என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சிறுமியுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துராஜ் மகன் குணா நட்பாக பழகி வந்தார்.
    • சிறுமியின் தாயார் பார்வதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சித்ரரேவு கிராமத்தை சேர்ந்த மாவீரன் மனைவி பார்வதி (வயது 45). இவருக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவரது 3வது மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துராஜ் மகன் குணா (வயது 25) என்பவர் நட்பாக பழகி வந்தார். நாளடைவில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதில் அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கூறினார். ஆனால் திருமணத்திற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க குணா, அவரது தந்தை முத்துராஜ், உறவினர்கள் ருத்ரா, கல்யாணசுந்தரம், தர்மதுரை ஆகிய 5 பேர்களும் சேர்ந்து முயன்றுள்ளனர். இதற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது டாக்டர்கள் கர்ப்பத்தை கலைக்க முடியாது எனக் கூறினர்.

    இதனால் கர்ப்பத்திற்கு குணாதான் காரணம் என யாரிடமும் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் பார்வதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி புகாரை பெற்றுக்கொண்டு சிறுமியை சீரழித்த குணா மற்றும் உடந்தையாக இருந்த முத்துராஜ், ருத்ரா, கல்யாணசுந்தரம், தர்மதுரை ஆகிய 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு நேற்று இரவு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றனர்.
    • போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது புகை வருவதை பார்த்து அங்கு சென்றார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு நேற்று இரவு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் இந்த மோட்டார் சைக்கிள்களை மர்ம கும்பல் தீ வைத்து எரித்தனர்.

    ரெயில்வே பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது புகை வருவதை பார்த்து அங்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

    இருந்த போதும் மோட்டார் சைக்கிள்களின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமானது. தீவைத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்த அனுமதி கிடையாது என்பதும், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாததால் தீவைத்து சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • இப்பணிக்கு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர்.
    • ஆனால் துணை இயக்குனர் இவர்களை பார்க்காமல் சென்று விட்டதால் செவிலியர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் சுகாதார பணிகள் துணைஇயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு துணை இயக்குனராக வரதராஜன் என்பவர் உள்ளார். இவரிடம் கிராம சுகாதார செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க நேற்று மாலையில் வந்தனர்.

    கிராம சுகாதார செவிலியர்களுக்கு புதிய இணையதள பதிவு பணி வழங்கப்பட்டுள்ளதால் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர்.

    ஆனால் துணை இயக்குனர் இவர்களை பார்க்காமல் சென்று விட்டதாக ெதரிகிறது. இதனால் செவிலியர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினர். விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் இன்றும் 2ம் நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நிர்மலா தெரிவிக்கையில்,

    எங்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்கக்கூட துணை இயக்குனர் மறுத்து வருகிறார். போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரை கொண்டு மிரட்டி வருகின்றனர். மேலும் குற்ற குறிப்பாணையை காட்டியும் மிரட்டுகின்றனர். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    இதனால் துணை இயக்குனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(25-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நத்தம்:

    செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(25-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி,மல்லநாயக்கன்பட்டி,களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்து பட்டி, ரெங்கைய ன்சேர்வை காரன்பட்டி, திருநூத்து ப்பட்டி,நல்லபிச்சன்பட்டி,ஒத்தக்கடை,

    சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, பிள்ளையார்நத்தம்,மாதவநாயக்கன்பட்டி, கோசு குறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்கா ட்டூப்பட்டி,சின்னராசிபுரம்,மணக்காட்டூர், அடைக்கனூர், தொண்டபுரி,குடகிப்பட்டி,மந்தகுளத்துப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய பகுதி களில் மின்சாரம் வினி யோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர், வெங்க டேசன் தெரிவித்துள்ளார்.

