என் மலர்
திண்டுக்கல்
- பசுமை தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
- வனத்துறை சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்:
பசுமை தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து மரக்கன்றுகள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் பசுமைப் பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளில் 23.69 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் உருவாக்கப்பட்டது. கடந்த 24.09.2022 அன்று பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கியது. ஓராண்டு நிறைவடைவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் துறை வாரியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மரங்கள் வளர்ப்பும், அதன் பயன் குறித்தும் பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மேலும் வனத்துறை மூலம் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்கள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோர பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள், தனியார் நிலங்கள், குளக்கரைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள், மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்ய வழங்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் மரக்கன்றுகளை பெற தங்களது ஆதார் அட்டை நகல், பட்டா அல்லது சிட்டா நகல், 2 புகைப்படம் கொண்டு வந்து இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் திண்டுக்கல் உதவி வனப்பாதுகாவலர் ஸ்ரீநிவாசன், மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள், வனத்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது.
- உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும், ஒளிரும் பட்டைகள் ஒட்டவேண்டும்.
திண்டுக்கல்:
பழனி-ஒட்டன்சத்திரம் இடையே 17 கி.மீ தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.172 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை பணிகள் தொடங்கி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இத்திட்டத்திற்காக 9.50 மீட்டர் அகலமுள்ள சாலையை 16.50 மீட்டராக அகலப்படுத்தப்பட்டது.
மேலும் சாலையோரங்களில் இருந்த 700-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது பழனி-திண்டுக்கல் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழைநீர் வடிந்து செல்ல சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக சாலையின் இருபுறமும் பெரியபள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் தடுப்புமற்றும் அறிவிப்பு பலகை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது.
எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்க ேவண்டும், ஒளிரும் பட்டைகள் ஒட்டவேண்டும். பணி நடைபெறும்போது எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (25ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (25ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் குளத்தூர், சூடாமணிபட்டி, நல்லமனார்கோட்டை, புளியமரத்துப்பட்டி, காளனம்பட்டி, கொசவப்பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கும், அதனை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- பழனி முருகன் கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
- அக்.1ந் தேதி முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது
திண்டுக்கல்:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயில் வளாகத்தில் மொபைல் போனில் தங்களை படம் பிடித்து மகிழ்வர். இந்நிலையில் பழனி முருகன் கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அதில் வருகிற அக்.1ந் தேதி முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது. இந்த உத்தரவை பழனி மட்டுமின்றி அனைத்து கோவில்களிலும் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி வருகிற அக்-1ந் தேதி முதல் பழனி முருகன் கோவிலுக்குள் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி கோவிலுக்கு தவறுதலாக மொபைல் போன், கேமரா கொண்டு வருபவர்களுக்காக, மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப்கார் மற்றும் வின்ச் ரயில் நிலையத்தில் உள்ள காலணி பாதுகாப்பு மையத்தில் மொபைல் போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அங்கு மொபைல் போன் வைப்பதற்கான ரேக்குகள், மொபைல் போன் கொடுக்கும் பக்தர்களின் விவரங்களை சேகரிக்க இன்டர்நெட் வசதியுடன் கூடிய இரண்டு கணினிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைல் போனுக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி, பக்தர்கள் தங்கள் மொபைல் போனை ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்து வந்து பெற்று கொள்ளலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
- ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை உறுப்பினர்கள் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தர்ராஜ். துணைத் தலைவராக இருப்பவர் வசந்தி மயில்வேல். ஊராட்சி மன்ற செயலராக இருப்பவர் பால்ராஜ். இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது கடந்த 3 ஆண்டுகளாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யங்கோட்டை ஊராட்சி புதூரில் உள்ள திருமண மண்டபம் அருகே 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு தலைவர் பதில் அளிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் செல்வ மகாமுனி, சரண்யா, முனிராஜா, வசந்தி, பரந்தாமன், நாகஜோதி ஆகியோர் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தியிடம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தி தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- பெரும்பாறை-சித்தரேவு மலைச்சாலையில் சில இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது.
- சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாறை:
பெரும்பாறை-சித்தரேவு மலைச்சாலையில் சில இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. மேலும் சாலையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் சாலையில் ஓடுகின்றது.
தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் சிறு, சிறு கற்கள் சாலையில் கிடக்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் தவறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் பெரும்பாறை அருகே உள்ள கீழ் இஞ்சோடை என்ற இடத்தில் சாலையின் ஒரு பகுதி தாழ்வாக உள்ளது. இதனால் கனரக வானம் சென்றுவர மிகவும் சிரமப் படுகின்றனர்.
பஸ்கள் அந்த இடத்தில் வரும்போது கவிழ்வது ேபால் சாய்ந்து செல்வதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கீழ் இஞ்சோடை சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
- மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தமிழக அரசு மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதில் விண்ணப்பம் செய்த பெண்களில் நிராகரிப்பு செய்த விண்ணப்பங்கள் அரசு அறிவித்தது போல் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டுமென தெரிவித்து இருந்தது .
