என் மலர்
செங்கல்பட்டு
- கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சீக்னாங்குப்பம் பகுதியில் நடைபெறும் கட்டிட பணியில் லோகேஷ் வேலை பார்த்து வந்தார்.
- முதல் மாடியில் பணியில் இருந்த போது லோகேஷ் கால் தவறி கீழே விழுந்தார்.
மாமல்லபுரம்:
வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 40). வெல்டரான இவர், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சீக்னாங்குப்பம் பகுதியில் நடைபெறும் கட்டிட பணியில் வேலை பார்த்து வந்தார். முதல் மாடியில் பணியில் இருந்த போது கால் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலை குப்புற விழுந்ததால் கழுத்து ஒடிந்து சம்பவ இடத்திலேயே லோகேஷ் பலியானார். இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமையிலான போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர்.
- வாலிபரிடம் அரிய வகை போதைப்பொருளான மெத்தம் பெட்டமைன் பயன்படுத்தி வந்தது கண்டுபிடித்து கைப்பற்றினர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் பகுதியில் வாலிபர்கள் சிலர் மெத்தம் பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமையிலான போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர். அவர், அரிய வகை போதைப்பொருளான மெத்தம் பெட்டமைன் பயன்படுத்தி வந்தது கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்த வகை போதைப்பொருள் 1 கிராம் ரூ.3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதை பெங்களூரில் இருந்து வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து குடியிருப்பில் தங்கி இருந்த மணிகண்டனை(29) போலீசார் கைது செய்தனர். அவரது பெற்றோர் மும்பை பகுதியில் வசித்து வருவதும், தொழில் தொடங்கப் போவதாக கூறி மணிகண்டன் கேளம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.
- மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோவில் வளாகத்தில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது.
- கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு வண்ண, வண்ண கலரில் நூற்றுக்கணக்கான பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோவில் வளாகத்தில் உலக சுற்றுலா தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு இவ்விழாவிற்கு வந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தை விளக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமையில் நெற்றியில் திலகமிட்டு மலர் மாலைகள் அணிவித்து சுற்றுலாத்துறையினர் உற்சாகமாக வரவேற்றனர்.
பிறகு கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு வண்ண, வண்ண கலரில் நூற்றுக்கணக்கான பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அப்போது விழாவிற்கு வந்த இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அங்கு நடந்த கரகம், காவடி ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து, உற்சாகமடைந்து அக்குழுவினருடன் இணைந்து தப்பாட்ட இசைக்கு ஏற்ப தன் தலையில் கரகம் வைத்து கிராமிய கலைக்குழுவினருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
மேலும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சிலரும் ஆர்வ மிகுதியில் கரகாட்ட குழுவினருடன் இணைந்து ஆடிப்பாடி மகிழ்ந்ததையும் காண முடிந்தது. பிறகு சுற்றுலா பயணிகள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள், பங்கேற்ற சுற்றுலா தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஐந்து ரதம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னர், சுற்றுலா தினவிழாவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமல்லபுர இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முதல்வர் சரவணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பகவதி, மூத்த சுற்றுலா வழிகாட்டி எம்.கே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பிரபல பரத நாட்டிய கலைஞர் மீனாட்சி ராகவன் தலைமையில் செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா பரத நாட்டிய பள்ளி குழுவினரின் தசவதாரம், சிவ தாண்டவம் நடனங்கள் நடந்தது. இதனை கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் ரசித்து பார்த்தனர்.
- வீட்டின் உள்ளே தனியாக இருந்த மூதாட்டி பொன்மீனாட்சியிடம் நகைகளை கழட்டி தரும்படி கேட்டுள்ளனர்.
- மூதாட்டி மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ.நகர், கோதண்டராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்மீனாட்சி (வயது 77). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது கணவர் கணேசனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று தனியாக இருந்த மூதாட்டி பொன்மீனாட்சியிடம் நகைகளை கழட்டி தரும்படி கேட்டுள்ளனர்.
அதற்கு மூதாட்டி மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதில் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார். இதனிடையே ரேசன் கடைக்கு சென்று வீடு திரும்பிய கணேசன் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பொன்மீனாட்சி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே காட்டு பகுதியில் சச்சின் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
- போலீசாரை பார்த்ததும் ரவுடி சச்சினும் அவனது கூட்டாளி பரத்தும் நாட்டு வெடி குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் ராஜகோபால் கண்டிகையை சேர்ந்தவன் சச்சின். 25 வயதான இவன் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தான். கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் சச்சின் மீது உள்ளது.
ரவுடி சச்சின் அதே பகுதியில் உள்ள இன்னொரு ரவுடியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சச்சினை பிடித்து சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரவுடி சச்சினை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே காட்டு பகுதியில் சச்சின் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் ரவுடி சச்சினும் அவனது கூட்டாளி பரத்தும் நாட்டு வெடி குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சச்சினை எச்சரித்தனர். தாக்குதலை நிறுத்தி விட்டு சரண் அடைந்து விடுமாறு கூறினார்கள்.
ஆனாலும் ரவுடி சச்சின் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை நிறுத்தவில்லை. அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகளை வீசினான். ஆனால் அந்த குண்டுகள் வெடிக்கவில்லை. தன்னை பிடிக்க வந்த போலீசாரை சச்சின் அரிவாளால் வெட்டினான்.
இதில் போலீஸ்காரர் பாஸ்கருக்கு இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
அவர் தனது துப்பாக்கியை எடுத்து, ரவுடி சச்சினை நோக்கி 3 முறை சுட்டார். இதில் சச்சினின் வலது தொடையில் 2 குண்டுகள் பாய்ந்தன. ஒரு குண்டு தரையில் பாய்ந்து வெடித்தது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடி சச்சின் சுருண்டு கீழே விழுந்தான்.
உடனடியாக போலீசார் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சச்சினை, சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பலத்த பாதுகாப்புடன் ரவுடி சச்சினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வலது தொடையில் பாய்ந்துள்ள குண்டு காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் தொடையில் கட்டு போட்டு உள்ளனர்.
இதற்கிடையே காயம் அடைந்த போலீஸ்காரர் பாஸ்கர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரவுடி சச்சினை பிடிக்க சென்றபோது, அவனுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்துள்ளது. போலீ சாரை நோக்கி ரவுடி சச்சினும் அவனது கூட்டாளி பரத்தும் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் அதிர்ஷ்டவச மாக அந்த குண்டுகள் வெடிக்கவில்லை. இதனால் போலீசார் உயிர் தப்பியுள்ளனர்.
சச்சின் குண்டு காயங்களுடன் பிடிபட்ட நிலையில் கூட்டாளி பரத் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். அவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மோதல் நடந்த இடத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் சோமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சந்துருவை தப்பி ஓட விடாமல் மடக்கிய கும்பல் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.
- பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
வண்டலூர்:
மறைமலைநகர் அடுத்த, தைலாவரம் பகுதியை சேர்ந்தவர் வைகோ என்கின்ற சந்துரு(வயது28). கஞ்சா வியாபாரி. இவரது மனைவி வினிதா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சந்துரு மீது 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு அவர், வீட்டில் மனைவியுடன் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது, 8 பேர் கும்பல் திடீரென சந்துருவின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் சந்துருவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துருவின் மனைவி வினிதா அவர்களை தடுக்க முயன்றார்.
ஆனாலும் சந்துருவை தப்பி ஓட விடாமல் மடக்கிய கும்பல் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தடுக்க முயன்ற வினிதாவின் கையிலும் பலத்த வெட்டு விழுந்தது.
உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கொலையாளிகள் விட்டு சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலையுண்ட சந்துரு நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடியின் கூட்டாளியாக இருந்து உள்ளார். சமீபத்தில் அந்த ரவுடியின் கூட்டாளிகள் மிரட்டல் விடுத்து இருந்ததாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வீடு புகுந்து மனைவி கண்முன் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
- வாலிபர் ஒருவர் பாரதி அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை எல்.ஐ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 24), இவரது மகன் மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு சாலையோரமாக பாரதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பாரதி அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பாரதி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- வெளி மாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் மதுராந்தகம் சாலை புதுப்பட்டு பகுதியில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுராந்தகம்-வேடந்தாங்கல் சாலையில் இருந்து மதுராந்தம் நோக்கி வந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1,440 வெளி மாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல்செய்தனர். மது பாட்டில்களை கடத்தி வந்த புதுச்சேரியை சேர்ந்த பாலமுருகன் (வயது 23) மற்றும் மதிவாணன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- உலக அளவில் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு பெற்று நகரமாகவும் விளங்குகிறது.
- மாமல்லபுரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை வேகமாக முடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் நிறுத்தவும், பயணிகள் அமர போதிய நிழல்குடை, கழிப்பறை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.
தற்போது உலக அளவில் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு பெற்று நகரமாகவும் விளங்குகிறது.
இவைகளை கருத்தில் கொண்டு திருக்கழுக்குன்றம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை இணையும் பகுதியில் உள்ள கருக்காத்தம்மன் கோவில் வட பகுதியில், 6.80 ஏக்கர் நிலத்தில் கலை நயத்துடன் பஸ் நிலையம் கட்ட அரசு திட்டமிட்டு, அதன் கட்டுமான பொறுப்புகளை சி.எம்.டி.ஏ.விடம் ஒப்படைத்தது.
இதில் 1.61 ஏக்கர் நிலம் தொல்லியல்துறை எல்லைக் கட்டுப்பாடு நிபந்தனைக்குள் வருவதால் திட்டம் தொய்வடைந்து வந்தது.
இந்நிலையில் ஏ.எஸ்.ஐ. என்று சொல்லக்கூடிய தொல்லியல்துறையின் தடை இல்லா சான்றுகளை விரைவில் பெற்று, மாமல்லபுரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை வேகமாக முடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென தனி அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- வெளிநாட்டு பயணிகள் இங்கு தங்கியிருந்து கடலோர மணலில் சூரிய குளியல், யோகா, கடலில் அலைச்சறுக்கு விளையாட்டு என பொழுது போக்குவது வழக்கம்.
- கொரியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்க குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்து காலையில் ஓட்டப்பயிற்சி செய்து வருகின்றனர்.
மாமல்லபுரம:
மாமல்லபுரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சர்வதேச புராதன சின்னங்களை கொண்ட ஒரு கடலோர சுற்றுலா நகரமாகும்.
வெளிநாட்டு பயணிகள் இங்கு தங்கியிருந்து கடலோர மணலில் சூரிய குளியல், யோகா, கடலில் அலைச்சறுக்கு விளையாட்டு என பொழுது போக்குவது வழக்கம்.
சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த, சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்கு பிறகு ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சோழிங்க நல்லூர், துரைப்பாக்கம் பகுதிகளில் வேலை செய்யும் கொரியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்க குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்து காலையில் ஓட்டப்பயிற்சி செய்து வருகின்றனர்.
இவர்களிடம் நகரத்தில் ஆடம்பரமான வசதிகள் இருந்தும், 60கி.மீ தூரம் பயணித்து இங்கு வந்து பயிற்சி எடுக்க என்ன காரணம்? என்று கேட்டபோது, "இது உலக புகழ் பெற்ற புராதன யுனஸ்கோ நகரம், கடல் காற்றின் சுவாசம் உடலுக்கு ஆரோக்கியமாகவும், மனதிற்கு அமைதியாகவும் இருக்கிறது, முக்கியமாக எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. வாரத்தில் ஒருநாள் 2 மணி நேரம் இப்படி நிதானமாக ஓடி பயிற்சியில் ஈடுபடுகிறோம்" என்றனர்.
- வரிகுதிரை உடல்நிலை குறைவு காரணமாக கடந்த மே மாதம் 22-ந் தேதி உயிரிழந்தது.
- பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் வரிக்குதிரை இருப்பிடத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
வண்டலூர்:
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயற்கை சூழலுடன் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இந்த பூங்காவில் 2,300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரே ஒரு டீனா என்ற 18 வயதுடைய பெண் வரி குதிரையை பூங்காவிற்கு வரும் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியோர்கள் அனைவரும் நீண்ட நேரம் அதனுடைய இருப்பிடத்தில் நின்று ரசித்து பார்த்து சென்றனர். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வந்த தீனா என்ற இந்த பெண் வரிகுதிரை உடல்நிலை குறைவு காரணமாக கடந்த மே மாதம் 22-ந் தேதி உயிரிழந்தது. இதனால் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் வரிக்குதிரை இருப்பிடத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது:-
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த ஒரே ஒரு பெண் வரிக்குதிரை உயிரிழந்து விட்டதால், தற்போது பூங்காவில் வரிக்குதிரை இல்லாமல் அதனுடைய இருப்பிடம் காலியாக உள்ளது. இதனால் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் மூலம் விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் வரிக்குதிரை அதிகமாக பராமரித்து வரும் வெளிமாநில உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரிக்குதிரையை கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
- சொகுசு கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்கார்கள் மீது மோதியது.
- போலீஸ்காரர்கள் கோவளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருகார்த்திக் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் மீது மோதியது. மேலும் அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பேரிகார்டுகள் மீது மோதி நின்றது.
இதில் போலீஸ்காரர்கள் யோகேஸ்வரன், சுரேஷ் குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். கார் மோதியதில் மோட்டார் சைக்கிள், பேரிகார்டு பலத்த சேதம் அடைந்தன.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் சொகுசு காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






