என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • 4ஜி இணையதள சேவை ஈடுகொடுப்பது கடினம்,
    • இணையதளம், தடையில்லா மின்சாரம் போன்ற வசதிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்டு உள்ளன.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கில், ஜூலை 28-ந்தேதி முதல், ஆகஸ்ட் 10-ந்தேதி வரை, 44-வது சர்வதேச 'செஸ் ஒலிம்பி யாட்' போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து வீரர்கள் வருகிறார்கள்.

    இந்த நாடுகளின் தூதரகங்கள் மற்றும் பங்கேற்க உள்ள வீரர்களின் வருகை, நிகழ்ச்சிகள், புறப்பாடு விபரங்கள் பற்றிய கால அட்டவணை மற்றும் திட்டமிடல், செயல்பாடுகள் பணிகளுக்காக மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உணவக மாடியில் தனி அலுவலகம் இயங்கி வருகிறது.

    "செஸ் ஒலிம்பியாட்" போட்டி ஏற்பாடு பணிகளை தோய்வின்றி வேகமாக செய்வதற்காக உயரழுத்த மின் தடம், வயர்லெஸ், இணையதளம், தடையில்லா மின்சாரம் போன்ற வசதிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து சாலை வசதி, கார் பார்க்கிங், குடிநீர், சுகாதாரம், தங்கும்வசதி, பாதுகாப்பு, அந்நாட்டு உணவுகள், கலை நிகழ்ச்சி, சுற்றுலா என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது "5ஜி"-க்கு இணையான இண்டர்நெட் வசதி தேவைப்படும் என சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பினர் கேட்பதாக கூறப்படுகிறது. இதற்கென தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் தற்காலிகமாக மொபைல் டவர் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் 4ஜி, வயர்லெஸ், பொது பாதுகாப்பு ரேடார் போன்ற வசதியுடன் கூடிய அதிவேக இணையதள சர்வீஸ் கொடுக்கப்பட்டு அதை கூட்ட மைப்பினர் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, பிரிட்டன், தென்கொரியா, ஹாங்காங் போன்ற நாட்டு வீரர்கள் அங்கு நொடிக்கு 7ஜிபி வேகம் கொண்ட 5ஜி தொழில்நுட்பம் போன்ற "ஏர் வைபை" பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான போன்களைத்தான் வைத்துள்ளனர்.,

    இங்கு அவர்கள் 4ஜி பயன்படுத்துவது சிரமம். அதற்கு மாற்றுவழி என்ன? என்ற கேள்வி தற்போது கூட்டமைப்பினரிடம் எழுந்துள்ளது. இதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதைபற்றி தொலைத் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இணையதள வேகம் என்பது வெவ்வேறு நாடுகளில் வேறுபாடாக இருக்கும். மாமல்லபுரத்தில் தங்கும் வெவ்வேறு நாட்டு வீரர்கள் அவர்களின் நாட்டு இணையதள வேகத்தை பயன்படுத்த இங்கு முயற்சி செய்வார்கள். அதற்கு இந்தியாவில் உள்ள 4ஜி இணையதள சேவை ஈடுகொடுப்பது கடினம் தான்' என்றார்.

    • தொழிலாளர்கள் ஏரியை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூர்வாரிக் கொண்டிருந்தனர்.
    • சிலையின் எடை அதிகமாக இருக்கவே, அதனை கொண்டு செல்ல சிரமப்பட்டு, திருப்பனந்தாள் ஏரியில் வீசிச் சென்றனர்.

    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள திருப்பனந்தாள் ஏரி தூர்வாரும் பணி தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தொழிலாளர்கள் ஏரியை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூர்வாரிக் கொண்டிருந்தனர். அப்போது சேறு, சகதியுடன் சேர்த்து விளக்கு போன்ற அரிய பொருள் ஒன்றும் மேலே வந்தது.

    தொழிலாளர்கள், அந்த சிலையை எடுத்து சுத்தம் செய்து பார்த்த போது, அது சுமார் ஒன்றரை அடி உயரத்தில், 5 கிலோ எடை கொண்ட பித்தளை குத்து விளக்கு சிலை என்பது தெரிய வந்தது.

    உடனடியாக தொழிலாளர்கள் அதனை வருவாய் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, அந்த குத்து விளக்கு சிலை பம்மல், அண்ணா சாலையில் அமைந்துள்ள சூரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளையர்கள் சூரியம்மன் கோவிலில் சுவர் ஏறிக் குதித்து, இந்த குத்து விளக்கு சிலையை திருடிச் சென்றனர். பின்னர் சிலையின் எடை அதிகமாக இருக்கவே, அதனை கொண்டு செல்ல சிரமப்பட்டு, திருப்பனந்தாள் ஏரியில் வீசிச் சென்றனர்.

