என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT Woman Employee Suicide"

    • 35 வயதை எட்டி விட்ட நிலையில் ஜெனிபருக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை. இதனால் வேதனை அடைந்த அவர் கடும் மனஉளைச்சலில் தவித்தார்.
    • கடந்த 2 நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்த ஜெனிபர் தனது அறையிலேயே முடங்கி கிடந்தார்.

    கேளம்பாக்கம்:

    சென்னையை அடுத்து உள்ள கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூரில் ஓ.எம்.ஆர். சாலையில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    30 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பில் 24-வது மாடியில் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் தனது மகள் ஜெனிபருடன் வசித்து வந்தார். 35 வயதாகும் ஜெனிபர் ஐ.டி. பெண் ஊழியர் ஆவார்.

    சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். கொரோனா காலத்தில் இவரது வேலை பறிபோனது. இதன் பின்னர் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களுக்கு ஜெனிபர் வேலைக்காக ஏறி இறங்கினார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

    35 வயதை எட்டி விட்ட நிலையில் ஜெனிபருக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை. இதனால் வேதனை அடைந்த அவர் கடும் மனஉளைச்சலில் தவித்தார். கடந்த 2 நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்த ஜெனிபர் தனது அறையிலேயே முடங்கி கிடந்தார்.

    சரியான வேலை கிடைக்காத நிலையில் திருமண வாழ்க்கையும் கைகூடாததால் ஜெனிபர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஜெனிபர் 24-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    சத்தம் கேட்டு காவலாளி ஓடிச்சென்று பார்த்தார். அப்போது ஜெனிபர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    மகள் மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட சம்பவத்தை கேள்விப்பட்டதும் தந்தை வில்லியம்ஸ் ஜேம்ஸ் கதறி அழுதார். ஜெனிபரின் தோழிகளும் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜெனிபரின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ஜெனிபர் மன்னார்குடியை சேர்ந்தவர் ஆவார்.

    ×