என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம்-வேளச்சேரி இலகு ரெயில் திட்டம் நிறுத்தி வைப்பு- 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் சேர்வதால் முடிவு
    X

    தாம்பரம்-வேளச்சேரி இலகு ரெயில் திட்டம் நிறுத்தி வைப்பு- 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் சேர்வதால் முடிவு

    • மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பாதை அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தாம்பரம்-வேளச்சேரி இலகு ரெயில் திட்டத்தை மட்டும் நிறுத்தி வைக்கிறோம்.

    தாம்பரம்:

    சென்னையில் முதல் கட்டமாக விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோ நகர், சென்ட்ரல்-பரங்கிமலை வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி 3 பாதைகளில் அமைக்கப்படுகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீட்டர் பாதையும், பூந்தமல்லி பைபாஸ்- கலங்கரை விளக்கம் இடையே 26.1 கி.மீட்டர் மற்றும் மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீட்டர் மெட்ரோ ரெயில் பாதை அமைய உள்ளது.

    இந்த 3 பாதைகளிலும் 128 நிலையங்கள் அமைய உள்ளன. இதில் தரைக்கு மேல் 80 நிலையங்களும், சுரங்கப்பாதையில் 48 நிலையங்களுக்கு கட்டப்பட உள்ளன.

    மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பாதை அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே தாம்பரம்- வேளச்சேரி இடையே ஏற்கனவே 15 கி.மீட்டர் தூரத்துக்கு இலகு ரெயில் திட்டத்தை கொண்டுவர மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. இதேபோல் விமான நிலையம்- கிளாம்பாக்கம் விரிவாக்கப் பணிகளும் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

    இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடித்து இருந்தது. இந்தநிலையில் இந்த இலகு ரெயில் திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிறுத்தி வைக்க முடிவு செய்து உள்ளது.

    ஏனெனில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் தாம்பரம்- வேளச்சேரி இடையேயான பெரும்பகுதிகள் வருவதால் இலகு ரெயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து மெட்ரோ நிலைய அதிகாரி கூறும்போது, 'தாம்பரம்- வேளச்சேரி வரையிலான பெரும்பாலான பகுதிகள் 2-ம் கட்ட திட்டத்தில் அல்லது விமான நிலையம்- கிளாம்பாக்கம் பாதையில் மேற்கொள்ளப்படும். எனவே இப்போது ஒரு புதிய இலகுரக ரெயில் தேவையா? என்று நாங்கள் யோசித்து வருகிறோம்.

    இதில் ஒரு சில பகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் சில சவால்கள் உள்ளன. இப்போதைக்கு தாம்பரம்-வேளச்சேரி இலகு ரெயில் திட்டத்தை மட்டும் நிறுத்தி வைக்கிறோம். இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்' என்றார்.

    Next Story
    ×