இதன் அடிப்படையில் பலரும் தங்களது மறுபதிவு விண்ணப்பங்களை அனுப்பி வரும் நிலையில் கொடைக்கானலில் மலை கிராமப் பகுதி பெண்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் . குறிப்பாக இ-சேவை மையங்கள் மேல் மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் முறையாக செயல்படாததால் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தை மக்கள் நாடும் நிலை தொடர்ந்து வருகிறது.
இதனால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் பதிவு செய்யும் இடத்தில் ஒரு நபர் மட்டுமே பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாலும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது . இதனால் வயதானவர்கள் முதல் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையானது ஏற்பட்டுள்ளது .
மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விண்ணப்பம் மறுப்பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது . எனவே மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்படுகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அதனால் உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.
எனவே டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் சிறப்பு வார்டுகள் உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளில் ஒவ்வொரு படுக்கைக்கும் கொசு வலை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்வப்போது நோயாளிகளுக்கு வெந்நீர், நிலவேம்பு கஷாயம் மற்றும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பகுதிகளில் தற்காலிக காய்ச்சல் பிரிவு தொடங்கப்பட்டு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 30பேர் காய்ச்சலுக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கூறுகையில், தற்போது டெங்கு பாதிப்பு இல்லை. காய்ச்சலுடன் வருபவர்களுக்கு சிறப்பு வார்டில் அனுமதித்து 5 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்) எண்ணிக்கை குறையும். அதனால் காய்ச்சல் பாதித்தோருக்கு தினமும் ரத்தத் தட்டுகள் எண்ணிக்கையை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை பொருத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருக வேண்டும். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காதவாறு கவனித்து கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் தகுந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
- ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்.
- குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது:-
ஒட்டன்சத்திரத்தில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, கீரனூரில் 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில்தான் நமக்கு நாமே திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்ற தொகுதிக்கு காவிரி நீர் ஆதாரத்தைக்கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1000 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 180 இடங்களில் மேல்நிலைத் தொட்டிக்கள் கட்டப்படவுள்ளன. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை ஒரு இடத்தில் குவித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, அந்த குப்பைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் விதமாக உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 48 ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை ஒரு இடத்தில் குவித்து, உரம் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆறு, குளங்களில் நிலத்தடி நீர் வளத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்கள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் சீமைக்கருவேல மரங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில் 41 பயனாளிகளுக்கும், 16 பூ வியாபாரிகளுக்கும், 26 உணவு வியாபாரிகளுக்கும் என மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.51 லட்சம் மதிப்பில் 7 முதல் நிலை குப்பை சேகரம் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. மயானம் ரூ.41.10 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு மயானமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.1.53 கோடி மதிப்பீட்டிலான அரசின் திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிட இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
- திண்டுக்கல் நாகல்நகர் பால் விநாயகர் கோவிலில் திருக்குடைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- தொடர்ந்து 2 திருக்குடைகளும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அஷ்டலட்சுமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் அஷ்டலட்சுமி கோவில் சார்பில் திருப்பதி திருமலையில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் சுவாமி வீதி உலாவின் போது வாகன சேவையில் பயன்படுத்துவதற்கு 2 திருக்குடைகள் வழங்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு திண்டுக்கல் நாகல்நகர் பால் விநாயகர் கோவிலில் திருக்குடைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 2 திருக்குடைகளும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அஷ்டலட்சுமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இன்று திருமலைக்கு திருக்குடைகளை கோவில் நிர்வாகிகள் கொண்டு செல்கின்றனர்.
இந்த திருக்குடை ஊர்வலத்தில் அஷ்டலட்சுமி கோவில் தலைவர் ராமையா, செயலாளர் தில்லை நடராஜன், பொருளாளர் மாரிமுத்து, துணை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பாரதி முருகன், டாக்டர் அமிர்தகடேஸ்வரர், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமிர்தா கல்லூரி நிர்வாகிகள் காளியம்மாள், சரண்யா, சக்திவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
- திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சமூக மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
- முடிவில் அனைவரும் டெங்கு ஒழிப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சமூக மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டது. அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் டெங்கு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். துணை முதல்வர் சலீம், அனைத்து துறைத் தலைவர்கள், டாக்டர்கள் மற்றும் 300 மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் அனைவரும் டெங்கு ஒழிப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேட்டரி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- தொடர்ந்து மாநகராட்சி மூலம் 1112 பணியாளர்களுக்கு சேமநல நிதிக்கான வட்டித்தொகை ரூ.2 கோடியே 10 லட்சம் காசோலையை வழங்கினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதார பிரிவுக்கு வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்க ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 5 பேட்டரி வாகனங்கள், சாலையில் மண் அகற்றும் கருவிகள் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பெறுவதற்கு 600 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேட்டரி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி மூலம் 1112 பணியாளர்களுக்கு சேமநல நிதிக்கான வட்டித்தொகை ரூ.2 கோடியே 10 லட்சம் காசோலையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






