என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 3 பேர் வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.
    • அவர்களிடம் இருந்து குருவி, கவுதாரி, முயல் ஆகிய விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியில் வனத்துறையினர் வனவர் ஜெயசீலன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது 3 பேர் வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது. பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுந்தர் மகன் சரண்ராஜ் (33), கலைவாணன் மகன் சூர்யா (23), பிரபு (39) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து குருவி, கவுதாரி, முயல் ஆகிய விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்கள் 3 பேர் மீதும் தலா ரூ.3000 வீதம் ரூ.9000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டியவுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இது குறித்து வனச்சரகர் தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட பறவை மற்றும் உயிரினங்களை வேட்டையாடுவது சட்ட ப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டையாடும்பறவை, வன விலங்குகளை வாங்கும் பொதுமக்கள் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிவித்தார்.

    • தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள தால் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • விலை உயர்வு மற்றும் சரிவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம், அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, காவேரியம்மாபட்டி, இடையக்கோட்டை, புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்ததால் ஆர்வமுடன் பயிரிட்டனர். இந்த நிலயைில் தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள தால் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.

    எனவே விலையும் சரியத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சின்ன வெங்காயம் ரூ.7800ல் இருந்து ரூ.8400 வரை வியாபாரிகளால் கொ ள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.1800 முதல் ரூ.2400 வரை மட்டுமே விலை கேட்கப்படு வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தினசரி ஒட்ட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் சின்ன வெங்காயம் வரத்து உள்ளது. மேலும் சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு மற்றும் சரிவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு விவசாயி களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்பகுதியில் பிரபல நடிகர் ஒருவர் வீட்டிற்கு அருகில் உள்ள சாலையை தனியார் ரியல் எஸ்டேட் அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
    • இந்த சாலையை யாரும் பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டியில் இருந்து பாரதி அண்ணாநகர் கிராமத்திற்கு செல்ல 6 கி.மீ. சாலை உள்ளது. இப்பகுதியில் உள்ள வெங்கலவயல், பேத்துப்பாறை, ஓராவி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் பிரபல நடிகர் ஒருவர் வீடு வாங்கியுள்ளார். வீட்டிற்கு அருகில் உள்ள சாலையை தனியார் ரியல் எஸ்டேட் அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும் இந்த சாலையை யாரும் பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார். இதனால் பல ஆண்டுகளாக இந்த சாலையை பயன்படுத்தி வந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட வனத்துறை, கலெக்டர் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியோருக்கு விவசாயிகள் புகார் மனு அனுப்பியுள்ளனர். வருவாய்த்துறையினர் முறையாக ஆய்வு செய்து பாதை ஒதுக்கி தரவேண்டும். இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நடிகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • முதற்கட்ட விசாரணையில் ரெயிலில் இருந்து தவறிவிழுந்த நபர் ராஜபாளையத்தை சேர்ந்தவர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே கீரனூர் பகுதியில் சென்னை நோக்கி சென்ற ரெயிலில் இருந்து ஒருவர் தவறிவிழுந்து படுகாயமடைந்தார். இதுகுறித்து அவரது உறவினருக்கு அவர் செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். அவர் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து அந்த நபர் செல்போன் சிக்னலை வைத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருப்பதி மற்றும் உமா ஆகியோர் அவரை ரெயில் தண்டவாள பகுதியில் 3 மணிநேரம் தேடி கண்டுபிடித்தனர்.

    படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ரெயிலில் இருந்து தவறிவிழுந்த நபர் ராஜபாளையத்தை சேர்ந்த பூபதி(40) என தெரியவந்தது.

    மேலும் அவர் ராஜபாளையத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்ததும், கீரனூர் பகுதியில் எதிர்பாராத விதமாக தவறிவிழுந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து பூபதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • டிக்கெட் வழங்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்டேக் 3 கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
    • முழுமையாக பணிகள் முடிந்த பின்னர் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தாமல் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர்சதுக்கம், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அந்தந்த நுழைவுவாயிலில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய கட்டணமுறை அமல்படுத்தப்பட்டது. அதில் சுங்ககட்டணம், கார், பஸ், வேன், வாகன சான்றிதழ்கள் சரிபார்ப்பு என புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், முக்கிய நிர்வாகிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் மொத்தமாக ஒரே இடத்தில் ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. டிக்கெட் வழங்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்டேக் 3 கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டு அதிக வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார்பார்க்கிங்க அமைக்கப்பட்டு வருகிறது.

    குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. முழுமையாக பணிகள் முடிந்த பின்னர் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தாமல் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சலுகை கட்டணத்தில் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வனஅலுவலர் யோகேஸ்குமார் மீனா மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.
    • திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 49 பள்ளிகளைச் சார்ந்த 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, ஓவியம் ,கட்டுரை,பேச்சுப் போட்டி, சமையல் உள்பட பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. ஏ.யு. ஆர்.ஏ.2023 கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 49 பள்ளிகளைச் சார்ந்த 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் 9,10,11, 12-ம் வகுப்புகளுக்கான பிரிவுகளில் 140 புள்ளிகளைப் பெற்று மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.பி.ஆர்.பொறியியல் கல்லூரி முதல்வர்கள் சுந்தரராஜன், கலை அறி வியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தற்போது ஒரு பெட்டி ரூ.150லிருந்து ரூ.300 வரை தரத்திற்கேற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.
    • அதிகளவில் பயிரிட்டதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, காவேரியம்மாபட்டி, இடையகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தக்காளி, கத்தரிஉள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    சராசரியாக 2000 பெட்டிகள் விவசாயிகளால் கொண்டுவரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு மேல் விலை விற்கப்பட்டதால் சாமானிய மக்கள் கடும் அவதியடைந்தனர். சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேசன்கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது. இருந்தபோதும் விலை குறையாமலேயே இருந்தது.

    அப்போதும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி சென்று வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்றனர். இந்தநிலையில் தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.1300 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விலை கேட்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஒரு பெட்டி ரூ.150லிருந்து ரூ.300 வரை தரத்திற்கேற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.20 வரை மட்டுமே விலை கேட்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சில்லரை விலையில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். அதிகளவில் பயிரிட்டதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கடுமையாக சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது.
    • கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலியானார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்ைட அருகில் உள்ள குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(37). டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது.

    நேற்றுஇரவு பாண்டி கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அலறி துடித்தார். இதைபார்த்ததும் அவரது மனைவி உதயசூரியா(30) என்பவர் தனது கணவரை காப்பாற்றுவதற்காக முயன்றார். கணவரை தள்ளிவிட்ட மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயத்துடன் 2 பேரையும் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே உதயசூரியா இறந்துவிட்டார்.

    கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாண்டி பலத்த காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 72 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மின் இழுவை ரெயிலை இயக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
    • தற்போது 2 பெட்டிகளும் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

    பழனி:

    பழனி மலைக்கோவிலுக்கு செல்ல படி வழிக்கு மாற்றாக மேற்கு கிரி வீதியில் இருந்து 3 பாதைகளில் மின் இழுவை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2 பெட்டிகளில் 36 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் ஒவ்வொரு ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 72 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மின் இழுவை ரெயிலை இயக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக 3-வது தண்டவாளத்தில் பெட்டிகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெட்டி மட்டும் பொருத்தப்பட்டு முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 2 பெட்டிகளும் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. வடகயிற்றின் இழுவை திறன், பெட்டியின் நகரும் தன்மை, தண்டவாளத்தின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவில் எடை அளவு வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும்.

    அதன்பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவினர் ஆய்வுக்கு பிறகு இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதையடுத்து இந்த மின் இழுவை ரெயில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பணம் கையாடல் செய்ததாக கார் டிரைவருக்கும், அ.தி.மு.க பிரமுகருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • இந்நிலையில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை எரித்தனர். புகாரின் பேரில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சுரேஷ்(29). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் அதேபகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான நடராஜன் என்பவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி நடராஜனின் நெய் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாக சுரேசை தனது வீட்டிற்கு வரவழைத்தார். அதன்பிறகு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வீட்டில் கொண்டு சேர்த்தனர். அவரது தாயார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்து சுரேஷ் உடலை எரித்துவிட்டார். இந்நிலையில் சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், இது வெளியில் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்து விட்டதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து எரிக்கப்பட்ட சுரேஷ் சாம்பலை போலீசார் எடுத்துச்சென்றனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த 32 மாணவ-மாணவிகள் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. போட்டியை தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பொது பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் ஆர்ட்ஸ்டிக், ரிதமிக் ஆகிய பிரிவுகளில் வயது அடிப்படையில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த 32 மாணவ-மாணவிகள் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் செயலாளர் நித்யா, ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
    • திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சரவணன், மைய ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×