என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ரெட்டியூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக குடிநீர் பைப் லைன் அமைக்க வேண்டும்.
    • அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள நீர் வழிக்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளை அதி காரிகள் எடுத்துரைத்தனர்.

    இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை சார்பில் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    தருமபுரி முதல் ஓசூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பாலக்கோடு நகர்பகுதியை ஒட்டி உள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்க பி.கொல்லஅள்ளி முதல் எர்ரனஅள்ளி சாலை வரை இருபுறங்களிலும் இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.

    ரெட்டியூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக குடிநீர் பைப் லைன் அமைக்க வேண்டும். அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள நீர் வழிக்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்.

    பி.செட்டி அள்ளி ஊராட்சி மாரிக்கான் கொட்டாயில் பழுதாகி உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள தெருவிளக்கு மின் கம்பங்களை உடனே மாற்ற வேண்டும்.

    கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட சமுதாய திருமண மண்டபங்களுக்கு, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மண்டபங்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே இதற்கான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும்.

    பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உடையும் தருவாயில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகளை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி, முத்தப்பன், நஞ்சுண்டன், ஜோதி, சரண்யா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    • தென்னை மற்றும் பனையிலிருந்து கள் இறக்கிடவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும்.
    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.

    இதில் விவசாயிகளின் அனைத்து உற்பத்திப ்பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3ஆயிரம், சின்ன வெங்காயம் டன்னுக்கு ரூ. 45 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5ஆயிரம், மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ. 12ஆயிரம், மஞ்சள் குவிண்டலுக்கு ரூ. 15ஆயிரம் என்ற விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    தென்னை மற்றும் பனையிலிருந்து கள் இறக்கிடவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் உதயகுமாரன், மாநில கரும்பு விவசாயிகள் அணி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தருமபுரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுமாரன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.

    போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • போலீசார் விசாரித்ததில் பழனியம்மாள் வேறுநபருடன் பழக்கம் ஏற்பட்டதால், கணவரை விட்டு அவருடன் சென்றுவிட்டார் என்று தெரியவந்தது.
    • மனமுடைந்த காணப்பட்ட சிவக்குமார் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் தொக்குபோதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது42). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி பழனியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் பழனியம்மாள் கடந்த 13 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார். இதுகுறித்து சிவக்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் பழனியம்மாள் வேறுநபருடன் பழக்கம் ஏற்பட்டதால், கணவரை விட்டு அவருடன் சென்றுவிட்டார் என்று தெரியவந்தது.

    அப்போது போலீசார் அந்த பெண்ணிடம் கணவருடன் செல்லுமாறு கூறினர். அதற்கு அவர் கணவரை பிரிந்து வாழ்வதாக தெரிவித்தார்.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட சிவக்குமார் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைஷ்ணவி தனதுதோழி ஸ்ரீத்ரிகாவிற்கு போன் செய்து தான் ஆணாக மாறி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.
    • வீட்டில் இருந்த ஸ்ரீத்ரிகா திடீரென்று காணவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கோழிமேக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஸ்ரீத்ரிகா (வயது19) என்ற மகள் உள்ளார்.

    அதேபகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ப–வரின் மகள் வைஷ்ணவி (19). இருவரும் சிறுவயதில் இருந்து பள்ளியில் ஒன்றாக படித்து வந்ததால் இணை–பிரிய முடியாத தோழிகளாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் வைஷ்ணவி தனதுதோழி ஸ்ரீத்ரிகாவிற்கு போன் செய்து தான் ஆணாக மாறி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ஸ்ரீத்ரிகா திடீரென்று காணவில்லை. இதனால் பதறிப்போன அவரது தாயார் சத்யா தனது மகளை உறவினர்கள் வீடுகளில தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கா–ததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தாய் பாப்பி–ரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஸ்ரீத்ரிகாவை தேடி வருகின்றனர்.

    • ஆதிகேசவன் (17), தேவராஜ் (22) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • தட்சினாமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர் இவரது மகன் தட்சினாமூர்த்தி (வயது22). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் இவர் நேற்று மகேந்திரமங்கலத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்தார். அப்போது உறவினர்களாக ஆதிகேசவன் (17), தேவராஜ் (22) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது போயர்சாலை அருகே வந்த போது சாலையோரம் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின்புறம் மோதினார்.

    இதில் தட்சினாமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற இருவர் படுகாய மடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்கைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தட்சினா மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வழக்கமாக வரும் காட்டுப்பன்றி ஒன்று நேற்று இரவு எதிர்பாராத விதமாக கவுரனின் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது.
    • தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து இறந்த காட்டு பன்றியை சமைக்க முடிவு செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரன் (வயது58) . விவசாயி. இவரது மகன் ராம்குமார் (32).

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களது விவசாய நிலத்தில் விளை பயிர்களை காட்டு விலங்குகளிலிருந்து காப்பாற்ற மின்சாரத்தை பயன்படுத்தி வயல்வெளி முழுவதும் மின்கம்பி மூலம் மின்சாரம் பாய்ச்சி வந்தனர்.

    வழக்கமாக வரும் காட்டுப்பன்றி ஒன்று நேற்று இரவு எதிர்பாராத விதமாக கவுரனின் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது.

    இதையடுத்து தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து இறந்த காட்டு பன்றியை சமைக்க முடிவு செய்த நிலையில் பாலக்கோடு வனத்துறைக்கு பொதுமக்கள் ரகசிய தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாலக்கோடு வனத்துறையினர், இருவரையும் பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

    இது குறித்து போலீசார் தந்தை மகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்ததை அடுத்து மண்டல பூஜை நடைபெற்றது.
    • பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்து வீதி வழியாக எல்லையம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்ததை அடுத்து மண்டல பூஜை நடைபெற்றது.

