என் மலர்
திண்டுக்கல்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு மயானத்தில் சாலை பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னதுரை, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வத்தலகுண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வத்தலகுண்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர்கள் தாமரை மாறன், யோகவேல், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் கார்மேகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக்கோஸ் தற்போது அதிகளவில் விவசாயம் செய்துள்ளனர்.
- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முட்டைக்கோசு விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் செடிகள் அனைத்தும் அழுகி வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் பூண்டு, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக்கோஸ் தற்போது அதிகளவில் விவசாயம் செய்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முட்டைக்கோசு விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் செடிகள் அனைத்தும் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். தாங்கள் முட்டைக்கோஸ் விளைவிக்க வாங்கிய மூலப்பொருட்களின் தொகை கூட கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
- பழுதாகி நின்ற இடம், காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
- பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்து பஸ்சின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலையில் இருந்து ஆடலூர், கே.சி. பட்டி, குப்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு தாண்டிக்குடி, பண்ணைக்காடு வழியாக வத்தலகுண்டுவுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பன்றிமலையில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். தாண்டிக்குடி-பண்ணைக்காடு இடையே எதிரொலிக்கும்பாறை பகுதியில் வந்தபோது அந்த பஸ் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது.
இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அவதியடைந்தனர். மேலும் பஸ் பழுதாகி நின்ற இடம், காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பஸ்சில் பழுது ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே பார்க்கக்கூடாதா என்று கூறி பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். மேலும் பஸ்சின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மாற்று பஸ்சுக்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த சரக்கு வாகனங்களில் லிப்ட் கேட்டு வத்தலக்குண்டுவுக்கு சென்றனர்.
எனவே மலைக்கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் அடிக்கடி பழுதாகி வருவதால் மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தரமான பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர்மழை காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது
- மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி கால்நடைகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, ஆத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பகுதியில் மழைநீர் புகுந்தது.
கடந்த ஒரு வாரமாக குளம்போல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்க்காக ஆஸ்பத்திரிக்கு வரும் கால்நடைகள் நோய் தொற்றோடு செல்லும் அவல நிலை உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவித்துள்ளார்.
எனவே, ஆத்தூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி கால்நடைகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.
- பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
- தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் பேசினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது,
மாணவ, மாணவிகள் படிக்கும்போது பாடங்களை நன்கு புரிந்து படிக்க வேண்டும். அதேபோல் படிக்கின்ற காலத்திலேயே உயர்கல்வியில் எந்த துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து அதற்கேற்ப பாடங்களை படிக்க வேண்டும். படித்தோம், பட்டம் வாங்கினோம், வேலை கிடைத்தது என்றாலும் படிக்கும்போது நன்றாக படித்தால்தான் பணியில் திறமைகளை வெளிக்காட்டி ஒளிர முடியும்.
மாணவ, மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதில் 'நான் முதல்வன்' திட்டத்தில் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது. அதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது போட்டியான உலகம். அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். படிக்கும் பாடங்களை நன்று உணர்ந்து படிக்க வேண்டும். பல லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்களே என்ற கவலை அடைய கூடாது. அதில் முழுமையாக போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தி படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். அவர்களில் 500 அல்லது ஆயிரம் நபர்களுக்குள் வந்தால் போதும் அரசு பணி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
அரசு தொழில் தொடங்கிட ஒரு கோடி ரூபாய் வரை கடன்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவி, ரூ.10 லட்சம் வரை பிணையில்லாத கடனுதவி உள்ளிட்ட நீட்ஸ் திட்டம், தாட்கோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் கடனுதவிகளை வழங்கி வருகிறது. தொழில் தொடங்குவதன் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் பஸ் மூலம் திண்டுக்கல் வந்து செல்கின்றனர்.
- பழைய தண்டவாளத்தை மாற்றி ஒரு அடி தூரத்திற்கு 52 கிலோ எடை இருக்கும் படியான புதிய தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ரெயில்நிலையம் வழியாக தினசரி 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் பஸ் மூலம் திண்டுக்கல் வந்து செல்கின்றனர்.
மேலும் வடமாநிலங்களை தென்மாவட்டங்களுடன் இணைக்கு முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி சரக்கு ரெயில் தண்டவாளங்களை மாற்றிவிட்டு புதிய தண்டவாளம் மாற்றும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்டவாள உதவி பொறியாளர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி கூறுகையில், ஏற்கனவே இருந்த பழைய தண்டவாளத்தை மாற்றி ஒரு அடி தூரத்திற்கு 52 கிலோ எடை இருக்கும் படியான புதிய தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் அதிக வலுவுள்ள ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் அதிகளவில் இயக்க முடியும்.
