என் மலர்
செங்கல்பட்டு
- வண்டலூர் பூங்காவிற்கு சாதாரண நாட்களில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வருகை தருகிறார்கள்.
- வண்டலூர் பூங்காவிற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வருகிறார்கள்.
வண்டலூர்:
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இயல்பு நிலை பார்வையாளர்களை கையாண்டுள்ளது.
சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்ட மக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக 2 வருடமாக குழந்தைகளை பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் ஆயுத பூஜை, காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் உயிரியல் பூங்காவுக்கு வழக்கமாக விடுமுறை விடப்படும். தற்போது பண்டிகை கால விடுமுறை என்பதால் அன்று உயிரியல் பூங்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 40 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குனர் கூறியதாவது:-
கடந்த வருடத்திற்கு பிறகு இப்போது பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். பூங்காவிற்கு 3-ந்தேதி 9 ஆயிரம் பேரும், 4-ந்தேதி 13 ஆயிரம் பேரும், 5-ந்தேதி 18 ஆயிரம் பேரும் பார்வையாளர்களாக வருகை புரிந்துள்ளனர்.
சாதாரண நாட்களில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வருகை தருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வருகிறார்கள்.
பண்டிகை விடுமுறை காலம் என்பதால் தற்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்த்து விட்டு வந்த பார்வையாளர் ஒருவர் கூறுகையில், பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. உயிரினங்கள் குறைந்த அளவில் தான் உள்ளன. பறவைகள் முன்பை போல அதிகளவில் இல்லை.
முதலை, காண்டாமிருகம், நீர் யானை போன்ற மிருகங்களுக்கு சூழ்ந்துள்ள தண்ணீர் மாசு அடைந்து துர்நாற்றம் வீசும் வகையில் உள்ளது. தண்ணீரை அடிக்கடி சுத்தம் செய்யப்படாமல் உள்ளன.
இதனால் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் பார்வையாளர்கள் மேலும் அதிகரிப்பார்கள் என்றார்.
- சோத்துப்பாக்கத்தில் வந்தவாசி சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் ஞானவேல்.
- ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞானவேல் செய்தார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் வந்தவாசி சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் ஞானவேல். பத்து ரூபாய் நாணயங்களை மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், பவுஞ்சூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் வாங்குவதில்லை என்ற புகார் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஞானவேல் தனது பிரியாணி கடைக்கு ரூ.10 நாணயம் கொண்டு வந்து கொடுத்தால் ரூ.120 மதிப்பிலான பிரியாணியை இலவசமாக கொடுத்து அனுப்பினார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞானவேல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ்,11,308 வீடுகள் கட்ட அனுமதி.
- கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கோவளம்:
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே முட்டுக்காட்டில் செயல்படுத்தப்படும் சமூக நீதி திட்டங்களின் செயலாக்கம் குறித்து மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அவர் பேசியதாவது:
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 151 கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தூய்மையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் 208 கிராம ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16, 265 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 11,308 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 8 ஆண்டுகளில் கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் அவ்வப்போது, கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
- வண்டலூர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாள்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக திறக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.
வண்டலூர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கி ழமை விடுமுறை நாள் ஆகும். நாளை (4-ந்தேதி) ஆயுத பூஜை விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலானோர் சுற்றுலா தலங்களுக்கு அதிகஅளவில் குடும்பத்துடன் செல்வது வழக்கம்.
எனவே விடுமுறை நாளான நாளை பார்வையாளர்கள் வருகைக்காக வண்டலூர் பூங்காவை திறக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஆயுத பூஜை விடுமுறை நாளான நாளை பார்வையாளர்கள் வருகைக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நாளை வண்டலூர் பூங்காவில் வழக்கத்தை விட கூடுதலாக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- செட்டிபுண்ணியம் அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த கம்சலா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- திருட்டுத்தனமாக மதுவிற்ற தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மது கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை வெளியிட்டு இருந்தார். மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கையை மீறி நேற்று காட்டாங்கொளத்தூர் திருப்பாணாழ்வார் தெருவில் காந்தி ஜெயந்தியன்று திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த வேதம் (வயது 50), வள்ளி (56), பானுமதி (50), சித்ரா (40), சித்தா (40) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 80 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செட்டிபுண்ணியம் அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த கம்சலா (56), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 75 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் பின்புறம் திருட்டுத்தனமாக மதுவிற்ற தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (29) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
- பவித்திரன் மேல்மருவத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
- விவசாய நிலத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்ப் சுவிட்ச்சை போட்டபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரத்தை சேர்ந்தவர் மகன் பவித்திரன், (வயது 20) மேல்மருவத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார். அவரது விவசாய நிலத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்ப் சுவிட்ச்சை போட்டபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பவித்திரன் அதே இடத்தில் உயிரிழந்தார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்பக்கம் டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
- சிட்லப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்:
ஆந்திராவில் இருந்து கடப்பா கல் லோடு ஏற்றிக்கொண்டு வண்டலூர் நோக்கி லாரி ஒன்று நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. லாரியின் பின்பக்கம் கடப்பா கற்கள் மீது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிவாரெட்டி, வரதராஜீ ஆகியோர் அமர்ந்து பயணம் செய்தனர்.
லாரியை டிரைவர் லட்சுமணய்யா(வயது 36) ஓட்டினார். அவருடன் அவரது மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு(50) ஆகியோர் லாரியின் முன்பக்கம் அமர்ந்து வந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் சென்னை தாம்பரம் அடுத்த எருமையூர் செக்போஸ்ட் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென லாரியின் முன்புற வலதுபக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, முடிச்சூர் அருகே சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் லாரியின் பின்புறம் அமர்ந்து வந்த சிவாரெட்டி, வரதராஜீ ஆகியோர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரியில் இருந்த கடப்பா கற்கள் விழுந்தது. இதில் கற்களுக்கு இடையே சிக்கிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
லாரி டிரைவர் லட்சுமணய்யா, அவருடைய மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாலையோரம் கவிழ்ந்து கிடந்த லாரியும் மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதுபற்றி சிட்லப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக பல போராட்டங்களை நடத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வந்த போர்டு கார் தொழிற்சாலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக பல போராட்டங்களை நடத்தினர். இதை தொடர்ந்து கார் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகர் அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை திறப்பு விழாவுக்கு சென்றார். விழா முடிந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் அவரை சந்தித்து மனு கொடுப்பதற்காக கார் தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலை எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலை முன்பு காத்து கொண்டிருந்தனர்.
அதற்கு அனுமதி மறக்கப்பட்டதால் கார் தொழிற்சாலை ஊழியர்கள் ஜி.எஸ்.டி. சாலையில் அமர்ந்து வேலை வேண்டும், வேலை வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஊழியர்களை கைது செய்து மறைமலைநகரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வண்டலூர்:
தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொத்தேரி உள்பட பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை குடிசை தொழில் போல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வண்டலூர் வெங்கடேசபுரம் 4-வது தெருவில் ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது அதில் ஒரு பையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, இருவரும் ஒட்டேரி பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 19), முகமது யூசப் (20) என்பதும், இருவரும் கஞ்சா கடத்தி சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில்பாதை அமைக்கப்பட்டாலும் இன்னும் விரைவு ரெயில்கள் அறிமுகப்படுத்தவில்லை.
- சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரெயிலை விட செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில் சேவை குறைவு.
செங்கல்பட்டு:
சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. தற்போது புறநகர் பகுதிகளில் மக்கள் குடியேறுவது அதிகரித்து உள்ளது.
செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சென்னை நகருக்குள் வருவதற்கு பெரும்பாலும் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் எளிதான மற்றும் குறைந்த கட்டணம் என்பதால் மின்சார ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காலை, மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மாலை நேரங்களில் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நின்று செல்லும் வகையில் கூடுதல் மின்சார விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில்பாதை அமைக்கப்பட்டாலும் இன்னும் விரைவு ரெயில்கள் அறிமுகப்படுத்தவில்லை. இந்த வழித்தடத்தில் விரைவில் விரைவு ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இது குறித்து மின்சார ரெயில் பயணிகள் கூறும்போது, போதிய விரைவு ரெயில் இல்லாததால் நகரில் இருந்து பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் பயணிகள் அனைத்து நிலையங்களில் நின்று செல்லும் வழக்கமான மின்சார ரெயில்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் தாமதமாக வீட்டுக்கு திரும்புகிறார்கள்.
'சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரெயிலை விட செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில் சேவை குறைவு.
எனவே மாம்பலம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்பவர்கள் தாம்பரத்தில் இறங்கி வேறு ரெயிலில் மாறி செல்ல வேண்டி உள்ளது.
மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை மேலும் 3 விரைவு மின்சார ரெயில்களை வைகளை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
இந்த ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கூடுவாஞ்சேரி மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டும் நிறுத்தினால் பயண நேரம் குறைந்தது 15 நிமிடம் குறையும்.
மேலும் மற்ற ரெயில் நிலையங்களில் ஏறும் கூட்டமும் தவிர்க்கப்படும்' என்றனர்.
- மீனவர்கள் வலையில் சிக்கும் ஆற்று நண்டுகள் உயிருடன் ஒரு கிலோ ரூ.1000 வரை கொடுத்து சென்னை ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
- மீனவர்கள் தங்களது வலையில் நண்டுகள் சிக்கியதும் அவற்றை காயமின்றி லாவகமாக பிடித்து அதன் கொடுக்கை கயிற்றை கொண்டு கட்டிவிடுகின்றனர்.
மாமல்லபுரம்:
பக்கிங்காம் கால்வாயில் இணையும் கடற்கரை முகத்துவார பகுதிகளில் உயிர் வாழும் ஆற்று நண்டுகள் கடலின் சீற்றம், கடல் உள்வாங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின்போது கால்வாயில் இருந்து கடலுக்குள் சென்றுவிடும். பின்னர் இந்த வகை நண்டுகள் 3 முதல் 5 மாதங்களில் ஒரு கிலோ எடைக்கு மேல் வளர்கிறது.
இந்த வகை நண்டுகளுக்கு சிங்கப்பூர், மலேசியா, அரேபியா, போலந்து போன்ற வெளிநாடுகளில் அதிக விலை கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் வலையில் சிக்கும் இந்த ஆற்று நண்டுகள் உயிருடன் ஒரு கிலோ ரூ.1000 வரை கொடுத்து சென்னை ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த ஆற்று நண்டுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
மீனவர்கள் தங்களது வலையில் நண்டுகள் சிக்கியதும் அவற்றை காயமின்றி லாவகமாக பிடித்து அதன் கொடுக்கை கயிற்றை கொண்டு கட்டிவிடுகின்றனர். இதனால் இவ்வகை நண்டுகள் 48 மணி நேரம் வரை உயிருடன் இருப்பதாகவும், பின்னர் அதை பாதுகாப்பாக விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
மாமல்லபுரம், கொக்கிலமேடு, தேவநேரி, கோவளம் பகுதியில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வலையில் இந்தவகை ஆற்று நண்டுகள் தற்போது பெருமளவில் பிடிபடுவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை
- தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி, அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது பழுதடைந்து உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து பழு தடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரியிடம் தெரிவித்தனர்.
ஆனால் டிரான்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரி ஒருவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ரூ.14 ஆயிரத்தை சில்லரை காசுகளாக சேகரித்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சில்லரை காசுகளுடன் மற்றொரு தட்டில் பூ, பழம் உள்ளிட்ட தாம்பூலத்துடன் மேளதாளத்துடன் வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வாரிய அலுவலகத்தின் நுழைவு வாயில் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேஜை என இரண்டு இடங்களில் கொண்டு வந்த சில்லரை காசு மற்றும் தாம்பூலத்தட்டை வைத்தனர். இதனை பார்த்து அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க வினர் டிரான்ஸ்பர் மாற்ற முதல் தவணையாக ரூ.14 ஆயிரம் கொடுத்து உள்ளோம், இனியாவது வந்து டிரான்ஸ்பார்மரை மாற்றுங்கள் எனக்கூறி விட்டு அங்கிருந்த மேஜையில் சில்லரை காசை வைத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் விழித்தனர்.
பழுதடைந்த டிரான்ஸ்பர்மரை மாற்ற அதிகாரிகள் லஞ்சம் கேட்டனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.






