என் மலர்
தர்மபுரி
- தொடர் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி கீழ்கொட்டாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது25).
இவர் நேற்று வீட்டில் குளிக்க சென்றபோது தனது 4 பவுன் செயினை ஜன்னல் ஓரம் கழற்றி வைத்திருந்தார். குளித்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது ஜன்னல் ஓரம் வைத்த 4 பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி ஏ.கொல்லஅள்ளி பகுதியில் ஒரு வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் புகுந்து திருட முயன்றுள்ளார். அப்போது சத்தம்கேட்டு வீட்டின் உரிமையாளர் எழுந்து வந்து பார்த்தபோது அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதேபோன்று பிடமனேரி பகுதியில் ஒரு பெண் நடந்து சென்றபோது மர்மநபர் ஒருவர் பின்னால் வந்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றார். அப்போது அந்த பெண் திருடன், திருடன் என்று கூச்சலிட்டதால், அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பித்து சென்றார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் கொள்ளை முயற்சி காரணமாக அப்பகுதிகளில் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.
எனவே, தருமபுரி போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது படிப்படியாக குறைக்கப்பட்டது.
- நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆணைகள் அதனுடைய முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டது. இந்த நீர் வரத்தால் கடந்த வாரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 21,000 கன அடி வரை அதிகரித்தது. இதனிடையே கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது படிப்படியாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை நிலவரப்படி 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- நேற்று தனது இருசக்கர வாகனத்தை அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி அருகில் விட்டு கடைக்கு சென்றார்.
- பின்னர் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள வெளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது74). ஓய்வு பெற்ற போலீஸ்காரரான இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி அருகில் விட்டு கடைக்கு சென்றார்.
பின்னர் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் பதறி போன அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் அரூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
- தொடர் மழை, நோய் தொற்றால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- விலை குறைந்து ரூ. 40 முதல் 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி,
தமிழ் நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும்.
ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. நாடு முழுவதும் தொடர் மழை, நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறையவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை தொடர்ந்து 40-வது நாளாக உயர்ந்து வருவதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தருமபுரியில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. நேற்று உழவர் சந்தையில் 68 ரூபாய்க்கு விற்ற நிலையில் தக்காளி இன்று சற்று விலை குறைந்து ரூ. 40 முதல் 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் தக்காளி நிறுத்தப்ப ட்டுள்ளது. தக்காளி விலை குறைந்தாலும் வெளி மார்க்கெட்டில் விலையை குறைக்க வியாபாரி களுக்கு மனம் இல்லாததால் கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
- தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- இன்று காலை 6 மணி நில வரப்படி ஒகேனக்கலுக்கு அதே அளவு தண்ணீர் குறை யாமல் நீடித்து வருகிறது.
தருமபுரி,
கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு அதிக அளவு திறக்கப்பட்டது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது.
நேற்று மாலை 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 6 மணி நில வரப்படி ஒகேனக்கலுக்கு அதே அளவு தண்ணீர் குறையாமல் நீடித்து வருகிறது.
- சென்னம்மாள் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி பெருக்கு விழா நடைபெற்றது.
- ஆடி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அம்மாபேட்டை ஆற்றின் கரையோரம் சென்னம்மாள் கோவில் உள்ளது.
சென்னம்மாள் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி பெருக்கு விழா நடைபெற்றது. கோவிலில் பக்தர்கள் வழிப்பட்ட பின்னர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பாறைகளை தெய்வமாக கருதி மஞ்சள், குங்குமம் தூவி பொறிகடலை, தேங்காய் உடைத்து பழங்களை வைத்து வழிப்பட்டனர்.
பின்னர் ஆடு, கோழி ஆகியவைகளை பலியிட்டு அங்கேயே குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டனர். இந்த ஆண்டு ஆற்றில் ஓரளவிற்கு தண்ணீர் சென்றது. தண்ணீர் ஓடியதால் பக்தர்களுக்கு வசதியாக இருந்தது. ஆடி பெருக்கு பண்டிகையை ஒட்டி தருமபுரி, ஊத்தங்கரை, அரூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் மேலும் ஆடி 28-ம் சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடதக்கது.
- தேசிய கொடி விலை ரூபாய் 25 -க்கு விற்கப்படுகிறது.
- போஸ்ட்மேன் மூலமும் டெலிவரி செய்யப்படும்.
தருமபுரி,
தருமபுரி கோட்ட கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
பிரதமர் மோடி சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைவருக்கும் இந்திய தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு தருமபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய உள்ளோம். இதன் விலை ரூபாய் 25 மட்டுமே. ஜி எஸ் டி கிடையாது.
தேசிய கொடியை https//www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன் லைனில் ஆர்டர் செய்யலாம்.
மேலும் போஸ்ட்மேன் மூலமும் டெலிவரி செய்யப்படும்.
எனவே மக்கள், நமது தேசிய கொடியை வாங்கி அவரவர் இல்லங்களில், ஏற்றி அமுத பெருவிழாவை இந்திய போஸ்டல் துறையோடு. கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.
- மோசமான சாலையின் காரணமாக ஆம்புலன்ஸ் வருவதில்லை.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர், செங்காங்காடு உள்ளிட்ட 5 கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளையும் நம்பி இருந்தனர்.
இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளாகவே உடைந்து சேதமாகி தற்போது தரமற்ற சாலையாக மாறிவிட்டது.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாததால் தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டத்தில் இருந்து இயக்கபட்ட அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.
காலை, மாலை நேரங்களில் மட்டும் பள்ளி மாணவர்களுக்காக ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்து செல்வதாகவும் மற்ற நேரங்களில் பேருந்து வசதி முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரை எந்த வித ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறிய சாலையை மண் உள்ளிட்ட வற்றை கொட்டி மண் சாலையாக மாற்றி வருகின்றனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் வேறு வழியின்றி நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவ வசதிகள் மற்றும் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் மோசமான சாலையின் காரணமாக வருவதில்லை.
இது குறித்து மூலகாடு பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம் பெண் கிருஷ்ணவேணி கூறும்போது அடிப்படை வசதிகள் எங்கள் கிராமத்திற்கு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது பேருந்து வசதிகளும் கிடைக்காததால் மிகவும் சிரமப்படுகிறோம்.
அவசர உதவிக்கு மகப்பேறு சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் உதவியை நாடினால் கூட எளிதில் இப்பகுதிக்கு வருவதில்லை. தனி நபர்களின் வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களை அழைத்தாலும் கரடு முரடான சாலையால் எங்கள் பகுதிக்கு வருவதற்கு தயங்குகின்றனர்.
இதனால் சரியான நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றோம். பள்ளி மற்றும் கல்லூரி பயில்வதற்கு பேருந்து வசதிக்கும் சேலம் மாவட்டத்தை நம்பி இருக்கின்றோம். தருமபுரி மாவட்டத்திலிருந்து நேரடி சாலை வசதியோ, பேருந்து வசதியோ, அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெதரிவித்தார்.
மேலும் குடிநீர் தேவை அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் எங்கள் கிராமத்தை சேலம் மாவட்டத்தோடு சேர்த்து விடுங்கள் என வேதனையுடன் கம்மம்பட்டி ஊராட்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.13 லட்சம் தருவதாக கூறினர்.
- பெட்டியை பார்த்தபோது போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது31). டிராவல்ஸ் அதிபர்.
இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ரூ.10 லட்சம் கொடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.13 லட்சம் தருவதாக கூறினர். இதை நம்பிய அவர் அந்த கும்பலிடம் ரூ.10 லட்சத்ைத கொடுத்தார்.
பின்னர் அவர்கள் கொடுத்த பெட்டியை பார்த்தபோது அவை அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னாகரம் அருகே சீலநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி (35), கோபாலம்பட்டி நடூரை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பென்னாகரம் கோடுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (35), ஊத்தங்கரை நந்திபுதூர் கிராமத்தை சேர்ந்த ஹரிபாபு (38) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
- வீரபத்திர சாமிக்கு தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தப்பட்டது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள போசிநாயக்கன அள்ளியில் ஆடி 18-யை முன்னிட்டு முத்துமாரியம்மன், துர்க்கை, வைஷ்ணவி, மகேஸ்வரி அம்மனுக்கு 11-ம் ஆண்டு தீமிதி விழா நடைபெற்றது.
இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
காலை வீரபத்திர சாமிக்கு தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து முத்துமாரியம்மன், மாரியம்மன் சாமிக்கு திருவீதிபவனி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தீமிதி விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- ஹாக்கி சாம்பியன் போட்டி வரும் 12.8.2023 வரை நடைபெற உள்ளது.
- தருமபுரி டவுன் பஸ் ஸ்டேண்டில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தருமபுரி,
7-வது ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி சாம்பியன் போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 12.8.2023 வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகளை பொதுமக்கள் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பினை தருமபுரி டவுன் பஸ் ஸ்டேண்டில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, நகர மன்ற தலைவர் லட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் உள்ளனர்.
- சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நல்லம்பள்ளி அருகே உள்ள முத்தம்பட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு துளசி மாலையும், எலுமிச்சம்பழ மாலை மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் தருமபுரி சுற்று வட்டார பகுதியான நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, இண்டூர், தொப்பூர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.






