என் மலர்
செங்கல்பட்டு
- அண்ணன், தம்பிக்கு சொத்து தொடர்பாக மீண்டும் மோதல் ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்பநாபனை சரமாரியாக தாக்கினர்.
மாமல்லபுரம்:
கூவத்தூரை அடுத்த முகையூர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது52). விவசாயி. இவருக்கும் இவரது அண்ணன் ராமச்சந்திரனுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவும் சொத்து தொடர்பாக அவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்பநாபனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பத்பநாபன் மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பத்மநாபன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிங்கப்பெருமாள் கோவிலில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த தேவக்கோட்டையை சேர்ந்த வீரமணி (வயது 31), என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
- மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் சிற்பங்கள் செதுக்கும் கற்களை போட்டு ஆக்கிரமிப்பு
- நீர்வழி தடங்களை தடுக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மாமல்லபுரம்:
வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு தொடர்பாக நீர்நிலை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைவாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கோவளம் முதல் கல்பாக்கம் புதுப்பட்டினம் வரையான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏதும் இருக்கிறதா? வெள்ளத் தடுப்பு தேவைப்படும் பகுதிகள் உள்ளதா? கால்வாய் சீரமைப்பு தேவையா? என்பது தொடர்பாக பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் திலிப்குமார், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகர், வருவாய் ஆய்வாளர் ரகு, கிராம நிர்வாக அதிகாரி முனிசாமி உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் சிற்பங்கள் செதுக்கும் கற்களை போட்டு ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதும், வெண்புருஷம், பூஞ்சேரி, மணமை, வடக்கு மாமல்லபுரம், தேவநேரி பகுதிகளில் உள்ள சில இறால் பண்ணைகள் கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதியில் வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து நீர்வழி தடங்களை தடுக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
- உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
- கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 40யை தொல்லியல்துறை கட்டணமாக வசூலித்து வருகிறது.
நுழைவு சீட்டை ஆன்-லைன் வழியாகவும், கவுண்டரில் பணம் செலுத்தி வாங்கும் விதிமுறை இருந்து வந்தது.
இந்த நிலையில் புராதன சின்னங்களில் உள்ள நுழைவு டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் அச்சிடும் 'பேப்பர் ரோல்' இல்லை என்று கூறு தொல்லியல்துறை ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை திடீரென்று மூடிவிட்டனர்.
இதனால் உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆன் லைன் டிக்கெட் மொபைல் போனில் எடுக்க தெரியாத கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.
வெளிநாட்டு பயணிகள் கையில் இந்திய ரூபாய் இருந்தும் டிக்கெட் எடுக்க முடியாமல் தினறினர். அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் அவர்கள் நாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி ஆன்-லைன் டிக்கெட் எடுக்க மணிக்கணக்கில் ரோட்டில் காத்திருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் பயணிகளிடம் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றனர்.
எனவே புராத சின்னங்களில் பூட்டப்பட்ட டிக்கெட் கவுண்டரை மீன்டும் திறந்து நுழைவு சீட்டு கொடுக்க வேண்டும் என சுற்றுலா வழிகாட்டிகளும், சுற்றுலா ஆர்வலர்களும் மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்., பேப்பர் ரோல் தட்டுப்பாடு காரனமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.
- அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் வெள்ளத்தால் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதையும் தெரிவிக்கலாம்.
- செயலியில் கொடுக்கப்படும் புகார்கள் தொடர்பாக உடனடியாக புகார்தாரரை அணுகி விவரங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கூடுவாஞ்சேரி:
வண்டலூரை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க புதிதாக செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை, சாலை, மற்றும் கழிவு நீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பதிவு செய்து உடனடியாக தீர்வு காணலாம்.
நம்ம நந்திவரம்- கூடுவாஞ்சேரி என்ற இந்த புதிய செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிமுகம் செய்து வைத்தார். இதில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., ஒன்றிய துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான ஆராமுதன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக், மறைமலைநகர் நகராட்சி நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம் துணை தலைவர் சித்ரா கமலக் கண்ணன். காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைவர் உதயா கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய செயலி குறித்து நகர மன்ற தலைவர் கார்த்திக் கூறியதாவது:-
கூடுவாஞ்சேரி செயலி மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் நகராட்சி சம்பந்தமான வரி பிரச்சினை, குடிநீர் பிரச்சினை கால்வாய் பிரச்சினை சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் மின்இணைப்பு சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் வெள்ளத்தால் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதையும் தெரிவிக்கலாம். இந்த செயலியில் கொடுக்கப்படும் புகார்கள் தொடர்பாக உடனடியாக புகார்தாரரை அணுகி விவரங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே அடிப்படைத் தேவைகள் குறித்து மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலியை நந்திவரம் கூடுவாஞ்சேரி யில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திடீரென கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கரும்புகை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
- கடை உரிமையாளர் முத்துப்பாண்டி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மூலக்கழனி கிராமத்தில் முத்துப்பாண்டி (வயது 37), என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கடையில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கரும்புகை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் தீயில் கடையில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து கடை உரிமையாளர் முத்துப்பாண்டி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது ஏதாவது மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
- கடந்த ஏப்ரல் மாதம் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனியாக கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது.
- குப்பை குவியலால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
வண்டலூர்:
காஞ்சிபுரத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வண்டலூர் தாலுகா தனியாக பிரிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் வண்டலூர் ஊராட்சியின் பழைய அலுவலகத்தில் திறக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனியாக கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான 1.75 ஏக்கர் நிலத்தை வட்டாட்சியர் ஆறுமுகம் மீட்டார். அப்போது அந்த இடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த இடத்தில் பெயர் பலகையும் வைக்கப்பட்டது. ஆனால் வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற வில்லை.
இதற்கிடையே காலியாக இருந்த அந்த இடத்தை வண்டலூர் ஊராட்சி கடந்த சில மாதங்களாக குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து மேடாக காட்சி அளிக்கிறது.
இந்த குப்பை குவியலால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வட்டாட்சியர் அலுவலகத்துக்காக மீட்கப்பட்ட இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
இங்கே கொட்டப்படும் கழிவுகளை கால்நடைகள் மற்றும் வனப்பகுதியில் இருந்து வரும் மான்கள் மேய்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகளையும் சாப்பிடுவதால் ஆடு, மாடு மற்றும் மான்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி அதில் வட்டாட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
+2
- 2 முதல் 5 வயது 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு, 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகின்றது.
- குழந்தைக்கு 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமை தாங்கினார்.
தி.மு.க. மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன், மறைமலைநகர் நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணைத்தலைவர் ஆராமுதன், மறைமலைநகர் துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆப்பூர், சந்தானம், மாவட்ட திட்ட அலுவலர் சற்குணா ஆகியோர் கலந்துகொண்டு 350 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, மாலை அணிவித்து, வளையல்கள் பூட்டப்பட்டு, நலங்கு வைத்து வளைகாப்பு விழா நடத்தினர்.
பின்னர் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் கூறினர். மேலும் இந்த விழாவில் ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகை உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1266 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களின் 6 மாதம் முதல் 6 வயது வரை 55391 குழந்தைகள், 8878 கர்ப்பிணி பெண்கள், 6909 பாலூட்டும் தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டு இணை உணவு வழங்கப்படுகின்றது.
2 முதல் 5 வயது 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு (ம) 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகின்றது. பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாதாமாதம் எடை (ம) உயரம் எடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொண்டு, குழந்தைகள் மையத்தில் வழங்கும் இணை உணவு பெற்றுக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். இரும்பு சத்து, போலிக் அமிலம் (ம) சுண்ணாம்பு சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ளுதல் வேண்டும். பிறக்கும் குழந்தை 2.5 கிலோ எடைவுடன் பிறக்கவும், தாய் இரத்தசோகையால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தினமும் சரிவிகித சத்தான உணவு (ம) இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
குழந்தை பிறந்த 1/2 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 7 மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவும் வழங்க வேண்டும். கர்ப்ப கால மற்றும் பாலூட்டும் காலத்தில் தாய் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருத்தேரி-பாரேரி இடையே சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போதாக்குறைக்கு குறுக்கும் நெடுக்குமாக இருசக்கர வாகனங்கள், தனியார் நிறுவன பஸ்கள் செல்வதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
சிங்கப்பெருமாள்கோவில்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்டது திருத்தேரி கிராமம். இதற்கு எதிரே உள்ளது பாரேரி கிராமம். இந்த 2 கிராமங்களுக்கு மத்தியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 6 மாதங்களுக்கு முன்னர் 8 வழிச்சாலை பணிக்காக சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இந்த பகுதிகளில் தென்மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வீடு எடுத்து தங்கி ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் காலை, மதியம், இரவு என சுழற்சி முறையில் பணிக்கு செல்கின்றனர். இவர்கள் மட்டும் அல்லாமல் திருத்தேரி, பாரேரி கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் காலை முதல் நள்ளிரவு வரை பரபரப்பாகவே காணப்படும்.
தற்போது 8 வழிச்சாலையில் யாரும் சாலையை கடக்காத வண்ணம் இரும்பு தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவோ, நின்று சாலையை கடக்கவோ நடைபாதை கிடையாது. இந்த நிலையில் வாகனங்கள் பயங்கர வேகத்தில் வருவதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. போதாக்குறைக்கு குறுக்கும் நெடுக்குமாக இருசக்கர வாகனங்கள், தனியார் நிறுவன பஸ்கள் செல்வதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
இந்த வழியாக பல அரசு அதிகாரிகளும், போலீசாரும் செல்கின்றனர். பொதுமக்கள் பலர் புகார் கூறியும் இதுநாள் வரை இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை, ஒரு சிக்னலும் அமைக்கவில்லை பொதுமக்களின் மீது அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவுக்கு வரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
- கை பையை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்று விட்டார். அந்த பையில் செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தார்.
- மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்குன்றம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 51), இவர் கடந்த 6-ந்தேதி பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவரது கை பையை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்று விட்டார். அந்த பையில் செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தார்.
இதுகுறித்து பிரபாகரன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனின் கைப்பை மற்றும் செல்போனை திருடிய வழக்கில் சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த விமல் பாபு (வயது 42), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- அச்சரப்பாக்கம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் பாலாஜி (வயது 26). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி இதேபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






