என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் எரித்து கொல்லப்பட்டவர் சென்னை டிரைவர்
- சென்னை, கே.கே நகர் விஜயராகவபுரம் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது26).
- கடந்த 4-ந்தேதி வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து காணப்பட்டது.
சென்னை, கே.கே நகர் விஜயராகவபுரம் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது26). எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா. அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 1-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் ரவியின் வீட்டிற்கு காரில் வந்த 5 பேர் கும்பல் "நாங்கள் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறோம். வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி ரவியை அழைத்து சென்றனர்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி ஐஸ்வர்யா கோயம்பேடு போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது போலீஸ் போல நடித்த மர்ம கும்பல் அவரது ரவியை கடத்தி சென்று இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா கணவர் ரவியை கண்டுபிடித்து தருமாறு கே.கே நகர் போலீசில் கடந்த 4-ந் தேதி புகார் அளித்தார்.
அசோக் நகர் உதவி கமிஷனர் தனசெல்வம், கே.கே. நகர் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் 2 தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் ரவியின் செல்போன் எண்ணை வைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே கடந்த 4-ந்தேதி வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து காணப்பட்டது.
இது குறித்து படாளம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அருணாசிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் எரித்து கொல்லப்பட்டது கடத்தி செல்லப்பட்ட ரவி என்பதை போலீசார் உறுதி படுத்தி உள்ளனர். பெண் தகராறில் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் வேலைபார்த்து வந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் என்பவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
ரவியின் பக்கத்து வீட்டில் உள்ள பெண் ஒருவருடன் ஏற்கனவே திருமணமான போலீஸ் ஏட்டு செந்தில் குமார் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது ரவிக்கும், செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த இருவரும் அடிக்கடி மது குடித்து ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே அந்த பெண் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 31-ந் தேதி வீட்டை காலி செய்தபோது போலீஸ் செந்தில்குமார், ரவியின் வீட்டிற்கே சென்று "உன்னை சும்மா விட மாட்டேன்" என்று மிரட்டல் விடுத்து சென்று உள்ளார்.
இதற்கிடையே கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் கடந்த மாதம் 23-ந் தேதி செம்பியம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
4 நாட்கள் மட்டுமே பணிக்கு சென்றவர் பின்னர் விடுமுறை எடுத்துவிட்டு மாயமானார். தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டுள்ளது. ரவி மாயமானது முதல் ஏட்டு செந்தில்குமாரும் தலைமறைவாகி விட்டார்.
மேலும் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் மற்றும் டிரைவர் ரவி ஆகிய இருவரது செல்போன் சிக்னலையும் போலீசார் ஆய்வு செய்ததில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்போது எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே போலீஸ்காரர் செந்தில்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவியை கடத்தி கொலை செய்து உடலை எரித்துவிட்டு தலைமறைவாகி இருப்பதை போலீசார் உறுதி படுத்தி உள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் சிக்கினால் தான் கொலை நடந்தது எப்படி? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார்? யார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.






