என் மலர்
செங்கல்பட்டு
- மாநகராட்சி பள்ளிகளில் ரூ.14.4 லட்சம் செலவில் மாணவர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 10 பூங்காக்களில் ரூ.29.2 லட்சம் செலவில் குடிநீர், மின் விளக்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட 53 பணிகளை ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம், குரோம்பேட்டை பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள், ரூ.2 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டலத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில், கீழ்க்கட்டளை, ஈசாபல்லாவரம் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ரூ.14.4 லட்சம் செலவில் மாணவர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி பல்லாவரம் மண்டலத்தில் தெருவிளக்கு, குடிநீர் பணிகள், வடிகால் சிறுபாலங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பாழடைந்து கிடக்கும் லட்சுமிநகர், சித்ரா டவுன் ஷிப் கச்சேரி மலை, சுபம் நகர் 1, 2, 3, காசி விசாலாட்சிபுரம் ஆகிய 10 பூங்காக்களில் ரூ.29.2 லட்சம் செலவில் குடிநீர், மின் விளக்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட 53 பணிகளை ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
- ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி புகழ் வாய்ந்த 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.6.2022 அன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில், ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 5 மாநகர பேருந்துகளிலும், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் 10 பேருந்துகளிலும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் "நம்ம செஸ், நம்ம பெருமை" - "இது நம்ம சென்னை, நம்ம செஸ்" - "வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு" போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டு உள்ளது. இந்த 15 பஸ்களை சென்னை மெரீனாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 188 சர்வதேச நாடுகளில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வர உள்ளனர்.
- நீரின் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து ஆராய்ந்து இந்த திட்டம் அதிகாரிகளால் கைவிடப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி சூலேரிக்காடு பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு தினசரி 11கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அதன் அருகில் கூடுதலாக 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்திக்காக புதிய ஆலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல், ஆகஸ்ட் 10-ந்தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 188 சர்வதேச நாடுகளில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வர உள்ளனர். அவர்கள் தங்குவற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே வீரர்கள் தங்க உள்ள 38 ஓட்டல்களில் சமையல், குளியல் மற்றும் அன்றாட தேவைகளுக்கு கல்பாக்கம் அடுத்த வாயலூரில் உள்ள பாலாற்றில் இருந்து நீர் வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் நீரின் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து ஆராய்ந்து இந்த திட்டம் அதிகாரிகளால் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து நீர் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சுத்திகரிப்பு ஆலையில் உள்ள பழைய பர்னல்கள் மற்றும் துரு பிடித்த கடல்வழி நீர் குழாய்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது.
மேலும் லாரிகளில் நீர் பிடிக்க வசதியாக உயரமான குழாய்களை கிழக்கு கடற்கரை சாலையோரம் சென்னை குடிநீர் வாரியம் புதிதாக அமைத்து வருகிறது.
இதற்கிடையே வெளிநாட்டு வீரர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள 38 ஓட்டல்களில் பணிசெய்யும் சமையல் கலைஞர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பயிற்சி அளித்து உள்ளது. மேலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் "செஸ் ஒலிம்பியாட்" வீரர்கள் தங்கும் ஓட்டல்களின் முழு விபரம் அடங்கிய "கியூஆர் கோடு" சான்றிதழ்களை உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வினா வழங்கினார்.
அப்போது அவர் கூறும்போது, உணவு வகைகளை குறிப்பிட்ட மணிநேரத்திற்கு மேல் பிரீசரில் வைத்து பின்னர் சமைத்து கொடுக்க கூடாது. காலை, மதியம், இரவு உணவுகளை உணவுத்துறை அதிகாரிகள் வந்து பரிசோதனை செய்த பின்னரே வழங்க வேண்டும் என்றார். இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, உணவு பாதுகாப்பு நலன் அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- சென்னை, தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 50).
- தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது.
தாம்பரம்:
சென்னை, தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. அதனை வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை முடிச்சூரில் உள்ள வீட்டை பார்த்து விட்டு சாமுவேல் மோட்டார் சைக்களில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சாமுவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பலியான சாமுவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
- மும்பையில் இருந்து மாத்திரைகளை மொத்தமாக கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளனர்.
தாம்பரம்:
தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பைசல், ஜகருல்லா, உதய சீலன் என்பதும் போதை மாத்திரைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், வாலிபர்களுக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் சோதனை செய்தபோது மொத்தம் 600 போதை தரும் வலி நிவாரண மாத்திரைகள், 100 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பையில் இருந்து இந்த மாத்திரைகளை மொத்தமாக கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறுபகுதியில் உள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளனர்.
இதுகுறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறும்போது, வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் பல்வேறு தூக்க மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பல இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவிர்க்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- சுங்கக் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
- வெளிவட்ட சாலையில் உள்ள 4 சுங்கச் சாவடிகளிலும் இந்த ஆண்டு 2-வது முறையாக கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 6 கிலோ மீட்டர் தூரம் வெளிவட்ட சாலை ரூ.2,156 கோடி செலவில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சாலையில் 4 இடங்களில் கடந்த ஜனவரி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள் என மொத்தம் 5 இடங்களில் சுங்கக் கட்டணம் இன்று முதல் (1-ந்தேதி) உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவித்து இருந்தது.
