என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • ஆமைகள் தங்கி செல்வதற்கும், முட்டையிட்டு குஞ்சு பொரிக்க வசதியாக மரத்தூள் அடித்தள குடில்கள் அமைத்துள்ளனர்.
    • ஆமைக்கு தேவையான மருந்து, முதலுதவி கருவிகளுடன் மின் கால்நடை மருத்துவமனையும் அமைக்க உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    "ரேடிசன் ப்ளு" கடற்கரை ரிசார்ட் பகுதியில் "ஆலிவ் ரிட்லி" என்ற அரியவகை ஆமைகள் கடல்சீற்றம், சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் காயங்களுடனும், இறந்தும் கரை ஒதுங்கி வந்தது. டிசம்பர் முதல் மார்ச் மாதங்களில் பெண் ஆமைகள் மட்டும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க இங்கு வருகிறது.

    அழிந்து வரும் இவ்வகை ஆமைகளின் உயிரை பாதுகாக்க ரிசார்ட் தலைமை நிர்வாகிகள் முடிவுசெய்து டாக்டர் சுப்ரஜா, என்பவரின் ட்ரீ பவுண்டேஷனுடன் இணைந்து ஆமைகள் தங்கி செல்வதற்கும், முட்டையிட்டு குஞ்சு பொரிக்க வசதியாக மரத்தூள் அடித்தள குடில்கள் அமைத்துள்ளனர். கடல்நிலை போன்ற குளங்களும் அமைத்து வருகிறார்கள்.

    ஆமைகள் அங்கு வந்து தங்கியுள்ளது தெரிந்தால் அப்பகுதிகளுக்கு வேறு கால்நடைகள் செல்லாத வண்ணம் காவலாளிகளை வைத்து பாதுகாத்து வருகின்றனர். ஆமைக்கு தேவையான மருந்து, முதலுதவி கருவிகளுடன் மின் கால்நடை மருத்துவமனையும் அமைக்க உள்ளனர். இதன் அறிமுக விழா அப்பகுதியில் கடலோரத்தில் நடைபெற்றது.

    • சென்னை, கே.கே நகர் விஜயராகவபுரம் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது26).
    • கடந்த 4-ந்தேதி வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து காணப்பட்டது.

    சென்னை, கே.கே நகர் விஜயராகவபுரம் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது26). எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா. அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் ரவியின் வீட்டிற்கு காரில் வந்த 5 பேர் கும்பல் "நாங்கள் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறோம். வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி ரவியை அழைத்து சென்றனர்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி ஐஸ்வர்யா கோயம்பேடு போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது போலீஸ் போல நடித்த மர்ம கும்பல் அவரது ரவியை கடத்தி சென்று இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா கணவர் ரவியை கண்டுபிடித்து தருமாறு கே.கே நகர் போலீசில் கடந்த 4-ந் தேதி புகார் அளித்தார்.

    அசோக் நகர் உதவி கமிஷனர் தனசெல்வம், கே.கே. நகர் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் 2 தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் ரவியின் செல்போன் எண்ணை வைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே கடந்த 4-ந்தேதி வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து காணப்பட்டது.

    இது குறித்து படாளம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அருணாசிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதுபற்றி அறிந்ததும் கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் எரித்து கொல்லப்பட்டது கடத்தி செல்லப்பட்ட ரவி என்பதை போலீசார் உறுதி படுத்தி உள்ளனர். பெண் தகராறில் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் வேலைபார்த்து வந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் என்பவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    ரவியின் பக்கத்து வீட்டில் உள்ள பெண் ஒருவருடன் ஏற்கனவே திருமணமான போலீஸ் ஏட்டு செந்தில் குமார் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது ரவிக்கும், செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த இருவரும் அடிக்கடி மது குடித்து ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே அந்த பெண் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 31-ந் தேதி வீட்டை காலி செய்தபோது போலீஸ் செந்தில்குமார், ரவியின் வீட்டிற்கே சென்று "உன்னை சும்மா விட மாட்டேன்" என்று மிரட்டல் விடுத்து சென்று உள்ளார்.

    இதற்கிடையே கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் கடந்த மாதம் 23-ந் தேதி செம்பியம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    4 நாட்கள் மட்டுமே பணிக்கு சென்றவர் பின்னர் விடுமுறை எடுத்துவிட்டு மாயமானார். தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டுள்ளது. ரவி மாயமானது முதல் ஏட்டு செந்தில்குமாரும் தலைமறைவாகி விட்டார்.

