search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யங்கோட்டை ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் திடீர் முற்றுகை போராட்டம்
    X

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்.

    அய்யங்கோட்டை ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் திடீர் முற்றுகை போராட்டம்

    • 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
    • ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை உறுப்பினர்கள் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தர்ராஜ். துணைத் தலைவராக இருப்பவர் வசந்தி மயில்வேல். ஊராட்சி மன்ற செயலராக இருப்பவர் பால்ராஜ். இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது கடந்த 3 ஆண்டுகளாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யங்கோட்டை ஊராட்சி புதூரில் உள்ள திருமண மண்டபம் அருகே 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு தலைவர் பதில் அளிக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் செல்வ மகாமுனி, சரண்யா, முனிராஜா, வசந்தி, பரந்தாமன், நாகஜோதி ஆகியோர் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தியிடம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தி தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×