என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • குழந்தைகளுக்கு எழுத்து எழுதும் விழா இன்று தருமபுரியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
    • 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்

    தருமபுரி கேரள சமாஜத்தின் சார்பில் 22-வது ஆண்டு வித்யாரம்பம் என்கின்ற புதிதாக பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து எழுதும் விழா இன்று தருமபுரியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பகவதி கோவில் மேல்சாந்தி பகவதி சவாமி நம்பூதிரி குழுவினர் வருகை தந்து லட்சுமி, சரஸ்வதி, பகவதி, பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து எழுதும் சடங்கு நடத்தி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க எழுத்தாணியில் குழந்தைகளின் நாக்கில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுதினார்.

    பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதி நமஹ என்று எழுத வைத்து ஆசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுத்து எழுதும் சடங்கு நடத்தி வைக்கப்பட்டது.

    மேலும் குழந்தைகளுக்கு கேரளா சமாஜத்தின் சார்பில் சிலேட்டு, பென்சில், புத்தகம் உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. 

    • சாமந்தி விலை உயர்ந்து 120 ரூபாய் முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்ட ஹள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஏப்ரல் மாதம் சாகுபடிப் பணிகளைத் தொடங்கும் விவசாயிகள், செப்டம்பர் மாதத்தில் பூக்களை அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில், கோவை, திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு மட்டு மல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் சாமந்திப் பூக்களை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால் பூக்களின் விலை கடுமையாக சரிவை கண்டுள்ளது.

    ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சரஸ்வதி, ஆயுத பூஜைக்காக வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வழி பாட்டுக்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும்.

    இதனையடுத்து தருமபுரி பூக்கள் சந்தையில் நேற்று சாமந்தி, தரத்திற்கு ஏற்ப ரூ.60- முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று ேமலும் விலை உயர்ந்து 120 ரூபாய் முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதேபோல, ரூ.20 முதல் ரூ.30க்கு விற்பனையான செண்டு மல்லி தற்போது ரூ50 க்கும் சம்பங்கி ரூ.100 ரூபாயிலிருந்து 120 ரூபாயும், சன்னமல்லி 600 ரூபாய், அதேபோல் குண்டு மல்லி இன்று 600 ரூபாய்க்கும், காக்கடா 240 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாயில் இருந்து 240 ரூபாய், பன்னீர் ரோஸ் ரூ.140 என விற்பனை செய்யப்பட்டது.

    இந்த விலையேற்றத்தால் இன்று பூக்கள் சந்தைக்கு விற்பனைக்காக பூக்களை கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கடத்தூர் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட இடத்தில் டி.ஐ.ஜி நேரில் விசாரணை நடத்தினார்.
    • அரை பவுன் நகைக்காக கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே அரை சவரன் தோடுக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தமாள் வயது 72), இவர் இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத நிலையில் நடக்க முடியாமல் வீட்டிலேயே தனியாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கந்தம்மாளின் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் என்பவர் மூதாட்டியை பார்க்க சென்றுள்ளார். அப்போது கந்தம்மாள் வீட்டில் இறந்து கிடந்துள்ளது தெரியவந்தது.

    இது குறித்து கந்தம்மாளின் சகோதரர் ஆறுமுகத்திற்கு அவர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த கடத்தூர் போலீசார் மூதாட்டி கந்தம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது, இவர் காதில் அணிந்திருந்த அரை சவரன் தங்க நகைக்காக மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கந்தம்மாளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள கடத்தூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒடசல்பட்டி கூட்ரோட்டில் சம்பவம் நடந்த பகுதியை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் யேசுபாதம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்த போலீசார் கூறுகையில்; அரை பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்றுள்ளனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவர்கள் என்றனர்.

    • தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தக்காளி வரத்து குறை வினால் விலை உயர்ந்து கிலோ 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தக்காளி வரத்து குறைவால் விலை அதிகர்த்துள்ளது. விலை உயர வாய்ப்பு.

    மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். இதன் மூலம் சராசரி தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 5ரூபாய் முதல் 7ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது தொடர்ந்து சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் வருவதையொட்டி தக்காளியின் விலை உயர்ந்து கிலோ தக்காளி 16 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையாக 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரு சில மாதங்களில் மட்டுமே விலை உயர்வதால் விவசாயிகள் மாற்று பயிர் செய்வதால் ஆர்வம் காட்டுவதால் தக்காளி சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி விலை இன்னும் சில வாரங்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றன்ரனர்.

    • பாலக்கோடு சினிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கம்மாளர் தெருவில் உள்ள கரிவரத ராஜா பெருமாள் கோவிலில் இன்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவ திருவிழா நடைப்பெற்றது. இதனையடுத்து விக்கிரகத்திற்க்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏராளனமான பெண்கள் சீர்வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.

    அதனை தொடர்ந்து ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் மங்கள இசை முழங்க திருக்கல்யாணம் நடந்தேறியது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமணம் ஆகாத கன்னி பெண்கள், இளைஞர்கள் சுவாமி திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

    இதனால் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சுவாமிக்கு மொய் பணம் செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டை பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • பாலக்கோடு அருகே முள் வேலிக்குள் சிக்கி தவிக்கும் குடும்பங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கரகதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோவிலூரான் கொட்டாய் சேர்ந்தவர்கள் சங்கர்(40), ஆனந்தன் (42) ஆகிய இருவரது குடும்பங்களே முள் வேலிக்குள் சிக்கி கொண்டு 4 நாட்களாக வீடுகளிலியே சிக்கி தவிப்பதாக தெரிவிக்கின்றனர்.

    தங்களது உறவினரான மாதம்மாள் (65) என்பவரது குடும்பத்தினரே, கால காலமாக பயன்படுத்தி வந்த சாலையை முள் வேலி கொண்டு அடைத்து விட்டதால், இந்த நிைலமை ஏற்பட்டிருப்பதாகவும், திடீரென முள் வேலி அமைத்துவிட்டதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, குடிக்க தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை, கழிவறைக்கு கூட சென்று வர முடியாமல் தவித்து வருவ தாகவும் கூறுகின்றனர்.

    இது குறித்து பாதிக்கபட்டவர்கள் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறுவதை தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் 6 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழிக்கில் மேலும் 3 பேரை கைது சிறையில் அடைத்தனர்.
    • இதுவரை கேரளாவை சேர்ந்த 12 பேர் சிக்கியுள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28-ந்தேதி கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி அருகே, காரை வழிமறித்து கடுமையாக தாக்கி காருடன் 6 கிலோ தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 60 லட்சம் ரூபாய் கடத்தி சென்றனர்.

    இதனையடுத்து பிரசன்னா காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொள்ளை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அவர்கள் அனைவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த தங்க நகை கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட 6 கிலோ தங்க நகைகள், ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 4 கார்கள், 8 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தலைமறைவாகயிருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதில் ஒசூர் அருகே பதுங்கியிருந்த ஆசிப் (32), விஷ்னு (27), அக்க்ஷய் சோனு (22) ஆகிய 3 பேரை கைது செய்து காரிமங்கலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கேரளாவை சேர்ந்த 15 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில், ஈடுபட்டிருந்த நிலையில், அதில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.  

    • தருமபுரியில் சொத்து தகராறில் டாக்டர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சொத்து பிரச்சனை தொடர்பாக சம்பவம்.

    தருமபுரி நகர் குப்பாண்டி தெருவை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன். இவரது மனைவி டாக்டர் இளவரசி சங்கவை தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் ராம கிருஷ்ணன் என்பவரிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை கிரையம் செய்ய அட்வான்சாக ரூ.11 லட்சம் பணம் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட ராமகிருஷ்ணன் இறந்துள்ளார்.

    இந்நிலையில் ராமகிருஷ்ணனுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இறந்த ராமகிருஷ்ணன் உறவினர்கள் நாங்கள் தான் வாரிசு எனக்கூறி டாக்டர் தம்பதிகளிடம் சிலர் பணம் கேட்டு அடிக்கடி வந்து தகராறு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் டாக்டர் தம்பதிகளின் வீட்டுக்கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

    அப்பொழுது சத்தம் கேட்டு வந்த டாக்டரின் தாயார் சித்ரா (50 என்பவரை ஆயுதங்களால் மர்ம கும்பல் தாக்கியதோடு மேலும் பிரச்னைக்குரிய வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். இதில் சித்ராவின் பல் உடைந்தது. காயம் அடைந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவல் அறிந்த எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில், கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஏழை எளியோக்கும் நீதி வழங்குவதே சட்டப்பணிகள் சேவை மையத்தின் முதல் குறிக்கோள் என்று சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
    • வாச்சாத்தில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் சேவை மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகம் நடைபெற்றது. முகாமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான எஸ்.வைத்தியநாதன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் செயல் தலைவர் என்ற முறையில் இங்கு வந்துள்ளேன். தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் முதல் குறிக்கோளே வசதியற்ற பிரிவினருக்கு நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள நீதியை வழங்குவதே ஆகும். அதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையமானது உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியின் கீழ் இயங்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியின் கீழ் இயங்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டு தலை நடைமுறைப்படுத்துவதே ஆகும்.