நாளுக்குநாள் ரெயில்போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
- மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரல்மழையுடன் இதமான வெயிலும் அடித்தது. இந்த வித்தியாசமான சீதோஷ்ணத்தை சுற்றுலா பயணிகள் அனுபவித்து உற்சாகமாக வலம் வந்தனர்.
- நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு அதிகரித்ததால் சிறுவியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த வார தொடக்கத்தில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. மேலும் கனமழைக்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. இதனால் சுற்றுலா பயணிகள் குறைவாகவே இருந்தது.
இந்தநிலையில் வார இறுதி நாட்களில் சாரல் மழையுடன் இதமான சீேதாஷ்ணம் நிலவி வருகிறது. இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரல்மழையுடன் இதமான வெயிலும் அடித்தது. இந்த வித்தியாசமான சீதோஷ்ணத்தைசுற்றுலா பயணிகள் அனுபவித்து உற்சாகமாக வலம் வந்தனர்.
குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர். இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளிநீர்வீழ்ச்சி, குணாகுகை, மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டுரசித்தனர்.
மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரியும், ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு அதிகரித்ததால் சிறுவியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பள்ளங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
- பழுதான தொகுப்பு வீடுகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
ஜெ நகர் பழங்குடியினர் காலனி தொகுப்பு வீடுகளில் கனமழை காரணமாக மழை நீர் உள்ளே புகுவதை தடுக்கும் பொருட்டு, தற்காலிக நிவாரணமாக சுமார் 32 குடும்பத்தினருக்கு தார்ப்பாய்கள் வழங்க டி.வி.எஸ் நிறுவனத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையினர்(SST) ஏற்பாடு செய்திருந்தனர். இதனை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா பழங்குடியின மக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் வில்பட்டி ஊராட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி வில்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வாசு, வார்டு உறுப்பினர் சாய்ராம்பாபு, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பழுதான தொகுப்பு வீடுகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு கோட்டாட்சியர் தங்கள் வீடுகளை ஆய்வு செய்யவே வந்ததாகவும் விரைவில் சேதமடைந்துள்ள வீடுகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
- பரப்பலாறு அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடி ஆகும். தற்போது 78.95 அடி தண்ணீர் அணையில் உள்ளது.
- திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2323 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, வடகாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. பரப்பலாறு அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடி ஆகும். தற்போது 78.95 அடி தண்ணீர் அணையில் உள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி ஆகும். அணையில் தற்போது 113.25 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 118 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 60 கன அடி வெளியேற்றப்படுகிறது.
பரப்பலாறு அணையின் மூலம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தாசரிபட்டி முத்துபூ பாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், பெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய 6 குளங்கள் பாசன வசதி பெறுகிறது.
திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2323 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் பரப்பலாறு அணை தூர்வாரப்படும் என வடகாடு மலைப்பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராமசபை கூட்டத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பரப்பலாறு அணை நிரம்பி வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் உள்ளது.
- சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய நாட்களின்போது பழனி மற்றும் அதன் உப கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.
அதன்படி வருகிற 8-ந்தேதி மாலை 5.47 மணி முதல் 6.25 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் பெரியாவுடையார் கோவிலில் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அன்னாபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
- மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படுகின்றன.
- நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு முடிந்த நிலையில் இருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் இன்று கொட்டி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள், வெளியிடங்களில் மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படுகின்றன.
இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தி வரப்படும் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் செலுத்திய பிறகு கைப்பற்றப்பட்ட மதுபானங்கள்கொட்டி அழிக்கப்படும்.
அதன்படி நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு முடிந்த நிலையில் இருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் இன்று கொட்டி அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைைமயில் போலீசார் பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை தரையில் குழி தோண்டி அதில் ஊற்றி அழித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
- நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்த பின்னரும் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்த பின்னரும் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது படங்கள் வெளியாகும் சமயங்களிலும், அவரது பிறந்தநாளிலும் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம்.
தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிஉள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்இமைக்கும் நொடியில் ஒரு மாற்றம் இருக்கு, தமிழகமே இன்றும் காத்திருக்கு தலைவா என்ற வாசகங்களுடன் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






