என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கடந்த 23-ந் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக சங்கர் பெரிய காட்டுப்பாக்கம் வந்தார்.

    மாமல்லபுரம்:

    செய்யூர் அடுத்த விளம்பூரை சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது26). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஈஸ்வரி திருக்கழுகுன்றம் அடுத்த பெரிய காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி தீபாவளி கொண்டாடுவதற்காக சங்கர் பெரிய காட்டுப்பாக்கம் வந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவி ஈஸ்வரியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சங்கரை தேடிவந்தனர்.

    இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கல்பாக்கம் அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் என்ற இடத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென வலது பக்க சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் கார் நொறுங்கிது.

    காரில் பயணம் செய்த சரண்ராஜ் (வயது 24), மோகன்ராஜ் (வயது 23) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அதே காரில் பயணம் செய்த பிரவீன், நந்தா, வேலு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் பயணம் மேற்கொண்ட இவர்கள் 5 பேரும் கேளம்பாக்கம் அருகே உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் பெயிண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். தீபாவளி விடுமுறையையொட்டி புதுச்சேரியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் கேளம்பாக்கம் திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • திருப்போரூரில் உள்ள சிறப்பு பெற்ற கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கந்த சஷ்டி விழா தொடங்கியதையடுத்து ஏராளமான பக்தர்கள் பச்சை நிற ஆடையுடன், பச்சை மணி மாலையினை அணிந்து கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

    திருப்போரூர்:

    முருகன்கோவில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. திருப்போரூரில் உள்ள சிறப்பு பெற்ற கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, மாலை இருவேளையும் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவார். வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மறுநாள்(31-ந்தேதி) வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்போரூர் கந்தசாமி தகோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் வெற்றிவேல் செய்துள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கோவில் கொடிமரத்தில் வேல் பொறித்த கொடியினை கோவில் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க ஏற்றினர்.

    கந்த சஷ்டி விழா தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் பச்சை நிற ஆடையுடன், பச்சை மணி மாலையினை அணிந்து கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கி கோவில் வளாகத்தில் 108 சுற்றுக்கள் சுற்றி வலம் வந்தனர். விழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி நாள்தோறும் ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். சூரசம்ஹார திருவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.

    • சரத்குமார் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
    • சரத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகாயம் அடைந்த ரமேஷ் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் ரமேஷ். இவரது கடைக்கு வந்த வாலிபர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். இதனை ரமேஷ் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் திடீரென ரமேசை கத்தியால் குத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த சரத்குமார் (28) என்பதும், இவர் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுகாயம் அடைந்த ரமேஷ் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • சவிதா அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான சுபா உள்ளிட்ட 10 பேருடன் துறையூரில் இருந்து ஆட்டோ மூலம் கடப்பாக்கம் குப்பம் கடற்கரைக்கு வந்தார்.
    • ராட்சத அலை மாணவி சவிதாவை கடலுக்குள் இழுத்து சென்றது.

    மதுராந்தகம்:

    செய்யூர் அருகே உள்ள துறையூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவரது மகள் சவிதா (வயது13). ஆண்டார்குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சவிதா அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான சுபா உள்ளிட்ட 10 பேருடன் துறையூரில் இருந்து ஆட்டோ மூலம் கடப்பாக்கம் குப்பம் கடற்கரைக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் அனைவரும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ராட்சத அலை மாணவி சவிதாவை கடலுக்குள் இழுத்து சென்றது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சவிதாவை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி மாயமானார். அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சூனாம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் மூழ்கி மாயமான மாணவி சவிதாவை அப்பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியுடன் தேடி வருகிறார்கள்.

    • குளங்களை அழகுபடுத்தி, உறுதியாக்கும் மேம்பாட்டு பணிகளை பேரூராட்சி தொடர்ந்து செய்து வருகிறது.
    • வரப்பை உறுதியாக்கும் முயற்சியாக 400க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஊன்றினர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சோலைப்பொய்கை, வண்ணான்குட்டை குளங்களை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த குளங்களை அழகுபடுத்தி, உறுதியாக்கும் மேம்பாட்டு பணிகளை பேரூராட்சி தொடர்ந்து செய்து வருகிறது.

