என் மலர்
உள்ளூர் செய்திகள்

சச்சின்
தாம்பரம் அருகே ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு
- நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே காட்டு பகுதியில் சச்சின் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
- போலீசாரை பார்த்ததும் ரவுடி சச்சினும் அவனது கூட்டாளி பரத்தும் நாட்டு வெடி குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் ராஜகோபால் கண்டிகையை சேர்ந்தவன் சச்சின். 25 வயதான இவன் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தான். கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் சச்சின் மீது உள்ளது.
ரவுடி சச்சின் அதே பகுதியில் உள்ள இன்னொரு ரவுடியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சச்சினை பிடித்து சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரவுடி சச்சினை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே காட்டு பகுதியில் சச்சின் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் ரவுடி சச்சினும் அவனது கூட்டாளி பரத்தும் நாட்டு வெடி குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சச்சினை எச்சரித்தனர். தாக்குதலை நிறுத்தி விட்டு சரண் அடைந்து விடுமாறு கூறினார்கள்.
ஆனாலும் ரவுடி சச்சின் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை நிறுத்தவில்லை. அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகளை வீசினான். ஆனால் அந்த குண்டுகள் வெடிக்கவில்லை. தன்னை பிடிக்க வந்த போலீசாரை சச்சின் அரிவாளால் வெட்டினான்.
இதில் போலீஸ்காரர் பாஸ்கருக்கு இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
அவர் தனது துப்பாக்கியை எடுத்து, ரவுடி சச்சினை நோக்கி 3 முறை சுட்டார். இதில் சச்சினின் வலது தொடையில் 2 குண்டுகள் பாய்ந்தன. ஒரு குண்டு தரையில் பாய்ந்து வெடித்தது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடி சச்சின் சுருண்டு கீழே விழுந்தான்.
உடனடியாக போலீசார் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சச்சினை, சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பலத்த பாதுகாப்புடன் ரவுடி சச்சினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வலது தொடையில் பாய்ந்துள்ள குண்டு காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் தொடையில் கட்டு போட்டு உள்ளனர்.
இதற்கிடையே காயம் அடைந்த போலீஸ்காரர் பாஸ்கர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரவுடி சச்சினை பிடிக்க சென்றபோது, அவனுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்துள்ளது. போலீ சாரை நோக்கி ரவுடி சச்சினும் அவனது கூட்டாளி பரத்தும் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் அதிர்ஷ்டவச மாக அந்த குண்டுகள் வெடிக்கவில்லை. இதனால் போலீசார் உயிர் தப்பியுள்ளனர்.
சச்சின் குண்டு காயங்களுடன் பிடிபட்ட நிலையில் கூட்டாளி பரத் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். அவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மோதல் நடந்த இடத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் சோமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






