என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட கோம்பை, பஞ்சந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
    • தொழிலாளிகள் தார் சாலை அமைக்கும் பணியில் இடம் பெற வேண்டுமென பேரூராட்சி கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.

    வடமதுரை:

    அய்யலூர் முதல் நிலை பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட கோம்பை, பஞ்சந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 5வது வார்டு அய்யனார் கோவில் பிரிவு முதல் பஞ்சந்தாங்கி வரை சாலை விரிவாக்கம் செய்ய வனத்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. 7வது வார்டில் கலர்பட்டியில் இருந்து புத்தூர் சாலை வரை மண் பாதையை மேம்படுத்தி தார் சாலை, கழிவுநீர், சாக்கடை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அப்பகுதியில் உள்ள தொழிலாளிகள் தார் சாலை அமைக்கும் பணியில் இடம் பெற வேண்டுமென பேரூராட்சி கவுன்சிலர் பிரியங்கா தினேஷ் கோரிக்கை வைத்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.

    • திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மேற்கு ரத வீதியில் உள்ள திருலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றது.
    • அன்னதானத்தில் இனிப்பு பொங்கல், புளியோதரை ஆகியவை 1000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மேற்கு ரத வீதியில் உள்ள திருலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து மாநில இணை செயலாளர் ஜெயன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது.

    இதில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மண்டல தலைவர்கள் ஆனந்த், ஜான் பீட்டர், துணை அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பாளர் பொன்முருகன் செய்திருந்தார். அன்னதானத்தில் இனிப்பு பொங்கல், புளியோதரை ஆகியவை 1000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

    • கேரளா, கர்நாடகா, ஆந்திரா வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்கும் கும்பல் இயங்கி வருகிறது.
    • போதைக்காளான்களை கூரியர் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்கும் கும்பல் இயங்கி வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைக்காளான் தேடிச் சென்ற இளைஞர் வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். அவரை போராடி மீட்டனர். போலீசாரின் தீவிர நடவடிக்கையால் போதைக்காளான் கும்பல் தலைமறைவாகியது. தற்போது மீண்டும் போதைக்காளான் விற்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    டி.எஸ்.பி. மதுமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ், தலைமைக்காவலர்கள் சரவணன், காசிநாதன் மற்றும் போலீசார்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 7 ரோடு ஜங்சன் பகுதியில் போதைக்காளான் விற்ற கல்லுக்குழியை சேர்ந்த சுரேஷ் (56), பள்ளங்கி மாட்டுப்பட்டியை சேர்ந்த தங்கத்துரை (32) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் போதைக்காளான் விற்பனையில் ஈடுபட்ட சாலமன் (53), ஜெயந்தி (43), விக்டோரியாராணி (28) ஆகியோரையும் கைது செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக அருண் (35), ஹெலன்மேரி (23) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. போதைக்காளான் விற்பனைக்கு தங்கத்துரை மூளையாக செயல்பட்டார். சாலமன் மற்றும் அவரது குடும்பத்தினர், கூரியர் சர்வீஸ் நடத்தி வந்துள்ளனர். போதைக்காளான்களை கூரியர் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்துள்ளனர்.

    தெரிந்த நபர்களுக்கு மட்டுமே போதைக்காளான் விற்றுள்ளனர். மேலும் வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அதிக அளவில் வெளியே தெரியாதவாறு போதைக்காளான்களை நூதன முறையில் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி அதன் மீது ஏறி நின்றது.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனியை அடுத்துள்ள நெய்காரப்பட்டியில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கொழுமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரி அய்யம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிரே பழனியை நோக்கி தென்னை மட்டைகள் ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி அதன் மீது ஏறி நின்றது. இதில் இடுபாடுகளுக்குள் சிக்கி சித்தரேவை சேர்ந்த பெரியசாமி (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்ததும் அப்பகுதி மக்கள் பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 10 பேரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கொழுமம் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அழகாபுரி ராஜாபுரம் பகுதியில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வரவில்லை.
    • இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    பழனி:

    பழனி அருகில் உள்ள அழகாபுரி ராஜாபுரம் பகுதியில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் வலியுறுத்தி விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (31ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேடசந்தூர் நகர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மனம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனனூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபித்தம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டிகவுண்டனூர், மல்வார்பட்டி, சிக்கராம்பட்டி,

    சோனாபுதூர், மாத்திணிப்பட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சு வீரன் பட்டி, நொச்சிப்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஓட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

    • ஊராளிபட்டி எட்டையம்பட்டியை சேர்ந்தவர் வீட்டில் நல்லபாம்பு புகுந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் வீட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே ஊராளிபட்டி எட்டையம்பட்டியை சேர்ந்தவர் ஜான்சிரோசி (48). இவரது வீட்டில் நல்லபாம்பு புகுந்தது. இதை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் வீட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர்.

    பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இதைப் போலவே மெய்யம்பட்டியில் சாத்தன் என்பவரது வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது பெயருக்கு 108 அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
    • தொடர்ந்து மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையிலும், மாவட்ட செயலாளர் கருப்பையா முன்னிலையிலும் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் அவரது பெயருக்கு 108 அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பால்ராஜ், பிரச்சார செயலாளர் மார்ட்டின், மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் நாகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், சதீஷ் மணிகண்டன், வேல் முருகன்,பாலமுருகன், டால்பின் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது.
    • வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீசார் சோதனையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகணேஷ் (21), சையத் இப்ராஹிம் (26), ரேணுகா (29), மணி (21), தனபாலன் (20), வினோத் பாண்டியன் (23), ரதின் (20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (31) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தாராபுரத்தில் திண்டுக்கல்-பழனி சாலை பிரிவு பகுதியில் எங்களது நிறுவன ஷோரும் இயங்கி வருகிறது.
    • தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்களது உற்பத்தி ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து ஆடைகளும் இந்த ஷோருமில் வைத்து சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.

    பழனி:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கிளாசிக் போலோ ஆண்களுக்கான ஆடை விற்பனை ஷோரும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஆடி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கிளாசிக் போலோ ஜவுளி நிறுவனத்தில் சிறப்பு ஆடை விற்பனை தொடங்கி உள்ளது. இதையடுத்து தாராபுரம், பழனி சுற்றுப்புற மக்கள் அங்கு வந்து தங்களுக்கு தேவையான ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தாராபுரத்தில் திண்டுக்கல்-பழனி சாலை பிரிவு பகுதியில் எங்களது நிறுவன ஷோரும் இயங்கி வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்களது உற்பத்தி ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து ஆடைகளும் இந்த ஷோருமில் வைத்து சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆண்களுக்கான பேண்ட், சட்டை, டி-சர்ட், உள்ளாடைகள், குளிர்கால ஆடைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள் என அனைத்தும் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது என்றனர்.

    • மாவட்டம் முழுவதிலும் இருந்து 4 வயது முதல் 17 வயது வரை உள்ள 602 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
    • பலவகை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு ரோல்பால் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி சின்னாளப்பட்டி பிரிவில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 4 வயது முதல் 17 வயது வரை உள்ள 602 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். வயது வாரியாக 100 மீட்டர், 300 மீட்டர் என பலவகை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ரோல் பால் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன், மாவட்ட செயலாளரும், சர்வதேச நடுவருமான பிரேம்நாத் ஆகியோர் போட்டி ஏற்பாடுகளை செய்து நடத்தினர்.

    • புது வாகனம் வாங்கும் பக்தர்கள் முதலில் வண்டி கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்னரே தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.
    • ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே அமைந்துள்ளது வண்டி கருப்பணசாமி கோவில். இந்த கோவிலிலுக்கு திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக புது வாகனம் வாங்கும் பக்தர்கள் முதலில் வண்டி கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்னரே தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.

    மேலும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கோவிலில் சாமி தரிசனம் செய்து பாதுகாப்பான பயணத்திற்கு எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கி செல்வார்கள். கடந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் உண்பதில்லை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காதணி விழா உள்ளிட்ட விஷேசங்கள் நடைபெற்றதால் கோவில் பகுதி களைகட்டியது. மேலும் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×