என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது.
    • முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள மட்டப்பாறையை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும், திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சாமிநாதனின் 15 வயது மகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவே சிறுமி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவருடன் சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இந்த சிறுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு அழகர்சாமியுடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே குழந்தையுடன் அவரை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர்.

    சம்பவத்தன்று திருப்பூர் ரெயில்நிலையத்தில் அழுதபடி கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதனைதொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் வழக்குபதிவு செய்து இந்த வழக்கை நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பேபி விசாரணை மேற்கொண்டதில் 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது. முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து வாசிக்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவில் முத்துக்குமாரசுவாமி சன்னதியில், யுகாதி பண்டிகையையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அங்கு பஞ்சாங்கத்தை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன், முருகப்பெருமான், சிவன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு சாயரட்சை பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பஞ்சாங்கம் படிப்பதற்காக மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பஞ்சாங்க புத்தகங்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் குருக்கள் செல்வ சுப்பிரமணியம் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பஞ்சாங்கம் படிப்பதை காதால் கேட்பதால் செல்வம், ஆயுள் பெருகும், தீயவை அழிக்கப்படும், காரிய வெற்றி ஏற்படும், ஓராண்டு முழுவதும் கோவில்களுக்கு சென்று வந்த பலனை தரும் என்று அவர் தெரிவித்தார். பின்னர் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

    பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு மழை வளம், பலன், கிரகங்களின் நிலை மற்றும் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • தேரோட்டம் 4-ந்தேதி நடைபெறுகிறது.
    • 7-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகன் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    மேலும் கோடைவெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்த காவடி எடுத்து வந்துஅபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும். சிறப்பு வாய்ந்த இத்திருவிழா வருகிற 29-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் மலைக்கோவிலில் உச்சிகாலத்தில் காப்பு கட்டு நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி தினசரி தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியாலான காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளிரதத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 4-ந்தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • சிட்டு குருவிகள் வாழ்விடம் குறைந்துள்ளதால் எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
    • சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும் என மாணவிகள் பதாகைகளை ஏந்தி பேரணியாக வந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறை சார்பில் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஏரிச்சா லையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அன்னை தெரசா மகளிர் பல்கலை க்கழக மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் சக்திவேல் உரையாற்றினார்.

    சிட்டு குருவிகள் டெல்லியின் மாநில பறவையாக இருப்பதாகவும், மணிக்கு 45 கி.மீ வேகத்தில் பறக்க கூடியது என்றும், 30 கிராம் எடை மற்றும் 17 சென்டி மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை இந்த சிட்டு குருவிகள் ஆகும். சிட்டு குருவிகள் வாழ்விடம் குறைந்துள்ளதால் எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளதாகவும் எடுத்துரைத்தார். மேலும் விவசாய நிலங்களில் அதிகமான ரசாயனம் கலந்த உரங்கள் பயன்படுத்துவதனாலும், செல் போன் அலைக்கற்றையின் கதிர் வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்றார்.

    இதனையடுத்து ஏரிச்சாலை யில் இருந்து பேரணி தொடங்கி நகராட்சி காந்தி பூங்காவில் நிறைவு பெற்றது. இதில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும் என மாணவிகள் பதாகைகளை ஏந்தி பேரணியாக வந்தனர். கோடைகாலத்தை முன்னிட்டு குருவிகளுக்கு வீட்டின் மாடி பகுதியில் தண்ணீர் மற்றும் இரை, தானியங்கள் வைக்க மண் பானைகளும் வனத்துறை சார்பில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    • திண்டுக்கல்லில் உள்ளது பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில்.
    • திருவிழா முடிவடைந்ததையடுத்து கோவிலில் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா தொடங்குவதற்கு முன்பு அம்மனின் தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப்படுவதும், அதன்பிறகு திருவிழா நிறைவு பெற்றதும் மீண்டும் அம்மன் தங்கத்தேர் உலா தொடங்குவதும் வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு மாசித்திருவிழா தொடங்குவதற்கு முன்பு அம்மனின் தங்கத்தேர் உலா நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது திருவிழா முடிவடைந்ததையடுத்து கோவிலில் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது.

    அந்த வகையில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் தங்கத்தேர் உலா நடக்கிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தக்காளி 1 கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை கேட்க ப்பட்டதால் வேதனையடைந்த விவசாயிகள்
    • தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வடதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கு தனி மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்க ளான மோர்பட்டி, தீத்தா கிழவனூர், நடுப்பட்டி, கல்பட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

    சென்னை, கோவை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளிமாநில தக்காளிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கிராமங்களிலும் அதிக அளவில் தக்காளி விளைந்துள்ளது. இதனால் அய்யலூர் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து காணப்ப ட்டது.

    தரமான தக்காளிகள் 2 முதல் 5 வரை ஏலம் போனது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.60 முதல் ரூ.170 வரை விற்பனை யானது. ஒரு கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை கேட்க ப்பட்டதால் வேதனை யடைந்த விவசாயிகள் தக்காளி களை சாலை யோரம் வீசி சென்றனர்.

    இங்கு தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.


    • கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை தாக்குப்பிடித்த பயணிகள் இதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தனர்.
    • ஒட்டன்சத்திரம் வந்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர்.

    ஒட்டன்சத்திரம்:

    கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசு சொகுசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 45 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் ஏ.சி. பெட்டிகள் பழுதடைந்து அதில் இருந்து தண்ணீர் வழிந்தபடியும், இருக்கைக்கு அடியில் கொசுக்கள் கடித்தபடியும் இருந்தது.

    சொகுசு பஸ் என்று கட்டணம் வசூலித்து பயணிகளை கொசுக்கடிக்க வைத்த நிலை குறித்து கண்டக்டரிடம் கேட்டபோது பல நாட்களாகவே இதேபோல்தான் உள்ளது. இதுகுறித்து டெப்போவில் கூறி உள்ளோம். விரைவில் சரி செய்வார்கள் என்றார். இருந்தபோதும் கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை தாக்குப்பிடித்த பயணிகள் இதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தனர்.

    ஒட்டன்சத்திரம் வந்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். ஒருவர் தனது சொந்த செலவில் அங்குள்ள கடையில் கொசு மருந்து வாங்கி ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே அடித்து கொசுவை கட்டுப்படுத்தினார். அதன்பிறகு 10 நிமிடம் கழித்து சொசுகு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பட்டப்பகலில் பயணித்த அரசு பஸ்சில் கொசுத்தொல்லை ஏற்பட்ட காரணம் பழுதடைந்த மின்சாதனப்பெட்டி மற்றும் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் வழிந்துகொண்டே இருந்ததால் கொசுக்கள் அதிக அளவு காணப்பட்டது. இதனை பல நாட்களாக போக்குவரத்துக்கழக நிர்வாகம் சரிசெய்யாததால் இனி வரும் காலங்களிலாவது விரைந்து சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயணிகள் ஏ.டி.வி.எம் எந்திரத்தில் உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி பணத்தை செலுத்தி பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
    • மற்றொரு எந்திரமும் விரைவில் செயல்பட தொடங்கும் என்று தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் வசதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.டி.வி.எம் எந்திரங்களில் ரெயில்வே நிர்வாகம் அனுமதித்த முகவர்களிடம் பணம் செலுத்தி பயணிகள் பயணச்சீட்டு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் 2 புதிய பயணச்சீட்டு பெறும் எந்திரங்கள் ரெயில்வே நிர்வாகம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே அலுவலர்கள் கூறியதாவது,

    முகவரிடம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதற்கு கூடுதலாக 2 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் நிறுவப்பட்டன. யூ.டி.எஸ் என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்த பயணிகள் ஏ.டி.வி.எம் எந்திரத்தில் உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி பணத்தை செலுத்தி பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் 2 புதிய ஏ.டி.வி.எம். எந்திரங்களில் ஒரு எந்திரம் கடந்த 2 நாட்களாக செயல்பாட்டில் உள்ளது. மற்றொரு எந்திரமும் விரைவில் செயல்பட தொடங்கும் என்று தெரிவித்தனர். இதேபோல பழனி ரெயில்நிலையத்திலும் 2 பயணச்சீட்டு பெறும் புதிய எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மழை காரணமாக வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பியர் சோழா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் காட்டுத்தீ பற்றி அரிய வகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் கருகி நாசமாகின.

    வனத்துறையினர் காட்டத்தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இருந்த போதும் அவ்வப்போது திடீரென பற்றும் காட்டுத்தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த திடீர் மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இதனால் வனத்துறையினர் நிம்மதியடைந்தனர். மழை காரணமாக வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பியர் சோழா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது. குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தவாரே தரையிறங்கிய மேக கூட்டத்தை உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாத மத்தியில் கோடை விடுமுறை தொடங்கும் என்பதால் அப்போது சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோர்ட்டு அனுமதியுடன் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் கொண்டுவரப்பட்டன.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை போலவே பல்வேறு இடங்களில் கிடாமுட்டு போட்டியும், சேவல் சண்டைகளும் நடத்தப்பட்டு வந்தன. இதுபோன்ற போட்டி நடைபெறும் இடங்களில் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை நடந்ததால் இதற்கு தடைவிதிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூரில் இன்று கிடாமுட்டு போட்டி நடத்தப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் கொண்டுவரப்பட்டன.

    மைதானத்தில் ஆவேசத்துடன் நீண்டநேரம் நின்று களமாடி எதிரில் உள்ள கிடாவை நிலைகுலைய செய்த கிடாவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிடாக்கள் ஆவேசமாக முட்டியபோது கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

    வெற்றிபெற்ற கிடாவின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

    • தனிப்படை போலீசார் ரெயில் நிலைய சாலை பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • குழந்தையை விற்பதற்காக கடத்தல் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் கரட்டூரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார். இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (வயது25).இவர்களுக்கு ஷாலினி என்ற 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    இவர்கள் நேற்று குழந்தையுடன் மதுரைக்கு ரெயில் மூலம் வந்தனர். அப்போது நள்ளிரவு என்பதால் குழந்தையுடன் 2 பேரும் ரெயில் நிலைய முகப்பு பகுதியில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 2 மணி அளவில் செய்யது அலி பாத்திமா கண் விழித்தபோது அவரது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவருடன் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து செய்யது அலி பாத்திமா மதுரை திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். குழந்தை மாயமானது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் உத்தர விட்டார். அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத், உதவி கமிஷனர் மகேஷ் தலைமையில் திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் ரெயில் நிலைய சாலை பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் செய்யது அலி பாத்திமா அருகில் படுத்திருந்த குழந்தையை மர்ம நபர் ஆட்டோவில் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் குறிப்பிட்ட ஆட்டோ காளவாசல் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடம் சென்று அங்கு குழந்தையுடன் பதுங்கி இருந்த மேலூர் வெள்ளலூரை சேர்ந்த போஸ் (35) என்பவரை கைது செய்து குழந்தை ஷாலினியை பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சேர்ந்த புருசோத்தமன் மனைவி கலை வாணி (33) தூண்டுதலின் பேரில் குழந்தையை கடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    குழந்தையை விற்பதற்காக கடத்தல் சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதுதவிர சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். சாதாரண நாட்களை தவிர்த்து முகூர்த்தம், வாரவிடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் பழனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக மலைக்கோவிலில் வெளிப்பிரகாரம் வழியாக பக்தர்கள் செல்லும், சுட்டெரிக்கும் வெயிலால் அவதியடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்க உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் அவதியடைவதை தவிர்க்க பழனி முருகன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு வெளிப்பிரகாரத்தில் பந்தல் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேற்கு வெளிப்பிரகாரத்தில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பந்தல் அமைக்கப்பட்டதால் வெளியூர் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்னர் அவற்றின் நிழலில் இளைப்பாறி செல்கின்றனர். அதேபோல் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

    ×