என் மலர்
அரியலூர்
அரியலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணாசிலை முன்பு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், இச்சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒற்றுமை திடலில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக செல்ல பா.ஜ.க. கேட்ட அனுமதியை போலீசார் மறுத்ததன் காரணமாக அண்ணாசிலை முன்பு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொறுப்பாளர்கள் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியாவில் வசிக்கும்யாருக்கும் பாதிப்பில்லை என்றும், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை சட்ட திருத்தத்தில் சான்றுகள் பரிசோதிக்கப்படும். மேலும் இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து கலவரத்தை தூண்டுபவர்களை எதிர்த்து பா.ஜ.க. சார்பிலும், தொடர் போராட்டங்கள் முன்எடுக்கப்படும் என்று பேசினர். இதனையடுத்து பேரணியாக செல்லமுயன்றவர்களை சிறிது தூரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து, பொறுப்பாளர்கள் 10 பேர் மாவட்ட கலெக்டர் ரத்னாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கலவரத்தை தூண்டும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீதும், மற்ற இஸ்லாமிய அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என தெரிவித்து இருந்தனர். பா.ஜ.க.வினர் பேரணியை முன்னிட்டு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
*அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் தா.பழூர் பிள்ளையார் கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்தார். தொடர்ந்து லாரிகளையும், லாரி டிரைவர்களான விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கள்ளுந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது 39) மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன்(24) ஆகியோரை கைது செய்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*தா.பழூர் பஸ் நிறுத்தத்தில் வன்முறையை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்த கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் கடந்த 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கங்தோண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சுகதேவ் என்கிற கமலக்கண்ணன்(38) என்பவர் பாரத பிரதமரை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்திநகரை சேர்ந்தவர் மாரி(வயது 35). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மதியம் காந்திநகர் அருகே உள்ள பிச்சனேரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதில் அவருக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பசுமை நல சங்கம் சார்பில் ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் அந்த பள்ளிக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகளுக்கு ரூ.12 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பு அறையை அமைத்து கொடுத்துள்ளனர். அந்த அறையில் குளிர்சாதன வசதி, புராஜெக்டர், கணினி, பிரிண்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து கொடுத்துள்ளனர். மேலும், பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்வதற்கு வாகனம் வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். அந்த ஸ்மார்ட் வகுப்பு அறையினை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இதேபோல முன்னாள் மாணவர்கள் தங்களது பகுதிகளிலுள்ள பள்ளிகளை தேர்ந்தெடுத்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து கல்வியில் பெரும் பங்கு ஆற்ற வேண்டும் என்றார்.
இதில் செந்துறை கல்வி மாவட்ட அலுவலர் சுந்தர்ராஜூ, தாசில்தார் குமரய்யா, வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், பள்ளி தலைமையாசிரியை விஜயராணி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நிர்மலா, வசந்தி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், பள்ளி மேலாண்மைகுழு தலைவர் சாந்தி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பசுமை நல சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆறுமுகம், மலர்க்கொடி, கனிமொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி ஆசிரியை வானதி நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., கலந்து கொண்டார். இதில் பங்கேற் பதற்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் திரளாக சென்றனர்.
மேலும் இந்தபேரணிக்கு அழைப்பு விடுத்து திருமாவளவன் உருவப்படம் இடம் பெற்ற போஸ்டர்களை உதய நத்தம் கிராமம் முழுவதும் ஒட்டி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த போஸ்டர் மீது சாணி அடித்து திருமாவளவன் உருவப்படத்தை கிழித்து விட்டனர். இதைக்கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் இன்று காலை அணைக்கரை ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் உதயநத்தம் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், பழுவூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
பின்னர் போஸ்டரை அவமதிப்பு செய்த நபர்களை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் உதயநத்தம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூரில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது அவர் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கினால் மட்டும் போதாது, அது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள், அந்த பொருளின் தர முத்திரை ஆகியவற்றை பார்த்த பிறகே வாங்க வேண்டும். முக்கியமாக வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் ரசீது கேட்டு பெறப்பட வேண்டும்.
பொதுமக்கள் தரம் அறிந்து பொருட்களை வாங்குவதுடன் போலிகளை வாங்கி ஏமாறாமல் இருக்கவேண்டும். விளம்பரங்களை கண்டு ஏமாறக் கூடாது. பரிசுப் பொருட்கள் மற்றும் இலவச இணைப்புக்காக தரமற்ற தேவையற்ற பொருட்களை வாங்கக்கூடாது. எனவே நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்து தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி நமது வீட்டையும் நமது நாட்டையும் காப்போம் என்று உறுதி கொள்வோம் என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) டாக்டர் பிரவீன்குமார், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் பாஸ்கரன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை குறித்து குடும்ப விழா நடந்தது. விழாவிற்கு இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார்.
இதில் சுகாதாரத் துறையின் மூலம் செயல்படும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி மீனாட்சி, முதன்மை ஆலோசகர் கங்கா ஆகியோர் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நோக்கம் மற்றும் பணிகள் பற்றியும், மகளிருக்கான உதவி தொலைபேசி எண் "181" பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக புகார் அளிக்க வந்த புகார்தாரர்களும், பிரச்சினை ஏற்பட்டு சமரசமாகி இணைந்துள்ள கணவன்-மனைவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த பணிகள் மேற்கொண்டதை தொடர்ந்து அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ரத்னா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 2,51,127 ஆண் வாக்காளர்களும், 2,52,612 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,03,746 வாக்காளர்களும் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம்களில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் படிவம் 6-ல் வரப்பெற்ற 6,693 விண்ணப்பங்களில் 6,656 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. படிவம்-7-ல் வரப்பெற்ற 82 விண்ணப்பங்களில் 61 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. படிவம்- 8ஏ-ல் வரப்பெற்ற 515 விண்ணப்பங்களில் 476 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி படிவம்-6-ல் வரப்பெற்ற 6,308 விண்ணப்பங்களில் 6,153 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. படிவம்-7-ல் வரப்பெற்ற 217 விண்ணப்பங்களில் 198 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. படிவம்-8ஏ-ல் பெற்ற 105 விண்ணப்பங்களில் 71 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,28,386 ஆண் வாக்காளர்களும், 1,28,543 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,56,934 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,28,829 ஆண் வாக்காளர்களும், 1,30,530 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,59,073 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் அரியலூர் மாவட்டத்தில் 5,16,296 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, தாசில்தார்கள கண்ணன் (தேர்தல்), குமரய்யா (ஆண்டிமடம்), அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.