    இந்த அரிய குத்து விளக்கு சிலையை தமிழக அரசின் கருவூலத்தில் ஒப்படைக்க வருவாய் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    • வீட்டு வாசலில் எலி வருவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக துரத்தி சென்றார்.
    • அப்போது நிலைதடுமாறி வீட்டின் வாசலில் இருந்த படிக்கட்டில் விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை பம்மல் அடுத்த பொழிச்சலூர் பாபு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (35). இவரது கணவர் செந்தில். லோடு வேன் டிரைவராக உள்ளார்.

    நேற்று இரவு செந்தில் வேலைக்கு சென்ற நிலையில் லட்சுமி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலில் எலி வருவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக துரத்தி சென்றார்.

    அப்போது நிலைதடுமாறி வீட்டின் வாசலில் இருந்த படிக்கட்டில் விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை கண்ட உறவினர்கள் லட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சங்கர்நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • வெளிநாட்டு செஸ் வீரர்களின் சுற்றுலா பகுதியாக கடற்கரை கோயில்.
    • 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி 44-வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இங்கு வரும் வெளிநாட்டு செஸ் வீரர்களின் 'சுற்றுலா பகுதியாக' கடற்கரை கோயில், அர்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, ஐந்துரதம், புலிக்குகை ஆகிய புராதன சின்னங்களை சர்வதேச செஸ் கூட்டமைப்பினர் தேர்வு செய்துள்ளனர்.

    அதனால் மாமல்லபுரம் நகரை மேம்படுத்தும் பணிக்காக, 2022-23 மூலதன மானிய திட்டத்தின் கீழ் 8 கோடி ரூபாய் நிதியை அரசு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒதுக்கீடு செய்தது., இத்திட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவில் செய்து முடிக்க தனித்தனி டென்டர்கள் விடப்பட்டது. இதில் 60 சதவீத பணிகளை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். மீதி 40சதவீத பணிகளை பேரூராட்சித் துறையே மேற்கொள்ள முடிவு செய்து, நேற்று மதியம் கவுன்சிலர்களின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம் பேரூராட்சி 15 வார்டு கவுன்சிலர்களில் 11 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் 14-வது வார்டு ம.தி.மு.க கவுன்சிலர் துர்காசினி, அவசர ஒப்பந்த பணிகள் குறித்து செயல் அலுவலர் எந்த ஆலோசனையும் செய்யாமல் கையெழுத்தை மட்டுமே கேட்பதாக கூறி வெளிநடப்பு செய்தார்.

    10 நிமிடம் மட்டுமே நடந்த கூட்டத்தில், சாலைகள் பராமரிப்பு, பூங்கா அமைத்தல், குளங்களை தூர்வாரி சுத்தம் செய்தல், முட்புதர்களை அகற்றுதல் போன்ற ஒப்பந்த பணிகளை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமே மேற்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று முதல் அதற்கான பணிகளும் தொடங்கியது.

    • டாக்டர் ராமலிங்கத்துக்கு சொந்தமான இந்த பங்களாவில் தேசிங் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
    • செம்மஞ்சேரியில் உள்ள வீட்டுக்கு எப்போதாவது சென்று குடும்பத்தினரை பார்த்து விட்டு திரும்பும் தேசிங்.

    திருப்போரூர்:

    சென்னையை அடுத்துள்ள கோவளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை டாக்டருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது.

    கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த டாக்டர் ராமலிங்கத்துக்கு சொந்தமான இந்த பங்களாவில் தேசிங் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    டாக்டரின் குடும்பத்தினர் எப்போதாவது பண்ணை வீட்டுக்கு சென்று பொழுதை போக்குவார்கள். சில நேரங்களில் அங்கு தங்குவது வழக்கம். இவர்கள் இல்லாத நேரத்தில் காவலாளி தேசிங் பண்ணை வீட்டை பார்த்துக் கொள்வார்.

    இவர் தங்குவதற்காக பண்ணை வீட்டு வளாகத்திற்குள்ளேயே சிறிய செட் ஒன்றும் போடப்பட்டுள்ளது.தேசிங் அங்கேயே தங்கி இருந்து கடந்த 8 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

    செம்மஞ்சேரியில் உள்ள வீட்டுக்கு எப்போதாவது சென்று குடும்பத்தினரை பார்த்து விட்டு திரும்பும் தேசிங், பண்ணை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வந்தார்.