    • நாளை வரலட்சுமி விரதம் மற்றும் கேரளாவில் வருகிற 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
    • பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் தமிழகத்தின் 2வது பெரிய பூ மார்க்கெட் ஆக விளங்குகிறது. நிலக்கோட்டை பகுதியை சுற்றி பூக்கள் சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

    நாளை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. மேலும் கேரளாவில் வருகிற 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையை யொட்டி உள்ளூர் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்ய நிலக்கோட்டை பூ சந்தையில் கூடியதால் விலை மேலும் அதிகரித்துள்ளது.

    நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை பூ ரூ.1300 மற்றும் ரூ.1200க்கு விற்கப்பட்டது. முல்லை பூ ரூ.450 முதல் ரூ.500 வரையிலும், ஜாதிப்பூ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், கன்காம்பரம் ரூ.1000 முதல் ரூ.1200 வரையிலும், செவ்வந்திப் பூ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும், சம்பங்கி பூ ரூ.450 முதல் ரூ.500 வரையிலும், பட்டன் ரோஸ் ரூ.250, சாதா ரோஸ் ரூ.150 வரையிலும் விற்பனையானது.

    பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1100, முல்லை ரூ.340, அரளி ரூ.150, கோழிக்கொண்டை, செண்டுமல்லி தலா ரூ.30, ரோஜா ரூ.160, சம்பங்கி ரூ.150 என விற்பனையானது. ஓணம் பண்டிகைக்காக வாடாமல்லி 30 டன்வரை பூமார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வரத்து அதிகரிப்பால் கடந்தவாரம் கிலோ ரூ.30க்கு விற்பனையான வாடாமல்லி இன்று ரூ.15க்கு விற்கப்பட்டது.

    அதிக அளவில் பூக்கள் கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ஆண்கள் பொது வழியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதால் நடந்து செல்ல பெண்கள் தயக்கம் காட்டினர்.
    • பேரூராட்சி மன்ற 8-வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் சமூக ஆர்வலர்கள் உதவி யுடன் சாலையோர பூங்கா அமைத்த அதில் பசுமை நிறைந்த இயற்கை படங்கள் வரையப்பட்டு பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பஸ் நிலையம் பின்புறம் டென்னிஸ் கிளப் ரோட்டில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. அப்போது மது பிரியர்கள் மது அருந்திவிட்டு அந்தப்பகுதி சாக்கடையில் சிறுநீர் கழிப்பது பொதுவெளியில் மது அருந்துவது போன்ற சம்பவம் நடந்து கொண்டிருந்தது.

    இதனால் பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நடந்து செல்வதற்கு அச்சப்பட்டனர். தற்போது தமிழக அரசு அந்தப் பகுதியில் இருந்த 2 டாஸ்மாக் கடையை அகற்றியதற்கு உறுதுணையாக இருந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    காந்திநகர் பகுதியில் சுமார் 5,000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆண்கள் பொது வழியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதால் நடந்து செல்ல பெண்கள் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் வத்தலக்குண்டு பேரூராட்சி மன்ற 8-வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் சமூக ஆர்வலர்கள் உதவி யுடன் 200 அடி நீளத்திற்கு சாலை ஓரம் பூங்கா அமைத்து சுவற்றில் திருவள்ளுவர், சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பசுமை நிறைந்த இயற்கை படங்கள் வரையப்பட்டு பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன.

    பல வண்ண பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.வத்தலக்குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கி சாலையோர பூங்காவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    வத்தலக்குண்டு பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சக்தி கிளினிக் டாக்டர் தெய்வேந்திரன், தொழிலதிபர் திருமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் சாலையோர பூங்கா அமைப்பதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் 8 -வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    • கடைசி நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் உழவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • வருங்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயத்துக்கு ஏதுவாக இருக்கும்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சீத்தாபுரம், என். ஊத்துப்பட்டி, பிள்ளையார் நத்தம், மிளகாய் பட்டி, சிலுக்குவார் பட்டி, விளாம்பட்டி, மைக்கேல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. ஆடி மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட குறைவாக இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் உழவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். டிராக்டர், மாடுகள் மற்றும் எந்திர கலப்பைகள் மூலமாக உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மாறுபட்ட சீேதாசணத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி வறண்டு கிடக்கும் நிலங்களை டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டுள்ளோம்.

    வருங்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயத்துக்கு ஏதுவாக இருக்கும். இதில் மானாவாரி பயிர்கள் பயிரிட முடிவு செய்துள்ளோம். எனவே விவசாயத்திற்கு மழையை மட்டுமே முழுமையாக நம்பி உள்ளோம் என்றனர்.

    • தெற்குத் தெரு வெள்ளாளர் பெருமக்கள் சங்க மண்டகப்படிக்கு எழுந்தருளும் மண்டபம் புதுப்பிக்கப்பட்டு திருக்கண் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கந்தப்ப ஆதீனம் சர்வசாதகம் திருநாவுக்கரசு குருக்கள் வேதங்கள் முழங்க கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து கலசங்களுக்கு பூஜை செய்து பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலகுண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் நகர்வலம் வரும்பொழுது தெற்குத் தெரு வெள்ளாளர் பெருமக்கள் சங்க மண்டகப்படிக்கு எழுந்தருளும் மண்டபம் புதுப்பிக்கப்பட்டு திருக்கண் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கந்தப்ப ஆதீனம் சர்வசாதகம் திருநாவுக்கரசு குருக்கள் வேதங்கள் முழங்க கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து கலசங்களுக்கு பூஜை செய்து பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பழைய வத்தலக்குண்டு தெற்குத் தெரு வெள்ளாளர் பெருமக்கள் சங்க தலைவர் நிர்வாகிகள் செய்திருந்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தெற்கு தெரு பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் நாட்டாமைகள் சதாசிவம்பிள்ளை, கதிரேசன்பிள்ளை, மணியக்காரர் பழனிவேல்பிள்ளை, கவுரவத் தலைவர் மகாராஜன்பிள்ளை, தலைவர் நமச்சிவாயம்பிள்ளை, துணைத்தலைவர் அங்குபிள்ளை, செயலாளர் சேகர்பிள்ளை,துணைச் செயலாளர் உதயசூரியன்பிள்ளை, பொருளாளர் ராஜேந்திரன்பிள்ளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பழைய வத்தலகுண்டு ஊராட்சி மன்ற தலைவர் யசோதைமுருகேசன்பிள்ளை, வத்தலக்குண்டு வெள்ளாளர் பெருமக்கள் சங்க தலைவர் ஜெயமாணிக்கம்பிள்ளை மற்றும் தெற்குத் தெரு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை வத்தலக்குண்டு ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் செய்திருந்தார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கார்த்திக்பிள்ளை நன்றி கூறினார்.

    • சுபமுகூர்த்தம் மற்றும் விழாக்காலங்களில் தேவை அதிகமாக இருப்பதால் வாழைப்பழதார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • வியாபாரிகளே அதிக விலை கொடுத்து வாங்குவதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறோம் என்றார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நத்தம், ஆத்தூர், தர்மத்துப்பட்டி, சுரைக்காய்பட்டி, மல்லையாபுரம், கன்னிவாடி, எரியோடு குஜிலியம்பாறை மற்றும் கரூர், குளித்தலை, தேனி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஆண்டு முழுவதும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வாழைத்தார் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுபமுகூர்த்தம் மற்றும் விழாக்காலங்களில் தேவை அதிகமாக இருப்பதால் வாழைப்பழதார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து வாழைப்பழ வியாபாரிகள் சங்கச் செயலாளர் பாண்டி கூறியதாவது:-

    வாழைத்தார் வரத்து குறைவானதால் வாழைப்பழங்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.300க்கு விற்ற பச்சை வாழைப்பழத்தார் ரூ. 600க்கும், ரூ.300 க்கு விற்ற கற்பூரவள்ளி ரூ.500க்கும், ரூ. 250 க்கு விற்ற நாட்டுப்பழம் ரூ. 450க்கும், ரூ.600 க்கு விற்ற செவ்வாழை ரூ.1100 க்கும், ரூ.400 க்கு விற்ற ரஸ்தாலி ரூ.700க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விலையில் செவ்வாழை ரூ.12க்கும், பச்சைப்பழம் ரூ.5க்கும், கற்பூரவல்லி, பூவன் ரூ.6 க்கும், ரஸ்தாலி ரூ. 7க்கும், நாட்டுப்பழம் ரூ.5 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தினசரி தேவையை விட வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே உள்ளது. அதிக விலை கொடுத்து வாங்குவதால் நாங்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறோம் என்றார்.

    • நிறுவனத்திற்கு சேரவேண்டிய ரூ.6 லட்சத்தை சுரேஷ் கையாடல் செய்து தலைமறைவானார்.
    • மீதி பணத்தை கேட்ட நாங்கள் 6 பேரும் சுரேசை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்தவர் சுரேஷ்(28). இவர் அ.தி.மு.க பிரமுகர் நடராஜனிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் நடத்தி வரும் நெய் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உறவினர் வடிவேலை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மனோகரன்(45), பாண்டி(37), தேனியை சேர்ந்த சிவஞானம்(58), நிலக்கோட்டையை சேர்ந்த சதீஸ்குமார்(29), திருப்பூரை சேர்ந்த முத்துக்குமார்(23) ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கார் டிரைவரை ெகான்றது ஏன் என 6 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சுரேஷ் வேலை பார்த்த இடத்தில் வடிவேல், மனோகரன், பாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்திற்கு சேரவேண்டிய ரூ.6 லட்சத்தை சுரேஷ் கையாடல் செய்து தலைமறைவானார். இதனைதொடர்ந்து தென்காசியில் இருந்த அவரை அம்பிளிக்கை அழைத்து வந்தனர்.

    பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.3லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தார். இதனால் மீதி பணத்தை கேட்ட நாங்கள் 6 பேரும் சுரேசை கடுமையாக தாக்கினோம். இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடினோம். அதன்பின்னர் வடிவேல் மற்றும் உறவினர்களுடன் சுரேசின் உடலை மயானத்தில் எரித்தோம்.

    இருந்தபோதும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது.

    வேடசந்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சவுடேஸ்வரி கோவிந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் நாகலட்சுமி மருத பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் கவிதா முருகன், தட்டாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சத்தீஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் சின்னசாமி,துணை வேளாண்மை அலுவலர் பாலமுருகன்,வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • பழைய கட்டணம் முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து இடங்களுக்கும் ஒரு நபருக்கு ரூ.30 என வசூலித்தனர்.
    • இதனால் ஆத்திரமடைந்த டாக்சி டிரைவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர்சதுக்கம், பைன்பாரஸ்ட், தூண்பாறை, குணாகுகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. 12 கி.மீ சுற்றளவில் உள்ள இந்த சுற்றுலா தலங்களுக்கு ஒரே இடத்தில் ரூ.30 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் வாகனங்களின் நுழைவுகட்டணம், காமிரா கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதற்கு டாக்சி டிரைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட வனஅலுவலர் யோகேஸ்குமார் மீனாவிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பழைய கட்டணம் முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து இடங்களுக்கும் ஒரு நபருக்கு ரூ.30 என வசூலித்தனர்.

    இதனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட சுற்றுலா வாகன ஓட்டிகள் முடிவு செய்தனர். நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்து மோயர் சதுக்கத்தில் உள்ள கட்டண வசூல் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டாக்சி டிரைவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மாவட்ட உதவி வனபாதுகாவலர் சக்திவேல் டாக்சி டிரைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவர்கள் பல்வேறு கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட வனஅலுவலர் யோகேஷ்குமார் மீனா கூறுகையில், வருகிற 28-ந்தேதி வரை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பழைய கட்டணமுைறயே வசூலிக்கப்படும்.

    உள்ளூர் சுற்றுலா வாகனங்கள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. பேரிஜம் ஏரிக்கு செல்ல பழைய கட்டுப்பாடுகள் தொடரும் என்றார்.

    ×