    மேலும் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் மற்றும் டிரைவர் ரவி ஆகிய இருவரது செல்போன் சிக்னலையும் போலீசார் ஆய்வு செய்ததில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்போது எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

    எனவே போலீஸ்காரர் செந்தில்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவியை கடத்தி கொலை செய்து உடலை எரித்துவிட்டு தலைமறைவாகி இருப்பதை போலீசார் உறுதி படுத்தி உள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவர் சிக்கினால் தான் கொலை நடந்தது எப்படி? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார்? யார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • வண்டலூரை அடுத்த ஓட்டேரி டி.எஸ் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் சரண்யா.
    • வண்டலூர் அருகே பேராசிரியையை தாக்கி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த ஓட்டேரி டி.எஸ் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் சரண்யா. தனியார் கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் பணி முடித்து வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த மர்மவாலிபர் திடீரென சரண்யாவின் முதுகில் பலமாக தாக்கி கீழே தள்ளினான். இதில் சரண்யா நிலை குலைந்த போது அவர் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறித்து தப்ப ஓடினான். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு திரண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் நகை பறித்து தப்பி ஓடிய வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவனுக்கு தர்ம அடி கொடுத்து ஓட்டேரி போலீசில் ஓப்படைத்தனர்,

    விசாரணையில் அவன் மதுரையை சேர்ந்த போஸ்(48) என்பது தெரிய வந்து. அவனை போலீசார் கைது செய்த நகையை மீட்டனர். அவன் இது போல் வேறு எங்கேனும் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விழுப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது34). வண்டலூர் வெளிவட்டசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • வண்டலூர் அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    வண்டலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது34). இவர் மண்ணிவாக்கம் அருகே வண்டலூர் வெளிவட்டசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் பலியானார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுகாதாரமற்ற இறைச்சிகளை உணவுக்கு பயன்படுத்தினால் ஓட்டல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் விஜயன், அமுதா, சுகாதார ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்டோர் ஓட்டல், இறைச்சி கடைகளில் சோதணை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் ஜூலை28-ந்தேதி முதல் ஆகஸ்ட்10-ந்தேதி வரை, 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறஉள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதன் பணிகளை ஆய்வு செய்யவும், மாமல்லபுரம் நகரத்தின் தூய்மை, சுத்தம், சுகாதாரம், உணவு, பாதுகாப்பு, மருத்துவம், அழகுபடுத்துதல் போன்ற மேம்பாட்டு பணிகள் குறித்து பார்வையிடவும் அவ்வப்போது அதிகாரிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் விஜயன், அமுதா, சுகாதார ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்டோர் திடீரென மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், இறைச்சி கடைகளில் சோதணை செய்தனர்.

    இதில் கோவளம் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கெட்டுப்போன 60கிலோ மாட்டு இறைச்சி மற்றும் 25கிலோ கோழி இறைச்சியை சமையலுக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை கிடங்கில் போட்டு அழித்தனர்.

    சுகாதாரமற்ற இறைச்சிகளை உணவுக்கு பயன்படுத்தினால் ஓட்டல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    • அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தராஜ். இவரது மகன் அர்ஷத் (வயது 12).
    • கல்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி மாணவன் பலியானார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தராஜ். இவரது மகன் அர்ஷத் (வயது 12). அங்குள்ள அணுசக்தி துறை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மதியம் அவர் அணுமின் நிலையத்தின் குடியிருப்பு பகுதி பக்கிங்காம் கால்வாயில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது அந்தத் தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையோரம் புதரில் சிக்கி இருந்த அர்ஷத்தின் உடலை மீட்டனர். இது குறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    திருக்கழுக்குன்றம் அடுத்த விளாகம் பகுதியை சேர்ந்தவர் தம்புராட்டி. இவரது மகன் தினேஷ் (வயது 19). பாலாற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி தினேஷ் பலியானார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலுசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீதிபதி தமிழரசி முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜரானார்.
    • சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி அடுத்த மாதம் 15-ந்தேதி சிவசங்கர் பாபாவை ஆஜராக உத்தரவிட்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சாமியார் சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ 2 பெண் வன்கொடுமை உள்ளிட்ட 8 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த 8 வழக்குகளிலும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெற்று தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முதல் போக்சோ வழக்கின் விசாரணை நடைபெற்றது. நீதிபதி தமிழரசி முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி அடுத்த மாதம் 15-ந்தேதி சிவசங்கர் பாபாவை ஆஜராக உத்தரவிட்டார்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
    • காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜாராம், செங்கல்பட்டு முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவகல்லூரி கூட்டரங்கில் 75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுதம் பெருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜாராம், செங்கல்பட்டு முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாமல்லபுரத்தில் சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மற்றும் முழு உடல் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அவர்கள் அனைவரையும் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் பகுதிகளில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற 37 ஓட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வீரர்களுக்கான உணவு, பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் குறித்து ஓட்டல் நிர்வாகிகள், சமையல் கலைஞர்களுடன், மருத்துவ, சுகாதார குழு தலைவர் மற்றும் சுகாதார முதன்மை செயலர் செந்தில்குமார், சுகாதார திட்ட இயக்குனர் உமா, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது ஓட்டல் நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கூறியதாவது:-

    வீரர்கள் தங்கும் 37 ஓட்டல்களிலும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை யோகா நடத்தப்பட வேண்டும். கொசு, பூச்சி தொல்லைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

    பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மற்றும் முழு உடல் பரிசோதனை செய்திருக்க வேண்டும். கண்டிப்பாக உணவுகளில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்ப பயன்படுத்த கூடாது.

