என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் விசாகன் பட்டங்களை வழங்கினார்.
தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி கலெக்டர் விசாகன் பேச்சு
- பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
- தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் பேசினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது,
மாணவ, மாணவிகள் படிக்கும்போது பாடங்களை நன்கு புரிந்து படிக்க வேண்டும். அதேபோல் படிக்கின்ற காலத்திலேயே உயர்கல்வியில் எந்த துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து அதற்கேற்ப பாடங்களை படிக்க வேண்டும். படித்தோம், பட்டம் வாங்கினோம், வேலை கிடைத்தது என்றாலும் படிக்கும்போது நன்றாக படித்தால்தான் பணியில் திறமைகளை வெளிக்காட்டி ஒளிர முடியும்.
மாணவ, மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதில் 'நான் முதல்வன்' திட்டத்தில் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது. அதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது போட்டியான உலகம். அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். படிக்கும் பாடங்களை நன்று உணர்ந்து படிக்க வேண்டும். பல லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்களே என்ற கவலை அடைய கூடாது. அதில் முழுமையாக போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தி படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். அவர்களில் 500 அல்லது ஆயிரம் நபர்களுக்குள் வந்தால் போதும் அரசு பணி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
அரசு தொழில் தொடங்கிட ஒரு கோடி ரூபாய் வரை கடன்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவி, ரூ.10 லட்சம் வரை பிணையில்லாத கடனுதவி உள்ளிட்ட நீட்ஸ் திட்டம், தாட்கோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் கடனுதவிகளை வழங்கி வருகிறது. தொழில் தொடங்குவதன் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார்.






