சம்பவத்தன்று இரவு ரத்னா மண்எண்ணை விளக்கை பற்ற வைத்து விட்டு அருகில் பாய் போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பட்டு அருகில் இருந்த மண்எண்ணை விளக்கு ரத்னா ஆடை மீது பட்டதில் தீ பற்றி எரிய தொடங்கியது.
இதனால் ரத்னா உடல் கருகி வேதனையால் அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்னா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரத்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
- இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார்
ஈரோடு:
மொடக்குறிச்சி அடுத்துள்ள பூமாண்டம் வலசு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தாமோதரன் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் குடிப்பழ க்கத்திற்கு அடிமையான தாமோதரன் தினமும் குடித்து வந்ததால் வயிறு, தொண்டை ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குண மடைந்தார்.
இதனையடுத்து சம்பவத்தன்று திடீரென்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாமோதரன் இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது.
- இதனால் பழங்கள் விலை கடந்த வாரங்களை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது.
ஈரோடு:
கோடைக்காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரி பிஞ்சுகள், பழங்கள் மற்றும் ஜூஸ்களை சாப்பிட்டு வருகின்றனர்.
இதனால் பழங்கள் விலை கடந்த வாரங்களை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது.
ஈரோடு பழமார்க்கெ ட்டில் இன்று இத்தாலி, துருக்கி ஆப்பிள் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரான் ஆப்பிள் கிலோ ரூ.120-க்கும், மாதுளை கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரைக்கும் விற்பனை யானது.
மேலும் ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.120-க்கும், நாக்பூர் ஆரஞ்சு கிலோ ரூ.60 முதல் ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.70-க்கும் விற்பனையானது.
இதேபோல் சாத்துக்குடி கிலோ ரூ.70-க்கும், சப்போட்டா கிலோ ரூ.40-க்கும் பன்னீர் திராட்சை கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பழங்களின் விலை உயர்ந்தாலும் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் வழக்கம் போல் பழங்களை வாங்கி வருகின்றனர்.
- இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு நீதிபதி விசாரணைக்கு ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
- மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி உள்ளே பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி அன்று சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்ததாக கடம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கோபிசெட்டிபாளையம் முதலாம் வகுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அப்போதைய பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் இருந்து வந்தார். இவர் கோர்ட்டில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து சாட்சி விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு நீதிபதி விஜய் அழகிரி விசாரணைக்கு ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
மேலும் அவர் வரும் 15-ந்தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.
தற்போது நெப்போலியன் சேலம் பள்ளபட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
- அடுத்த மாதம் முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்
- தொகை விவசாயி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
ஈரோடு:
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் அடுத்த மாதம் முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு ஒன்றிய அரசின் விலை ஆதரவு திட்டத்தில் ஈரோடு விற்பனை குழுவின் கீழ் செயல்படும் அவல்பூந்துறை, பவானி, பூதப்பாடி, எழுமாத்தூர்,
கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மைலம்பாடி, சத்தியமங்கலம், சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும், வெப்பிலி துணை விற்பனை கூடத்திலும் கொப்பரை கொள்முதல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடக்க உள்ளது.
அரசு நிர்ணயிக்கும் தரத்தில் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.108.60-க்கும், ஒரு கிலோ பந்து கொப்பரை, ரூ.117.50 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான தொகை விவசாயி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
விருப்பம் உள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முகப்பு, சிட்டா, அடங்கல் நகலுடன், ஈரோடு விற்பனை குழு தலைமை அலுவலகம் – 0424-2339102,
அவல்பூந்துறை – 0424-2331279, பவானி – 98946 26295, பூதப்பாடி – 0456-227070, எழுமாத்தூர் – 79040 62073, கோபி – 04285-222278, கவுந்தப்பாடி – 04256-298856,
கொடுமுடி – 04204-224297, மைலம்பாடி – 99425 06990, சத்தியமங்கலம் – 04295-233346, சிவகிரி -04204- 240380, வெப்பிலி துணை விற்பனை கூடம் 04294-220512 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 756 கன அடியாக குறைந்தது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 300 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தினேஷ் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்.
- போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேஷை கைது செய்ய தேடி வருகின்றனர்.
சென்னிமலை:
தேனியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் அவர் புதுசாக ஒரு செருப்பு வாங்கினார். அந்த செருப்பில் அவர் வளர்த்து வந்த நாய் அடிக்கடி இயற்கை உபாதை கழித்தது. இதையடுத்து அவர் அந்த நாயை அடித்து கொன்று விட்டார்.