    ஒவ்வொரு ஓட்டலிலும் 108 ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். சுகாதாரம் சார்ந்த உதவிகளுக்கு உடனடியாக 104 என்ற நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தரவேண்டும். அனைத்து பணியாளர்களும் மருத்துவ காப்பீடு செய்வது அவசியம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட தெருக்களை சென்னை மாவட்டத்திற்குள் சேர்க்க வேண்டும்.
    • ராஜா தெரு, வடக்கு ராஜா தெரு உட்பட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் சிறப்புமுகாம் நடைபெற்றது. இதில் கோட்ட அலுவலர் சாய் வர்த்தினி, தாசில்தார் தியாகராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    அப்போது பொதுமக்கள் அளித்த மனுவில், ஆலந்தூர் மண்டலம், 160, 161-வது வார்டில் உள்ள லஸ்கர் தெரு,ஆசர்கானா தெரு, ராஜா தெரு, வடக்கு ராஜா தெரு உட்பட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதி மக்கள் மட்டும் பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்து ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட தெருக்களை சென்னை மாவட்டத்திற்குள் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • குளத்துக்குள் ஏற்கனவே மீன்களை பிடிப்பதற்கு வீசப்பட்ட வலை கிடந்தது.
    • குளத்தில் இருந்து வெளியே நீந்தி வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி ரவி பலியானார்.

    செங்கல்பட்டு:

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூரை சேர்ந்தவர் ரவி (வயது 58). இவர் அதே பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிக்க சென்றார்.

    அப்போது குளத்துக்குள் ஏற்கனவே மீன்களை பிடிப்பதற்கு வீசப்பட்ட வலை கிடந்தது. இதனை அறியாமல் ரவி குளித்தார். இதில் மீன்வலையில் அவர் சிக்கிக் கொண்டார்.

    அவரால் குளத்தில் இருந்து வெளியே நீந்தி வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி ரவி பலியானார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பாதை அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தாம்பரம்-வேளச்சேரி இலகு ரெயில் திட்டத்தை மட்டும் நிறுத்தி வைக்கிறோம்.

    தாம்பரம்:

    சென்னையில் முதல் கட்டமாக விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோ நகர், சென்ட்ரல்-பரங்கிமலை வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி 3 பாதைகளில் அமைக்கப்படுகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீட்டர் பாதையும், பூந்தமல்லி பைபாஸ்- கலங்கரை விளக்கம் இடையே 26.1 கி.மீட்டர் மற்றும் மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீட்டர் மெட்ரோ ரெயில் பாதை அமைய உள்ளது.

    இந்த 3 பாதைகளிலும் 128 நிலையங்கள் அமைய உள்ளன. இதில் தரைக்கு மேல் 80 நிலையங்களும், சுரங்கப்பாதையில் 48 நிலையங்களுக்கு கட்டப்பட உள்ளன.

    மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பாதை அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே தாம்பரம்- வேளச்சேரி இடையே ஏற்கனவே 15 கி.மீட்டர் தூரத்துக்கு இலகு ரெயில் திட்டத்தை கொண்டுவர மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. இதேபோல் விமான நிலையம்- கிளாம்பாக்கம் விரிவாக்கப் பணிகளும் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

    இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடித்து இருந்தது. இந்தநிலையில் இந்த இலகு ரெயில் திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிறுத்தி வைக்க முடிவு செய்து உள்ளது.

    ஏனெனில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் தாம்பரம்- வேளச்சேரி இடையேயான பெரும்பகுதிகள் வருவதால் இலகு ரெயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து மெட்ரோ நிலைய அதிகாரி கூறும்போது, 'தாம்பரம்- வேளச்சேரி வரையிலான பெரும்பாலான பகுதிகள் 2-ம் கட்ட திட்டத்தில் அல்லது விமான நிலையம்- கிளாம்பாக்கம் பாதையில் மேற்கொள்ளப்படும். எனவே இப்போது ஒரு புதிய இலகுரக ரெயில் தேவையா? என்று நாங்கள் யோசித்து வருகிறோம்.

    இதில் ஒரு சில பகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் சில சவால்கள் உள்ளன. இப்போதைக்கு தாம்பரம்-வேளச்சேரி இலகு ரெயில் திட்டத்தை மட்டும் நிறுத்தி வைக்கிறோம். இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்' என்றார்.

    ×