என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • திருவண்ணாமலையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது.

    வண்டலூர்:

    திருவண்ணாமலையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது நேற்று அதிகாலை கூடுவாஞ்சேரி அருகே வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் ஒரு புறமாக கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 16 பேர் காயம் அடைந்தனர். இதனைப் பற்றி தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்தியா ஏற்கனவே இரண்டு அணிகளை அறிவித்து இருந்தது.
    • தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது.

    உலக செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் தமிழக அரசு இணைந்து நடத்தும் செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஓபன், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது.

    ஓபன் பிரிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 187 அணிகள் கலந்து கொள்கின்றன. பெண்கள் பிரிவில் 162 அணியினர் பதிவு செய்துள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தர வரிசையை சர்வதேச செஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டுக்கான புள்ளிகள் 2771 ஆகும். அதற்கு அடுத்த படியாக அசர்பெய் ஜான் (2705) 2-வது இடத்தில் இருக்கிறது. போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு 3-வது தரவரிசை அளிக்கப்பட்டுள்ளது. தரவரிசை புள்ளிகள் 2696 ஆகும். நார்வே 4-வது வரிசையில் உள்ளது.

    சமீப காலங்களில் செஸ் ஒலிம்பியாட்டில் ரஷியா, சீனா அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த இரு நாடுகளும் இந்த போட்டியில் விளையாடவில்லை. உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா போட்டியில் இருந்து விலகி உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்தியா ஏற்கனவே இரண்டு அணிகளை அறிவித்து இருந்தது. தற்போது 3-வது இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 அணிகளில் 5 தமிழர்கள் இடம் பெற்று உள்ளனர்.

    • தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதில் ஏறினர்.
    • அப்போது டிரைவரான ரவி ‘ஓ.டி.பி.’ எண்ணை கேட்டார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்போரூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரை சேர்ந்தவர் உமேந்தர் (வயது 33). சாப்ட்வேர் என்ஜினீயர். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உமேந்தர் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து வருவது வழக்கம்.

    நேற்று காலை உமேந்தர் தனது குடும்பத்துடன் வாடகை காரில் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவர்களுடன் உறவினரான தேவிபிரியாவும் சென்று இருந்தார். அவர்கள் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பொழுது போக்கு மையத்தில் இருக்கும் தியேட்டரில் படம் பார்த்தனர். பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.

    தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதில் ஏறினர். அப்போது டிரைவரான ரவி 'ஓ.டி.பி.' எண்ணை கேட்டார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த உமேந்தரும், அவரது குடும்பத்தினரும் காரை விட்டு இறங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் ரவி சரமாரியாக உமேந்தரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் உயிருக்கு போராடிய உமேந்தரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உமேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் கார் டிரைவர் ரவியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்பத்தினர் முன்பே என்ஜினீயர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜுன் 1-ந்தேதி நிலவரப்படி 414 காலி பணியிடங்கள் உள்ளன.
    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள இடை நிலை, பட்டதாரி. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 23-ம் தேதி தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    இதற்கிடையே 13 ஆயிரத்து 391 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் ஜூன் 2-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 6-ந்தேதி மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி காஞ்சீபுரம் கல்வி மாவட்டம்_deokpm@gmail.com, ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டம்-depsripdr@gmail.com.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் தகுதியானவர்கள் விண்ணப்பங்களை நேரடியாகவோ, அலுவலகங்களின் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

    திருத்தனி கல்வி மாவட்டம் -deotiruttani@gmail.com, திருவள்ளூர் கல்வி மாவட்டம் deotlr@nic.in. ஆவடி கல்வி மாவட்டம்-deoaavadi@gmail.com, அம்பத்தூர் கல்வி மாவட்டம் -deoambt@gmail.com, பொன்னேரி கல்வி மாவட்டம்-deopont@nic.in. இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜுன் 1-ந்தேதி நிலவரப்படி 414 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    எனவே வரும் 6-ந்தேதிக்குள் செங்கல்பட்டு, மதுராந்தகம், புனித தோமையார் மலை ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களில் தகுதி உடையவர்கள் மின் அஞ்சல் மூலம் மற்றும் நேரிலும் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.
    • மாமல்லபுரம் புறவழிச்சாலையில் புதுப்பிக்கப்படும் பேருந்து நிறுத்தத்தினையும் பார்வையிட்டார்.

