என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து சீரமைப்பு"
- அஞ்சுகன் பாலம் சாலையை பொது வழியாக மாற்றி உடனடியாக சீரமைக்க வேண்டும்.
- சிறிய மழை பெய்தாலும் பாலத்தின் கீழ்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.
வண்டலூர்:
ஊரப்பாக்கம், வைகை நகர் பகுதியில் அஞ்சுகன் ரெயில்வே பாலம் உள்ளது. இதன் அருகே உள்ள அருள்நகர், ஏ.வி.எம். நகர், கண்ணதாசன் நகர், எம். ஜி. நகர், காமாட்சி நகர், ஆதனூர் ஊராட்சி பகுதி மக்கள் ஊரப்பாக்கம் மெயின் ரோட்டுக்கு செல்ல இந்த ரெயில்வே சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த சாலை எந்த வித பராமரிப்பும் இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
சிறிய மழை பெய்தாலும் பாலத்தின் கீழ்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத் திடம் பலமுறை தெரிவித்தும் சாலை சீரமைக்கப்பட வில்லை. இது தொடர்பாக பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
ஆதனூர், எம்.ஜி.நகர், ஏ.வி.எம். நகர், அருள் நகர், கண்ணதாசன் நகர், பகுதி மக்கள் ஊரப்பாக்கம் மெயின்ரோடு செல்வதற்கு அதிக அளவில் இந்த அஞ்சுகன் பாலப்பாதையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இல்லையெனில் ஆதனூர் மேம்பாலம், கூடுவாஞ்சேரி சுரங்கப் பாதையை பயன்படுத்த வேண்டி இருக்கும். இதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் அஞ்சுகன் பாலம் சாலை வழியாக செல்லும் போது பத்து நிமிடங்களில் செல்ல முடியும். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்வோருக்கு இந்த சாலை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
ஆனால் அஞ்சுகன் பாலம்சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன் படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
இதனை சீரமைக்க ரெயில்வே நிர்வாகத்தினரிடம் பல முறை புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை. மோசமான சாலையில் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். சிறிய மழை பெய்தாலும் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது.
எனவே அஞ்சுகன் பாலம் சாலையை பொது வழியாக மாற்றி உடனடியாக சீரமைக்க வேண்டும். இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, இந்த பாலம் சாலை பொது வழி கிடையாது. மக்களின் போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் ஆதனூர் மேம்பாலமும், கூடுவாஞ்சேரி சுரங்கப்பாதையும் உள்ளது. அதனை பயன் படுத்தாமல் வாகன ஓட்டிகள் அஞ்சுகன் பாலம் சாலை வழியாக வருகிறார்கள் என்றனர்.






