என் மலர்
நீங்கள் தேடியது "நம்ம நந்திவரம் கூடுவாஞ்சேரி செயலி"
- அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் வெள்ளத்தால் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதையும் தெரிவிக்கலாம்.
- செயலியில் கொடுக்கப்படும் புகார்கள் தொடர்பாக உடனடியாக புகார்தாரரை அணுகி விவரங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கூடுவாஞ்சேரி:
வண்டலூரை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க புதிதாக செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை, சாலை, மற்றும் கழிவு நீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பதிவு செய்து உடனடியாக தீர்வு காணலாம்.
நம்ம நந்திவரம்- கூடுவாஞ்சேரி என்ற இந்த புதிய செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிமுகம் செய்து வைத்தார். இதில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., ஒன்றிய துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான ஆராமுதன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக், மறைமலைநகர் நகராட்சி நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம் துணை தலைவர் சித்ரா கமலக் கண்ணன். காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைவர் உதயா கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய செயலி குறித்து நகர மன்ற தலைவர் கார்த்திக் கூறியதாவது:-
கூடுவாஞ்சேரி செயலி மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் நகராட்சி சம்பந்தமான வரி பிரச்சினை, குடிநீர் பிரச்சினை கால்வாய் பிரச்சினை சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் மின்இணைப்பு சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் வெள்ளத்தால் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதையும் தெரிவிக்கலாம். இந்த செயலியில் கொடுக்கப்படும் புகார்கள் தொடர்பாக உடனடியாக புகார்தாரரை அணுகி விவரங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே அடிப்படைத் தேவைகள் குறித்து மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலியை நந்திவரம் கூடுவாஞ்சேரி யில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