    மாமல்லபுரம்:

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு பேருந்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு வருகை தந்த தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளை சேர்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டி நடைபெற உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் சர்வதேச தரத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நவீன செஸ் விளையாட்டு போட்டிக்கான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, விளையாட்டு துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, சுற்றுலாத்துறை, தகவல் தொழில் நுட்ப துறை, போக்குவரத்துறை, மின்வாரியத்துறை செய்தித்துறை, உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 22 துறை அதிகாரிகளுடன் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேருந்தில் போட்டி நடைபெறும் தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மாண்ட விளையாட்டு அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளை முதலில் பார்வையிட்டார்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வடக்கு மாமல்லபுரம் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பில் பொய்கை குளம் தூர் வாரும் பணிகளையும் பார்வையிட்டார். மாமல்லபுரம் புறவழிச்சாலையில் புதுப்பிக்கப்படும் பேருந்து நிறுத்தத்தினையும் பார்வையிட்டார். ஒவ்வொரு வாகனமும் இடையூறின்றி நிற்கவும், வெளியேறவும் தக்க பாதையுடன் நிறுத்துமிடம் ஏற்படுத்துவது, அந்த வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் எப்படி வெளியேறுவது, அதற்கான வழிகளை எப்படி ஏற்படுத்துவது என்று தயார் செய்யப்பட்ட வரைபடம் மூலம் அதிகாரிகளிடம் ஆலோசித்தார். புதிய சாலைகள் அமைக்கும், புதிய மின்சார கேபிள் அமைக்கும் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக சென்னை விமான நிலையத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தரவுள்ள போட்டியாளர்களை வரவேற்று அழைத்து செல்லக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்திருந்த அதிகாரிகளிடம் ஆலாசனை நடத்தினார்.

    அதேபோல் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளையும் அவர் பார்வையிட்டார். சர்வதே செஸ் வீரர்களை கவரும் வகையில் மாமல்லபுரம் நகரத்தை எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் செய்து அழகுபடுத்துவது குறித்தும் மாமல்லபுரம் நகர வீதிகளில் நடந்து சென்று சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் தனியாக ஆலோசனை கேட்டறிந்தார். உடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சுற்றுலா துறை ஆணையா் சந்திரமோகன், பேரூராட்சிகள் துறை ஆணையர் செல்வராஜ், காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகள் உதவ இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ், கவுன்சிலர்கள் ஜீவிதாஸ்ரீதர், தேவிராமு உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

    • கைதான வினோத் ஏற்கனவே தாம்பரம் ரெயில் நிலையத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்று வெளியே வந்தவர்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகிலன் (வயது57). தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரும் அதே பகுதிைய சேர்ந்த வினோத்தும் (32) நண்பர்களாக பழகி வந்தனர்.

    நேற்று இரவு வினோத்தும், பழவியாபாரி கோகிலனும் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் ஒன்றாக மது குடித்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வினோத் அருகில் உள்ள கடைக்கு சென்று காய் வெட்டும் கத்தியை வாங்கி வந்து நண்பர் கோகிலனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கோகிலன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,

    இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற வினோத்தை மடக்கி பிடித்து வைத்து சேலையூர் போலீஸ் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.

    உதவி ஆணையர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட கோகிலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கைதான வினோத் ஏற்கனவே தாம்பரம் ரயில் நிலையத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்று வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.
    • ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். தனியார் நிறுவன மேலாளர்.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். தனியார் நிறுவன மேலாளர். இவர் தன்னிடம் ஏ.டி.எம். கார்டு இருக்கும்போதே மர்ம நபர்கள் போலியான ஏ.டி.எம். கார்டு மூலமும், ஆன்-லைன் மூலமும் அடுத்தடுத்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை சுருட்டி விட்டதாக செங்கல்பட்டு மாவட்ட இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின் படி இணையதள குற்றத் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவ குமார் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் தீவிர நடவடிக்கை காரணமாக மோசடியாக எடுக்கப்பட்ட சுதாகரின் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் அந்த பணம் சுதாகரின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டது. பணத்தை சுருட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுகுணாசிங் கூறியதாவது:-

    பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.எந்த ஒரு நபருக்கும் பணம் அனுப்பும் முன் அவரது உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் இணைய தளங்களில் வரும் லிங்குகளில் சென்று செல்போன் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண் போன்ற எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம்.