    அழகுபடுத்தும் விதமாக வரப்பின் நடைபாதை ஓரங்களில் சிகப்பு, வெள்ளை, அரளி செடிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பாதாம், வேம்பு, புங்கை, பூவரசு உள்ளிட்ட மரங்களையும் நட்டு வருகின்றனர். வரப்பை உறுதியாக்கும் முயற்சியாக 400க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஊன்றினர். ஏற்கனவே இ.சி.ஆர் ரோடு விரிவாக்க திட்டத்திற்காக வேரோடு தோண்டி அகற்றப்பட்ட 5 மரங்களை அப்பகுதியில் நட்டு உயிர் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பனை விதை விதைக்கும் இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அர்ச்சுனன்தபசு பகுதியில் சிலர் தீபாவளி பட்டாசு சரவெடிகளை வெடித்துள்ளனர்.
    • தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த புராதன சின்னங்களை பாதுகாப்பதில் அத்துறை காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, அர்ச்சுனன்தபசு, புலிக்குகை போன்ற பகுதிகளை ஐ.நா. சபையின் கலாச்சார பிரிவு (யுனஸ்கோ) சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களாக அங்கீகரித்து உலகளவில் விளம்பரமும் செய்து வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் குவிகின்றனர். இவர்களிடம் மத்திய தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக ரூ.600 வசூலிக்கின்றனர்.

    இந்த நினைவு சின்னங்களில் உள்நாட்டு பயணிகள், காதலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது பெயர்களை கரியால் எழுதுவதும், கற்கலால் கிறுக்குவது, அதன்மேல் அமர்ந்து மது அருந்துவது என சிற்பங்களை சேதப்படுத்தி வந்தனர். இதை தடுக்கும் வகையில் தொல்லியல்துறை நிர்வாகம் கூடுதலாக நிதி ஒதுக்கி, துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பு போட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது.

    இந்நிலையில் அர்ச்சுனன்தபசு பகுதியில் சிலர் தீபாவளி பட்டாசு சரவெடிகளை வெடித்துள்ளனர். இதில் அர்ச்சுனன்தபசு யானை சிலை மீது ஒரு பட்டாசு விழுந்து வெடித்துள்ளது. இதனால் அதில் லேசான சேதமும், கருமை நிறமும் படர்ந்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த புராதன சின்னங்களை பாதுகாப்பதில் அத்துறை காவலர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலகத்தில் கேட்டபோது புராதன சின்னம் அருகில் வெடி வெடிக்க தடைகள் இருந்தும் அத்துமீறி வெடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து எங்கள் டிக்கெட் கவுண்டர், பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம். இனி இதுபோல் நடப்பதை தடுக்க பண்டிகை நாட்களில் அப்பகுதியில் கூடுதல் காவலர்களை நிறுத்துவோம் என்றனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை நடந்தது.
    • தனியார் பள்ளி முதல்வர் சங்கர நாராயணன், லட்சுமி பிரிபா, ரூபா உள்பட ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    செங்கல்பட்டு:

    பன்னாட்டு லயன் சங்கம் மற்றும் செங்கல்பட்டு பல்லவாலயன் சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை நடந்தது.

    பள்ளி மாணவ- மாணவிகள், வாகனங்கள் ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிய வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். செங்கல்பட்டு பல்லவா லயன் சங்க தலைவர் கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் லயன் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், முத்து கிருஷ்ணன், மண்டல லயன் சங்க தலைவர் தேவராஜன், வட்டார லயன் சங்க தலைவர் குமார்,சிறப்பு அழைப்பாளர்கள் லயன் கருணாநிதி, லயன் நந்த குமார், லயன் டாக்டர் ஜெயக்குமார், தனியார் பள்ளி முதல்வர் சங்கர நாராயணன், லட்சுமி பிரிபா, ரூபா உள்பட ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    • நிகில் கெமிக்கல் பொருளை கரைத்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
    • மறைமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை செய்து வருகிறார்.