பின்னர் இறந்த நாயின் போட்டோவை தனது முகநூலில் பதிவிட்டு அதில் அடிக்கடி எனது புது செருப்பில் நாய் இயற்கை உபாதை கழித்ததால் போட்டு தள்ளிவிட்டேன். மேலும் தயவு செய்து என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க. அந்த நாயால் ரொம்ப அவதிபட்டேன், பிளீஸ் என்று பதிவிட்டு இருந்தார். மேலும் முகநூலில் பதிவான இந்த போட்டோவை ஒரு வாட்ஸ் அப் குரூப்பிலும் பதிவிட்டு இருந்தார்.
இதை பார்த்த ஈரோடு பழைய பாளையத்தைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேஷை கைது செய்ய தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 6 யுடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- சேனல்களை யுடியூப் நிறுவனம் முடக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜ்னாலாவில் போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவு செய்திகளை ஒளிபரப்பி வந்ததாக 6 யுடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சேனல்கள் வெளிநாடுகளில் இருந்து இயங்கி வந்தவை எனவும், கடந்த 10 நாட்களாக இந்த 6 சேனல்களும் முடக்கப் பட்டுள்ளதாகவும், மத்திய அரசு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சேனல்களை யுடியூப் நிறுவனம் முடக்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்தனர்.
- ரெயில் நிலையத்தில் திடீரென போலீசார் சோதனை செய்ததால் பயணிகள் பதற்றுத்துடன் காணப்பட்டனர்.
ஈரோடு:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு போனின் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் உடனடியாக இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர். மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோப்பநாய் கயல் வரவழைக்கப்பட்டது. ரெயில் நிலையம் நுழைவாயில் பகுதி முதல் ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மேலும் பயணிகள் உடமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடையிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள கடைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், குப்பை கூடைகள், ரெயில்வே பணிமனை பகுதி என ஒவ்வொரு பகுதியாக தீவிரமாக சோதனை செய்தனர். அந்த சமயம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் திடீரென போலீசார் சோதனை செய்ததால் பயணிகள் பதற்றுத்துடன் காணப்பட்டனர்.
இதேபோல் டவுன் இன்ஸ்பெக்டர் தேவராணி தலைமையில் போலீசார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. திடீரென போலீஸ் படையை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்குகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு சோதனை செய்தனர். மேலும் மோப்ப நாய் கயலும் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அதுவும் சோதனை செய்தது. மினி பஸ் ரேக், டவுன் பஸ் ரேக், சேலம், நாமக்கல் பஸ்கள் வந்து செல்லும் ரேக், மதுரை, திருச்சி பஸ் ரேக், சென்னை கோயம்புத்தூர் சத்தியமங்கலம் பஸ்கள் வந்து செல்லும் ரேக் என தனித்தனியாக ஒவ்வொரு பகுதியாக போலீசார் சோதனையிட்டனர். பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரமாக இந்த சோதனையும் நடந்தது. சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணிக்கூண்டு பகுதிக்கும் போலீசார் சென்று சோதனை செய்தனர். அங்கு பொதுமக்கள் வியாபாரிகள் அதிக அளவில் கூடுவதால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதன் பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைகளால் ஈரோடு நகரமே இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
- பெருந்துறை பகுதியில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் பஸ்களில் யாராவது படிகளில் நின்று பயணம் செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர்.
- படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பெருந்துறை:
திருப்பூரில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறை நோக்கி வந்த போது பஸ்சின் பின்புறமாக பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பஸ்சின் பின்புற படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டு தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்ததை கண்டார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. அந்த பஸ்சை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தினார்.
இதைத்தொடர்ந்து அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரை அழைத்து அவர் அறிவுரை கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் 'படிக்கட்டுகளில் நின்று தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை, ஏன் பஸ்சில் ஏற அனுமதித்தீர்கள்? திருப்பங்களில், பஸ்சில் தொங்கி கொண்டு வரும் மாணவர்களின் கால்கள், ரோட்டில் உரசியபடி வருவது, உங்களுக்கு தெரியுமா? பொறுப்பற்ற முறையில், நீங்கள் தொடர்ந்து மாணவர்களை பஸ்சில் பயணம் செய்ய அனுமதித்தால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பரிந்துரை செய்வேன்,' என எச்சரிக்கை விடுத்தார். மேலும் பெற்றோர் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
இதையடுத்து, பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அனைவரும், பஸ்சின் உட்புறத்திற்கு சென்றனர். பின்னர் அந்த பஸ் ஈரோட்டை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பெருந்துறை பகுதியில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் பஸ்களில் யாராவது படிகளில் நின்று பயணம் செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர். மேலும் படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.