    தேவைப்படும் சட்ட உதவிகள் அனைத்தும் தகுதி உள்ள நபர்களுக்கு இலவசமாக செய்து கொடுக்கப்படும். சட்ட உதவி கோருபவர்கள் எழுத படிக்கத் தெரியாதவர்களாக இருப்பின் அதற்கான உதவிகளை சட்ட ஆணையமே செய்து வருகிறது. இங்குள்ளவர்களுக்கு சட்ட உதவி ஏதேனும் தேவைப்பட்டால் இங்குள்ள சட்டப்ப ணிகள் ஆணையத்தையோ அல்லது குழுவையே தொடர்பு கொண்டால் அது நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, உங்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் இலவ சமாக வழங்க ஆவன செய்யப்படும்.

    இலவச சட்ட உதவிகள் வழங்குவது மட்டும் எங்கள் பணி அல்ல. அரசாங்கத்தின் மற்ற உதவிகள் உங்களுக்கு தங்கு தடை இன்றி கிடைப்பதற்கான அனைத்து வழிவகைகளை செய்வதும் எங்கள் பணியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் இலவச சட்ட உதவிகள் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் முகமது, தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிபதி ராஜா, மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் அப்பல்லா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுவில் ஊமத்தங்காய் கலந்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • 140 மதுப்பாட்டில்கள் பறிமுதல்.

    பொம்மிடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் மாரப்பன் மற்றும் போலீசார் மது விலக்கு தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பொம்மிடி ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே மோட்டர் சைக்கிளல் வத்த நபர் ஒருவர் திடீரென்று போலீசாரை கண்டதும் தப்பி ஒட முயன்றார்.

    அவரை வளைத்து பிடித்து அவரது மோட்டர் சைக்கிளில் இருந்த சாக்குபையை எடுத்து சோதனையிட்டபோது அதில் 140 மது பாட்டில்கள் இருந்தன. அதில் சில மதுப்பாட்டில்கள் திறந்து இருந்தன. அதனை எடுத்து சோதனை செய்தபோது அதிக போதைக்காக ஊமத்தங்காயை அதில் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள நத்தமேடு கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் தருமன்(39) என்பரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 140 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடத்தூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அயோடின் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அயோடின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, வழிகாட்டலின்படி, மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், தலைமையில் கடத்தூர் நகர வணிகர் சங்க தலைவர் கண்ணப்பன், செயலாளர் பன்னீர் செல்வம், பொருளாளர் சந்தோஸ் முன்னிலையில் உலக அயோடின் குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அயோடின் சத்து மனிதர்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    அயோடின் சத்து குறைபாட்டால், மூளை வளர்ச்சி குறைபாடு, மாலைக்கண் நோய், தைராய்டு, பெண்களின் கர்ப்பகால குறைபாடு, வளர்சிதை மாற்ற கோளாறு, மாணவர்கள் நினைவாற்றல் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட ஏதுவாகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு உப்புகளில் அயோடின் செறிவூட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    உணவு வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், மளிகை கடை வியாபாரிகள், அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உப்பில் அயோடின் உள்ளதா என கவனித்து விற்பனை செய்யவும், அதில் சிரிக்கும் சூரியன் லோகோ உள்ளதா எனவும் பார்வையிட்டு வாங்கு வதுடன், தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி உள்ளிட்டவற்றை கண்காணித்து விற்பனை செய்ய விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    நிகழ்வில் அயோடின் உள்ள உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறியும் வகையில் பலவிதமான உப்பு பாக்கெட்டுகள் கொண்டு நேரடி செயல் விளக்கம் அளித்தனர். உணவில் அயோடின் கலந்த உப்பினை மட்டும் பயன்படுத்துவோம். அயோடின் பற்றாக்கு றைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் அனைவரும் துணை நிற்போம் என பங்கேற்ற அனைவரும் உறுதி மொழி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியில் வணிகர் சங்கப் பிரதிநிதிகள், மளிகை, உணவக, பேக்கரி, கார இனிப்பு விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
    • செல்போன் சார்ஜ் போடுவது போல் நோட்டம்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மாரண்ட அள்ளி ரோட்டில் கோவில் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அருள்மொழி மனைவி செல்வி (வயது 45) கடந்த 9ந்தேதி அன்று மதியம் வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொடுக்க சொல்லி கேட்டுள்ளார். செல்வி அந்த நபருக்கு சார்ஜ் போட்டு கொடுத்துவிட்டு வேலை சம்பந்தமாக வெளி யே சென்று விட்டார். அப்போது செல்வியின் தாய் சரோஜா (வயது 70) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து குளிர்பா னத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயக்கம் அடைந்த பிறகு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.

    இதனை யடுத்து வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த செல்வி தாய் சரோஜா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கழுத்தில் இருந்த செயின் மாயமாகியிருந்தது. அவரை மீட்டு தரும்புரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தார். இது குறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×