    வண்டலூர்:

    பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தவர் நிகில். இவர் பொத்தேரியில் உள்ள ஆபோட் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    நேற்று இரவு அவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மற்றொரு மாணவனுக்கு போன் செய்து விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து பார்த்த போது நிகில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிகில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மும்பையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நிகில் கெமிக்கல் பொருளை கரைத்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவர் அந்த ரசாயன கெமிக்கலை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்று உள்ளார்.

    நிகிலின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது பற்றி மறைமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை செய்து வருகிறார்.

    • திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் சனி மஹா பிரதோஷம் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்தாம் வாரம் நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் சனி மஹா பிரதோஷம் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள நந்தி சிலைக்கு பன்னீர், இளநீர், பால், சந்தனம், திருநீர் அபிஷேகம், பூ அலங்காரம் செய்யப்பட்டு அங்கிருந்து மலை உச்சியில் இருக்கும் வேதகிரீஸ்வருக்கு தீபாராதனை காண்பிக்கபட்டது.

    மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்தாம் வாரம் நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கவிஞர் வரதராஜன் தலைமையில் நீலமங்கலம் பஜனை கோஷ்டியினரின் ஆன்மீக பஜனை நடத்தப்பட்டது. உள்ளூர், வெளியூர் பெருமாள் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் பஜனையில் பங்கேற்று பார்த்து, கேட்டு ரசித்தனர்.

    • மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தென் மாவட்டங்களுக்கு அதிக வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகைக்காக சென்னை தாம்பரத்தில் சானிடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம் என 2 பஸ் நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பஸ்களும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

    சென்னை புறநகர் பகுதியில் இருந்து செல்லக்கூடிய பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தாம்பரம் சானிடோரிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.

    மேலும் அதிக அளவில் பயணிகள் கூட்டம் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சீர்செய்து வருகின்றனர்.

    மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் நாளை முதல் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தென் மாவட்டங்களுக்கு அதிக வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சுங்கச்சாவடி நிர்வாகம் மொத்தம் உள்ள 10 கட்டணம் வசூலிக்க மையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளன. வாகனம் இரு சாலையில் இயக்க தலா 5 கவுண்டர்கள் இயக்குவது வழக்கம்.

    தென்மாவட்ட சாலையில் கூடுதலாக வாகனங்கள் செல்வதால் இந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக இரண்டு சாலை பயன்படுத்துவதால் நெரிசல் என்பது மிக குறைவாகவே காணப்படுகிறது. அப்படி இருந்தும் வாகனங்கள் ஒரு சில சமயத்தில் அதிகபடியாக வருவதால் ஒரு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர், சிங்கபெருமாள்கோவில், மகேந்திரா தொழில் பூங்கா மற்றும் பரனூர் டோல்கேட் வரை சென்னை-திருச்சி தேசிய நேடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சிறப்பு காவல் படை போலீசார் ஆகியோர் வாகனங்களை போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு விபத்துகள் ஏற்படாது சரிசெய்தனர்.

    அப்படியிருந்தும் வாகனங்கள் ஒவ்வொரு பகுதியை கடந்து செல்ல 30-நிமிடம் தாமதமானதாக வாகனங்களில் பயணம் செய்த பொதுமக்கள் கூறினர். காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டதால் பரனூர் சுங்கச்சாவடியில் 2 சக்கர வாகனங்கள் ஆட்டோ போன்ற வாகனங்கள் டோல்கேட் கடந்து மின் விளக்குகள் பொருத்தி தனிபாதைகள் அமைக்கப்பட்டது.

    அந்தபாதையில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்தனர். பேருந்துகள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்தவர்கள் 30 நிமிடம் தாமதமாக கடந்து சென்றனர்.

    • கடலின் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது.
    • ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சுற்றுவட்டார கடலோர பகுதிகளில் 2 நாட்களாக அதிகாலையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை மாமல்லபுரம், தேவநேரி, வெண்புருஷம், கொக்கிலமேடு, சூலேரிக்காடு, நெம்மேலி, கடல் பகுதியில் அதிகப்படியான காற்று வீசியது.

    கடலின் சீற்றமும் அதிகளவில் காணப்பட்டது. ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பெயரில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் வருவாய் துறையினர் மழை மற்றும் புயல் பாதுகாப்பு குறித்து கடலோர பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ×