என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளரின் வங்கி கணக்கில் ரூ.1½ லட்சத்தை சுருட்டிய கும்பல்
- பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.
- ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். தனியார் நிறுவன மேலாளர்.
வண்டலூர்:
ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். தனியார் நிறுவன மேலாளர். இவர் தன்னிடம் ஏ.டி.எம். கார்டு இருக்கும்போதே மர்ம நபர்கள் போலியான ஏ.டி.எம். கார்டு மூலமும், ஆன்-லைன் மூலமும் அடுத்தடுத்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை சுருட்டி விட்டதாக செங்கல்பட்டு மாவட்ட இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின் படி இணையதள குற்றத் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவ குமார் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர நடவடிக்கை காரணமாக மோசடியாக எடுக்கப்பட்ட சுதாகரின் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் அந்த பணம் சுதாகரின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டது. பணத்தை சுருட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுகுணாசிங் கூறியதாவது:-
பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.எந்த ஒரு நபருக்கும் பணம் அனுப்பும் முன் அவரது உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் இணைய தளங்களில் வரும் லிங்குகளில் சென்று செல்போன் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண் போன்ற எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம்.
இது தொடர்பான உடனடி புகார்கள் மற்றும் நிதி இழப்புக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