அதன்படி சுங்கக் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. மீஞ்சூர்- வண்டலூர் வெளி வட்ட சாலையில் உள்ள வரதராஜபுரம், கோலப் பன்சேரி, நெமிலிச்சேரி, சின்ன முல்லைவாயில் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் ஆகிய 5 சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதில் ஒருவழி பயணத்துக்கு ரூ.18 முதல் ரூ. 323 வரையும் மாதம் முழுவதும் பயணம் செய்ய ரூ.2,923 முதல் ரூ. 18 ஆயிரத்து 80 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெளிவட்ட சாலையில் ஒருமுறை சென்று வர கார்களுக்கு ரூ.18 முதல் ரூ.50 வரையும் (பழைய கட்டணம் ரூ.17-ரூ.47), இலகு ரக வாகனங்களுக்கு ரூ.30 முதல் ரூ.81 வரையும் (பழைய கட்டணம் ரூ.28-ரூ.75) பஸ்களுக்கு ரூ.62 முதல் 169 வரையும் (பழைய கட்டணம் ரூ.58-ரூ.158) கனரக வாகனங்களுக்கு ரூ.119 முதல் ரூ.323 வரையும் (பழைய கட்டணம் ரூ.111-ரூ.301) கட்டணமாக உள்ளது.
கோலப்பன்சேரி சுங்கச் சாவடியில் சென்று வர ரூ.21 முதல் ரூ.115 வரையும் மாதம் முழுவதும் பயணம் செய்ய ரூ.1225 முதல் ரு.7913 ஆகவும் கட்டணம் உள்ளது.
சின்ன முல்லை வாயில் சுங்கச்சாவடியில் சென்றுவர ரூ.18 முதல் ரூ.119 வரையும் மாதம் முழுவதும் பயணிக்க ரூ.1080 முதல் ரூ.6976 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெமிலிச்சேரி சுங்கச்சாவடியில் சென்று வர ரூ.27 முதல் 173 வரையும் மாதம் முழுவதும் பயணம் செய்ய ரூ.1577 முதல் ரூ.10 ஆயிரத்து 192 ஆகவும் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.
வெளிவட்ட சாலையில் உள்ள 4 சுங்கச் சாவடிகளிலும் இந்த ஆண்டு 2-வது முறையாக கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ந் தேதியே கட்டணம் திருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் உள்ள 4 சுங்கச்சா வடிகளிலும் கடந்த ஜனவரி 5-ந் தேதி தான் சுங்கக் கட்டணம் வசூல் தொடங்கியது. சட்டவிதிகளின் படி 6 மாதங்களுக்கு கட்டணத்தை மாற்றி அமைக்க முடியாது. எனவே தற்போது கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஏப்ரல் 1-ந் தேதி திருத்தப்பட்ட கட்டணம் அறிவிக்கப்படும் என்றார்.
ஆவடியை சேர்ந்த டிரைவர் ஓருவர் கூறும்போது, 'பட்டாபிராமில் பாலம் கட்டும் பணியால் தண்டரை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே மாற்றுப் பாதையில் செல்வதால் கூடுதலாக பெட்ரோல், டீசல் வீணாகிறது. இனி, சுங்கச்சாவடிக்கு அதிக செலவு செய்ய வேண்டும்' என்றார்.
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஓட்டல் மாடியில் உள்ள செஸ் ஒலிம்பியாட் அலுவலகத்தின் வரவேற்பு அறை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
- ஒரு அணியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது., இதில் பங்கேற்க பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் பங்கேற்க இருப்பது தற்போது உறுதி ஆகி உள்ளது. இதில் 188 நாடுகளை சேர்ந்த மொத்தம் 343 அணிகள் அதிகாரப்பூர்வ போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளன.
ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு ஒரு கேப்டன், இரு குழுவை ஒருங்கிணைக்க ஒரு தலைவர் என்ற கணக்கில், ஒரு அணியில் 13 பேர் இடம் பெறுகிறார்கள்.
பதிவு செய்துள்ள நாடுகளின் தூதர்கள், அதிகாரிகள், வீரர்கள் போட்டி நடக்கும் இடத்தை பார்க்க வரக்கூடும் என்பதால், மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஓட்டல் மாடியில் உள்ள செஸ் ஒலிம்பியாட் அலுவலகத்தின் வரவேற்பு அறை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
காத்திருக்கும் இடம், பொதுக் கூடம், ஆலோசனை பகுதி, நுழைவு வாயில் என அனைத்து இடங்களிலும் செஸ் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் செஸ் போர்டுகள் வைத்து அலங்காரம் செய்து உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 188 நாடுகளில் இருந்து 343 அணிகள் பங்கேற்க பதிவு செய்து உள்ளன. ஒரு அணியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அணியில் தலைவர் உள்பட 13 பேர் இடம்பெறுவார்கள் என்றார்.