    இது தொடர்பான உடனடி புகார்கள் மற்றும் நிதி இழப்புக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருக்கச்சூர் பகுதி தியாகராஜர் கோவில் எதிரே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதி தியாகராஜர் கோவில் எதிரே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளது.

    இந்த குடிநீர் நிலையத்தில் இருந்து வெளியேறும், கழிவு உபரி நீர் செல்வதற்கு கால்வாய் இல்லாததால் சாலையில் விடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான லிட்டர் வீணாக தண்ணீர் சாலையிலேயே விட்டு விடுகின்றனர்.

    மேலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால், மழை நீரும் கழிவு நீரும் கலந்து கோவில் எதிரே குட்டை போல் சாலையில் தேங்கி நிற்கிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குட்டை போல தேங்கி நிற்கும் நீரால் சுகாதாரகேடு ஏற்படும் அவல நிலை உள்ளது.

    இது குறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    எனவே மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் அமைத்து தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் வளாக பகுதிகளில் நடைபெறும்.
    • மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவங்குகிறது.

    மாமல்லபுரம்:

    இம்மாதம் 28ம் தேதி மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" துவங்குகிறது., இதில் பங்கேற்கும் 188 நாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அந்நாட்டு ஊடகவியலாளர்கள் என 2,500க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் வருகிறார்கள்.

    ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் அனைத்து வெளிநாட்டு வீரர்களுக்கும் சுற்றுலாவாக மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுனன்தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி கான்பிக்க, தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இதை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். சாலையோரம் குப்பைகள் தேங்கம் இருக்ககூடாது, நகரம் முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும், மாடு, நாய், பன்றி போன்ற கால்நடைகள் நகரவீதியில் சுற்றக்கூடாது, முக்கியமாக கொசுத் தொல்லை, இருக்ககூடாது என பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

    "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் வளாக பகுதிகளில் நடைபெறும் பணிகள் மற்றும் மாமல்லபுரம் நகர பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய நாளை தலைமை செயலர் இறையன்பு மற்றும் அனைத்து துறை செயலர்களும் மாமல்லபுரம் வருவதாக கூறப்படுகிறது. அதனால் இன்று அப்பகுதிகளை கலைக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

    உரிய கல்வி தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, ஒன்றிய நகராட்சி,அரசு தொடக்க, நடுநிலை, உயர்மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 01.06.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும். விண்ணப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 06.07.2022 மாலை 5.மணி குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிடமாறுதலுக்குட்பட்டது.

    விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி

    மதுராந்தகம் கல்வி மாவட்டம். , பார்த்தசாரதி தெரு.

    மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்,மதுராந்தகம்.

    மின்னஞ்சல் முகவரிdromadurantakam@gmail.com

    செங்கல்பட்டு கல்வி மாவட்டம், அண்ணா சாலை, அறிஞர் அண்ணா நகராட்சி,ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு, மின்னஞ்சல் முகவரி deochengai@gmail.com

    புனித தோமையர் கல்வி மாவட்டம், சி.எல்.சி. வொர்க் ரோடு,அரசு ஆண்கள்

    மேல்நிலைப்பள்ளி வளாகம், குரோம்பேட்டை. மின்னஞ்சல் முகவரி deost.mount@gmail.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

    • 35 வயதை எட்டி விட்ட நிலையில் ஜெனிபருக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை. இதனால் வேதனை அடைந்த அவர் கடும் மனஉளைச்சலில் தவித்தார்.
    • கடந்த 2 நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்த ஜெனிபர் தனது அறையிலேயே முடங்கி கிடந்தார்.

    கேளம்பாக்கம்:

    சென்னையை அடுத்து உள்ள கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூரில் ஓ.எம்.ஆர். சாலையில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    30 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பில் 24-வது மாடியில் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் தனது மகள் ஜெனிபருடன் வசித்து வந்தார். 35 வயதாகும் ஜெனிபர் ஐ.டி. பெண் ஊழியர் ஆவார்.

    சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். கொரோனா காலத்தில் இவரது வேலை பறிபோனது. இதன் பின்னர் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களுக்கு ஜெனிபர் வேலைக்காக ஏறி இறங்கினார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

    35 வயதை எட்டி விட்ட நிலையில் ஜெனிபருக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை. இதனால் வேதனை அடைந்த அவர் கடும் மனஉளைச்சலில் தவித்தார். கடந்த 2 நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்த ஜெனிபர் தனது அறையிலேயே முடங்கி கிடந்தார்.

    சரியான வேலை கிடைக்காத நிலையில் திருமண வாழ்க்கையும் கைகூடாததால் ஜெனிபர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஜெனிபர் 24-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    சத்தம் கேட்டு காவலாளி ஓடிச்சென்று பார்த்தார். அப்போது ஜெனிபர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    மகள் மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட சம்பவத்தை கேள்விப்பட்டதும் தந்தை வில்லியம்ஸ் ஜேம்ஸ் கதறி அழுதார். ஜெனிபரின் தோழிகளும் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜெனிபரின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ஜெனிபர் மன்னார்குடியை சேர்ந்தவர் ஆவார்.

    • அஞ்சுகன் பாலம் சாலையை பொது வழியாக மாற்றி உடனடியாக சீரமைக்க வேண்டும்.
    • சிறிய மழை பெய்தாலும் பாலத்தின் கீழ்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம், வைகை நகர் பகுதியில் அஞ்சுகன் ரெயில்வே பாலம் உள்ளது. இதன் அருகே உள்ள அருள்நகர், ஏ.வி.எம். நகர், கண்ணதாசன் நகர், எம். ஜி. நகர், காமாட்சி நகர், ஆதனூர் ஊராட்சி பகுதி மக்கள் ஊரப்பாக்கம் மெயின் ரோட்டுக்கு செல்ல இந்த ரெயில்வே சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஆனால் இந்த சாலை எந்த வித பராமரிப்பும் இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    சிறிய மழை பெய்தாலும் பாலத்தின் கீழ்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத் திடம் பலமுறை தெரிவித்தும் சாலை சீரமைக்கப்பட வில்லை. இது தொடர்பாக பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    ஆதனூர், எம்.ஜி.நகர், ஏ.வி.எம். நகர், அருள் நகர், கண்ணதாசன் நகர், பகுதி மக்கள் ஊரப்பாக்கம் மெயின்ரோடு செல்வதற்கு அதிக அளவில் இந்த அஞ்சுகன் பாலப்பாதையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இல்லையெனில் ஆதனூர் மேம்பாலம், கூடுவாஞ்சேரி சுரங்கப் பாதையை பயன்படுத்த வேண்டி இருக்கும். இதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் அஞ்சுகன் பாலம் சாலை வழியாக செல்லும் போது பத்து நிமிடங்களில் செல்ல முடியும். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்வோருக்கு இந்த சாலை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

    ஆனால் அஞ்சுகன் பாலம்சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன் படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

    இதனை சீரமைக்க ரெயில்வே நிர்வாகத்தினரிடம் பல முறை புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை. மோசமான சாலையில் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். சிறிய மழை பெய்தாலும் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது.

    எனவே அஞ்சுகன் பாலம் சாலையை பொது வழியாக மாற்றி உடனடியாக சீரமைக்க வேண்டும். இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, இந்த பாலம் சாலை பொது வழி கிடையாது. மக்களின் போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் ஆதனூர் மேம்பாலமும், கூடுவாஞ்சேரி சுரங்கப்பாதையும் உள்ளது. அதனை பயன் படுத்தாமல் வாகன ஓட்டிகள் அஞ்சுகன் பாலம் சாலை வழியாக வருகிறார்கள் என்றனர்.

    ×