    கடந்த 2 நாட்களாக தேசிங் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தேசிங்கின் மகன் மேகவண்ணன் பண்ணை வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தார். அங்கு தந்தை தேசிங் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காவலாளி தேசிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தேசிங்கின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்து தேசிங்கை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். அவர்கள் யார்? என்பது தெரிய வில்லை. பண்ணை வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொள்ளையர்கள் புகுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அப்போது அவர்களை தேசிங் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து தேசிங்கை கொலை செய்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவம் கோவளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேவியர்.
    • ஒருவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி மஞ்சளா (வயது55) வீட்டு வேலை செய்து வந்தார்.

    அவசர வேலையாக கேளம்பாக்கம் வரை செல்வதற்கு பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஒருவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றார்.

    பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ ஒன்று திடீரென திரும்பியதில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது., இதில் தலையில் அடிபட்டு மஞ்சுளா காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும்.
    • சுடர் ஓட்டம் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தடையும்.

    மாமல்லபுரம்:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடக்கிறது.

    இதற்கிடையே, போட்டியையொட்டி சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இனி ஒவ்வொரு முறையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும். இந்த சுடர் ஓட்டம் செஸ் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்துக் கண்டங்களுக்கும் பயணிக்கும்.

    இந்த முறை நேரமின்மை காரணமாக சுடர் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி நாளை ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தர்.

    • பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டது.
    • அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளி அருண் என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த தாம்பரம் சானடோரியம் காமாட்சி நகரை சேர்ந்த அர்ஜூன், பல்லாவரம், சஞ்சய் காந்தி நகரை சேர்ந்த தினேஷ் ஆகிய 2 பேரை நேற்று பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளி அருண் என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. இதில் 3.276 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    செங்கல்பட்டு:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 7.810 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 66 சதவீதம் ஆகும்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 8-ந்தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நதி நீர்வரத்தை கருத்தில் கொண்டும், பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கவும், பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதனால் தற்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு 90 சதவீதம் உள்ளது. இதனால் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது.

    சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாலும், கிருஷ்ணா நதிநீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும் இந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. இதில் 3.058 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.6 சதவீதம் ஆகும். ஏரிக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. இதில் 3.276 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 90 சதவீதம் ஆகும். ஏரிக்கு 460 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 206 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சோழவரம் ஏரியில் தற்போது தண்ணீர் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டி.எம்.சி. இதில் வெறும் 131 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. இதில் 924 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 595 கன அடி வீதம் சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 821 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • வீட்டின் அலமாரியில் துணியை எடுத்தபோது அங்கு பதுங்கி இருந்த பாம்பு ஒன்று முதியவரை கடித்தது.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட மணியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 60). காவலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த 10-ந் தேதி, அவர் வீட்டின் அலமாரியில் துணியை எடுத்தபோது அங்கு பதுங்கி இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மணியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது ஒரு லாரி மட்டும் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • விபத்துக்குள்ளான லாரியில் இருந்து கீழே கொட்டி வீணான மதுபான மூலப்பொருளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

    மதுராந்தகம்:

    திருச்சி மாவட்டம், காட்டூர் கோத்தாரி சர்க்கரை ஆலையில் இருந்து மதுபானங்களை தயாரிக்கக் கூடிய மூலப்பொருளை ஏற்றிக்கொண்டு 5 லாரிகள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பையில் உள்ள தனியார் கம்பெனிக்கு வந்து கொண்டிருந்தது.

    அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது ஒரு லாரி மட்டும் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த 20 ஆயிரம் லிட்டர் மதுபான மூலப்பொருள் கொட்டி ஆறாக ஓடி வீணானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார்.

    தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்குள்ளான லாரியில் இருந்து கீழே கொட்டி வீணான மதுபான மூலப்பொருளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

    இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்துவரும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    மேற்படி விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்துவரும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    மேற்படி விருதினை பெறுவதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான சமூக சேவை நிறுவனம் மற்றும் சமூக சேவை புரிந்து வரும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in என்கிற தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் மேற்படி விருதுக்கு விண்ணப்பித்து அதன் நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் சமூக சேவகர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெற்ற குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று மற்றும் சேவை பற்றி ஆவணங்களை புகைப்படத்துடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக பூர்த்தி செய்து 30.06.2022 அன்று மாலை 5. மணிக்குள் "மாவட்ட சமூக நல அலுவலகம், (சிஆர்சி) குறுவள மையக் கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், 85 ஆலப்பாக்கம், செங்கல்பட்டு - 603 003" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

    ×