- 9 மாத கர்ப்பிணியான ரம்யா பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு மாமண்டூர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
- அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரம்யா மீது மோதியது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர், கூலி தொழிலாளி. இவரது மனைவி ரம்யா(வயது20). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது.
இந்த நிலையில் ரம்யா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு மாமண்டூர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரம்யா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி ரம்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ரம்யா வயிற்றில் இருந்த 9 மாத ஆண் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. ஆபரேசன் செய்து டாக்டர்கள் குழந்தையை அகற்றினர்.
பலத்த காயம் அடைந்த ரம்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
- பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.
செங்கல்பட்டு:
வந்தவாசியை அடுத்த கீழ்னாமம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (33). இவர் உறவினர் செல்வத்துடன் வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.
செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது சென்னை, மந்தைவெளி, மயிலாப்பூரை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என்பது தெரிந்தது.
அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
- கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி பெரியார் நகர் 13வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி.
- கோவிலுக்கு சென்ற மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி பெரியார் நகர் 13வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி வயது (70). இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் வயது (52) என்பவர் லட்சுமியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு லட்சுமியை காணவில்லை என அவரது கணவர் வேடசாமி கூடுவாஞ்சேரி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து காணாமல் போன லட்சுமியை கூடுவாஞ்சேரி போலீசார் தேடி வந்த நிலையில், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த ஆப்பூர் அருகே உள்ள அரசு காப்புக்காட்டில் லட்சுமி கழுத்தில் கத்தியால் குத்தியும், தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக பாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூதாட்டி லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலூர் போலீசார் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 24-ந்தேதி சந்திரா வீட்டை பூட்டிவிட்டு விருதாச்சலத்தில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
- அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர், ஏ.வி.எம்.நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்திரா. இவர் பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளராக உள்ளார். விஜயகுமார் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த 24-ந்தேதி சந்திரா வீட்டை பூட்டிவிட்டு விருதாச்சலத்தில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
இதுகுறித்து சந்திரா மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
- இளம்பெண் நேர்காணலுக்கு வேலூர் செல்வது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவரிடம் தெரிவித்து இருந்தார்.
- இதற்கிடையே சரவணன் தனது நண்பர்களான சாரதி, சூர்யபிரகாஷ் ஆகியோருடன் காரில் காஞ்சிபுரம் வந்து இளம்பெண்ணை சந்தித்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் நர்சிங் டிப்ளமோ முடித்து உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு காலி பணியிடம் இருப்பதை அறிந்த இளம்பெண் அதில் சேர முடிவு செய்தார்.
இதையடுத்து நர்சு பணிக்கான நேர்காணலுக்கு வேலூர் செல்வதற்காக இளம்பெண் தனது தோழிகள் மேலும் 2 பேருடன் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது இளம்பெண் நேர்காணலுக்கு வேலூர் செல்வது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவரிடம் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே சரவணன் தனது நண்பர்களான சாரதி, சூர்யபிரகாஷ் ஆகியோருடன் காரில் காஞ்சிபுரம் வந்து இளம்பெண்ணை சந்தித்தார்.
அப்போது ஓட்டலில் சாப்பிட்டு செல்லலாம் என்று இளம்பெண்ணை, சரவணன் அழைத்தார்.
இதைத்தொடர்ந்து இளம்பெண் தனது உடன் வந்த 2 தோழிகளையும் வேலூர் செல்லும்படி தெரிவித்தார்.
தான் அடுத்த பஸ்சில் வருவதாக கூறி இளம்பெண், நண்பரான சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் வந்த காரில் சென்றார்.
ஆனால் மதுபோதையில் இருந்த சரவணன் உள்பட 3 பேரும், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் காரிலேயே இளம்பெண்ணை செங்கல்பட்டுக்கு கடத்தி வந்தனர்.
செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் சாலையோரம் உள்ள முட்புர் அருகே காரை நிறுத்தி இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றினர்.
அவர்களிடம் இருந்து இளம்பெண் தப்பிக்க முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து போதை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை சரவணன், அவரது கூட்டாளிகள் சாரதி, சூர்ய பிரகாஷ் ஆகிய 3 பேரும் கற்பழித்தனர்.
பின்னர் இளம்பெண்ணை சாலையோர முட்புதரில் வீசிவிட்டு அங்கிருந்து 3 பேரும் காரில் தப்பி சென்று விட்டனர்.
மறுநாள் காலை எழுந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அலறி துடித்தார். அங்கிருந்து வீட்டுக்கு வந்த அவர் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.
இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான அவரது கூட்டாளிகள் சாரதி, சூர்ய பிரகாஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இவர்களில் சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
தலைமறைவாக உள்ள சாரதி கல்லூரி மாணவர் ஆவார். அவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சூர்யபிரகாஷ் வக்கீல் ஆவார்.
அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு, காயப்படுத்துதல், மிரட்டல், பெண் வன்கொடுமை ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தனக்கு நேர்ந்த கொடுமையால் இளம்பெண் மிகவும் மனமுடைந்து இருந்தார். நேற்று காலை அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலைக்காக சென்றபோது நர்சை நண்பரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி கற்பழித்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






