search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடுவாஞ்சேரியில் 350 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வளைகாப்பு விழா- அமைச்சர் பங்கேற்பு

    • 2 முதல் 5 வயது 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு, 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகின்றது.
    • குழந்தைக்கு 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன், மறைமலைநகர் நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணைத்தலைவர் ஆராமுதன், மறைமலைநகர் துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆப்பூர், சந்தானம், மாவட்ட திட்ட அலுவலர் சற்குணா ஆகியோர் கலந்துகொண்டு 350 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, மாலை அணிவித்து, வளையல்கள் பூட்டப்பட்டு, நலங்கு வைத்து வளைகாப்பு விழா நடத்தினர்.

    பின்னர் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் கூறினர். மேலும் இந்த விழாவில் ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகை உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1266 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களின் 6 மாதம் முதல் 6 வயது வரை 55391 குழந்தைகள், 8878 கர்ப்பிணி பெண்கள், 6909 பாலூட்டும் தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டு இணை உணவு வழங்கப்படுகின்றது.

    2 முதல் 5 வயது 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு (ம) 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகின்றது. பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாதாமாதம் எடை (ம) உயரம் எடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொண்டு, குழந்தைகள் மையத்தில் வழங்கும் இணை உணவு பெற்றுக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். இரும்பு சத்து, போலிக் அமிலம் (ம) சுண்ணாம்பு சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ளுதல் வேண்டும். பிறக்கும் குழந்தை 2.5 கிலோ எடைவுடன் பிறக்கவும், தாய் இரத்தசோகையால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தினமும் சரிவிகித சத்தான உணவு (ம) இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

    குழந்தை பிறந்த 1/2 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 7 மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவும் வழங்க வேண்டும். கர்ப்ப கால மற்றும் பாலூட்டும் காலத்தில் தாய் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.




    Next Story
    ×