search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்தனர்: பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 ரவுடிகளிடம் போலீசார் விசாரணை
    X

    சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்தனர்: பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 ரவுடிகளிடம் போலீசார் விசாரணை

    • 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுர அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெருங்கோப்பன பள்ளியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். ரெயில்வே துறையில் பணி செய்துவிட்டு ஓய்வு பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் திருமுருகன், 2-வது மகன் கோகுல கிருஷ்ணன் (வயது48). இதில் திருமுருகன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2-வது மகன் கோகுல கிருஷ்ணன் சென்னையில் வசித்து வந்து அங்கு பிரபல ரவுடியாக வலம் வந்தார்.

    இவர் மீது சென்னையில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவரது தங்கை மீனாட்சி என்பவரை தருமபுரி மாவட்டம் மாட்லாம் பட்டியில் உள்ள அவரது தாய் மாமன் மதியழகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் கோகுலகிருஷ்ணனின் பாட்டிக்கு சொத்து இருந்து வந்துள்ளது. இந்த சொத்து பிரச்சனையால் கோகுல கிருஷ்ணனுக்கும் அவரது தங்கை மீனாட்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அடிக்கடி மாட்லாம்படியில் உள்ள மீனாட்சி வீட்டிற்கு கோகுல கிருஷ்ணன் வந்து தகராறு செய்து அவர்களை மிரட்டி பணம் வாங்கி செல்வார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோகுலகிருஷ்ணன், அவருடைய நண்பர்கள் சென்னை வடபழனியைச் சேர்ந்த லோகோஷ்வரன் (21), காசிமேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (20) ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் ஒருவீட்டில் உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளை திருடி தப்பி வந்துள்ளனர்.

    இவர்களை பின்தொடர்ந்து மத்தூர் போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பின்தொடர்ந்து தேடி வந்தனர். அவர்கள் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று கோகுலகிருஷ்ணன், தனது நண்பர்களுடன் மாட்லாம்பட்டியில் உள்ள மீனாட்சி வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் மீனாட்சியையும், அவரது கணவர் மதியழகனையும் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டதால் கோகுலகிருஷ்ணனும், அவரது நண்பர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லாம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைக்கு வந்தனர்.

    இதுகுறித்து மீனாட்சி காரிமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்து விட்டு ஊர்பொதுமக்கள் உதவியுடன் தனது அண்ணனையும், மற்றும் அவரது கூட்டாளிகளையும் நல்லாம்பட்டி நோக்கி தேடிவந்துள்ளார்.

    அப்போது கோகுல கிருஷ்ணன், அவரது நண்பர்களும் மது குடித்து விட்டு நல்லாம்பட்டியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வழியில் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் தவித்து நின்றனர்.

    அதற்குள் மீனாட்சியும், ஊர் பொதுமக்களும் ஒன்று திரண்டு வந்து வழியில் நின்று கொண்டிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் 3 பேரும் தப்பித்து செல்லாமல் இருக்க அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    இதனைதொடர்ந்து பிடிபட்ட 3 பேரையும் மதிகோண்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுர அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று காயமடைந்த கோகுலகிருஷ்ணன் மதிகோண்பாளையம் போலீசாரிடம் தன்னுடைய தங்கையிடம் பணம் கேட்டு விட்டு மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்ற போது மீனாட்சியும், உறவினர்கள் 5 பேரும் சேர்ந்து என்னையும், எனது நண்பர்கள் 2 பேர் மீதும் நல்லாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மடக்கி பிடித்து மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கினர் என்று புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் மீனாட்சி மற்றும் அவரது உறவினர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×