என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வண்டலூரில் வட்டாட்சியர் அலுவலகம் கட்ட மீட்கப்பட்ட இடம் குப்பைமேடாக மாறியது
    X

    வண்டலூரில் வட்டாட்சியர் அலுவலகம் கட்ட மீட்கப்பட்ட இடம் குப்பைமேடாக மாறியது

    • கடந்த ஏப்ரல் மாதம் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனியாக கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது.
    • குப்பை குவியலால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    காஞ்சிபுரத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வண்டலூர் தாலுகா தனியாக பிரிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் வண்டலூர் ஊராட்சியின் பழைய அலுவலகத்தில் திறக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனியாக கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது.

    இந்த நிலையில் அப்பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான 1.75 ஏக்கர் நிலத்தை வட்டாட்சியர் ஆறுமுகம் மீட்டார். அப்போது அந்த இடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த இடத்தில் பெயர் பலகையும் வைக்கப்பட்டது. ஆனால் வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற வில்லை.

    இதற்கிடையே காலியாக இருந்த அந்த இடத்தை வண்டலூர் ஊராட்சி கடந்த சில மாதங்களாக குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து மேடாக காட்சி அளிக்கிறது.

    இந்த குப்பை குவியலால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வட்டாட்சியர் அலுவலகத்துக்காக மீட்கப்பட்ட இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இங்கே கொட்டப்படும் கழிவுகளை கால்நடைகள் மற்றும் வனப்பகுதியில் இருந்து வரும் மான்கள் மேய்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகளையும் சாப்பிடுவதால் ஆடு, மாடு மற்றும் மான்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி அதில் வட்டாட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×