    இந்த மண்டல பூஜையை முன்னிட்டு வெண்ணாம்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்து வீதி வழியாக எல்லையம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து 12 வகையான பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், மஞ்சள், குங்குமம், சந்தனம், போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    பின்னர் எல்லயம்மனுக்கு புஷ்பங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுர அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெருங்கோப்பன பள்ளியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். ரெயில்வே துறையில் பணி செய்துவிட்டு ஓய்வு பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் திருமுருகன், 2-வது மகன் கோகுல கிருஷ்ணன் (வயது48). இதில் திருமுருகன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2-வது மகன் கோகுல கிருஷ்ணன் சென்னையில் வசித்து வந்து அங்கு பிரபல ரவுடியாக வலம் வந்தார்.

    இவர் மீது சென்னையில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவரது தங்கை மீனாட்சி என்பவரை தருமபுரி மாவட்டம் மாட்லாம் பட்டியில் உள்ள அவரது தாய் மாமன் மதியழகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் கோகுலகிருஷ்ணனின் பாட்டிக்கு சொத்து இருந்து வந்துள்ளது. இந்த சொத்து பிரச்சனையால் கோகுல கிருஷ்ணனுக்கும் அவரது தங்கை மீனாட்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அடிக்கடி மாட்லாம்படியில் உள்ள மீனாட்சி வீட்டிற்கு கோகுல கிருஷ்ணன் வந்து தகராறு செய்து அவர்களை மிரட்டி பணம் வாங்கி செல்வார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோகுலகிருஷ்ணன், அவருடைய நண்பர்கள் சென்னை வடபழனியைச் சேர்ந்த லோகோஷ்வரன் (21), காசிமேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (20) ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் ஒருவீட்டில் உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளை திருடி தப்பி வந்துள்ளனர்.

    இவர்களை பின்தொடர்ந்து மத்தூர் போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பின்தொடர்ந்து தேடி வந்தனர். அவர்கள் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று கோகுலகிருஷ்ணன், தனது நண்பர்களுடன் மாட்லாம்பட்டியில் உள்ள மீனாட்சி வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் மீனாட்சியையும், அவரது கணவர் மதியழகனையும் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டதால் கோகுலகிருஷ்ணனும், அவரது நண்பர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லாம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைக்கு வந்தனர்.

    இதுகுறித்து மீனாட்சி காரிமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்து விட்டு ஊர்பொதுமக்கள் உதவியுடன் தனது அண்ணனையும், மற்றும் அவரது கூட்டாளிகளையும் நல்லாம்பட்டி நோக்கி தேடிவந்துள்ளார்.

    அப்போது கோகுல கிருஷ்ணன், அவரது நண்பர்களும் மது குடித்து விட்டு நல்லாம்பட்டியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வழியில் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் தவித்து நின்றனர்.

    அதற்குள் மீனாட்சியும், ஊர் பொதுமக்களும் ஒன்று திரண்டு வந்து வழியில் நின்று கொண்டிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் 3 பேரும் தப்பித்து செல்லாமல் இருக்க அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    இதனைதொடர்ந்து பிடிபட்ட 3 பேரையும் மதிகோண்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுர அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று காயமடைந்த கோகுலகிருஷ்ணன் மதிகோண்பாளையம் போலீசாரிடம் தன்னுடைய தங்கையிடம் பணம் கேட்டு விட்டு மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்ற போது மீனாட்சியும், உறவினர்கள் 5 பேரும் சேர்ந்து என்னையும், எனது நண்பர்கள் 2 பேர் மீதும் நல்லாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மடக்கி பிடித்து மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கினர் என்று புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் மீனாட்சி மற்றும் அவரது உறவினர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்தார்.

    தருமபுரி:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்தார். இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஊருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு, சாலை அமைப்பதாக கூறி, அதற்கான பணிகளை செய்துள்ளனர்.
    • உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள, ராமகொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சாம்பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த ஊருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு, சாலை அமைப்பதாக கூறி, அதற்கான பணிகளை செய்துள்ளனர்.

    ஆனால் சுடுகாட்டை தாண்டி உள்ள நிலங்களை, வீட்டுமனையாக மாற்றி விற்பனை செய்யும் நோக்குடன், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஆதரவாக, சுடுகாட்டை மூடி மறைத்து, சவக்குழிகளின் மேல், சாலை அமைத்துள்ளதாக கூறி, இந்த ஊர் பொது மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர்.

    50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது பெற்றோர்களின் சவக்குழிகள், காணாமல் போனதாக கூறி கதறி அழுதனர். மேலும் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதிதாக போடப்பட்ட சாலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சிதறி கிடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசல் மூலம் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் கபினி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 2284 அடியை எட்டியுள்ளது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் கபினி அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடி அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 102.35 அடியை எட்டியுள்ளது.

    தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டி விடும் என்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீர் நேற்று மதியம் 2 மணி அளவில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தானது நேற்று நிலவரப்படி விநாடிக்கு 2,500 கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணமாக உள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து 22,600 கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேறவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அதேபோல சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தப்படி சென்றனர்.

    கர்நாடகா அணைகளில் மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இன்று திறந்து விடப்பட்ட 22,600 கனஅடி தண்ணீர் இன்று மாலைக்குள் விரைவில் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசல் மூலம் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    • கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
    • இதனால் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    தர்மபுரி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவான 124 அடியில் தற்போது 100 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 25 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 2,680 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணை தனது மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போது 80 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 11,250 கனஅடி தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 13 ஆயிரத்து 930 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று ஒகேனக்கல்லை வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    அதன்படி நேற்று மாலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ×